பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (16.07.2018)

பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

கல்வி அமைச்சில் பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்கும் சிலருக்கு தனியார் வகுப்பு ஆசிரியர்களுடன் இருக்கும் தொடர்பின் காரணமாக வினாத்தாளில் உள்ள விடயங்கள் முன்னரே வெளியிடப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சையில் விஷேட சித்தி பெற்ற மாணவர்களின் கல்வி அறிவு மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதாக பல்கலைகழங்களின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரலாறு தொடர்பில் விழிப்புணர்வூட்ட வேலைத்திட்டம்

இந்நாட்டின் வரலாறு தொடர்பில் எதிர்கால தலைமுறைக்கு விழிப்புணர்வூட்டுவது ஊடகங்களின் மிகப் பெரிய கடமை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசினால் இந்நாட்டின் வரலாறு தொடர்பில் விழிப்புணர்வூட்ட எதிர்காலத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருணாகல், போபிட்டிய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இபோச ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் புதிய சீருடை

அடுத்த வருடம் முதல் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஓட்டுனர்களுக்கும் நடத்துனர்களுக்கும் சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தூர சேவை பேருந்துகளின் ஆசனப்பதிவிற்காக உருவாக்கப்பட்ட இணையதள ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று (16) போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

அதனடிப்படையில் இனிமேல் sltb.express.lk என்ற இணையதளத்தின் ஊடாக தூர சேவை பேருந்துகளின் ஆசனப்பதிவை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் 48 மணி நேர நீர் விநியோக தடை

மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களுக்கு நாளை (17) முதல் 48 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை (17) காலை 8 மணி முதல் நாளை மறுநாள் (18) காலை 9 மணி வரை நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மாத்தளை நகரம், ரத்தோட்டை சந்தியில் இருந்து ஏ 9 நெடுஞ்சாலை வரையான பகுதி, அலுவிஹார விகாரையை சுற்றியுள்ள பிரதேசம் மற்றும் பலாபத்வல நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கே இந்த நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வடக்கு பகுதியின் ஊடாக மாத்தளை நகருக்கு நீர் விநியோகத்தை மேற்கொள்ளும் குழாயில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளமையால் இந்த நீர் விநியோக தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment