பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (18.07.2018)

ஆர்பாட்டத்தால் வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக டவுன் ஹோல் பகுதியின் வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல்கலைகழக மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் டவுன் ஹோல் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணங்களும் அத்தியவசிய பொருட்களுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நேற்று (17) மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பதுளை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் மாநாட்டிற்காக ஜனாதிபதி ஜோர்ஜியா பயணம்

திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் 5 ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்ஜியா சென்றுள்ளார்.

நேற்று (17) அதிகாலை ஜோர்ஜியாவின் ஷோட்டா ரஸ்ட்டாவெளி திபிலிசி (Shota Rustaveli Tbilisi) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை, விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் சர்வாசிட்சே (George Sharvashidze) உள்ளிட்ட பிரதிநிதிகள் வரவேற்றனர்.

திறந்த அரசாங்க பங்குடமை 2011 ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் முறையாக தாபிக்கப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டத்தை பாராட்டி அப்பங்குடமையில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் 2015 ஆம் ஆண்டு இலங்கையும் அதில் இணைந்துகொண்டது.

திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் மாநாடு இன்று (18) திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

இலங்கை இவ்வமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள முதலாவது தெற்காசிய நாடாகும். தற்போது உலகில் 75 நாடுகள் திறந்த அரசாங்க பங்குடமையில் உறுப்புரிமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகளுக்கு தடை

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் எதிர்வரும் 31ம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இக் காலப் பகுதியில் மாதிரி வினாக்களை அச்சிடல் மற்றும் அது குறித்து கலந்துரையாடுதல், கருத்தரங்குகளை நடத்துதல், கையேடுகளை விநியோகித்தல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தடை செப்டம்பர் மாதம் 01ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்பதுடன், தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான தடை ஆகஸ்ட் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Comments (0)
Add Comment