பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (18.07.2018)

ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்த நிதியமைச்சர் மங்கள

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரின் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் நிதியமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் சமயத்தில் உரிய அமைச்சர் என்ற வகையில் சாட்சியமளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவால் நேற்று அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட அமைச்சர், அந்த நிறுவனம் ஆரம்பிக்கப்படும் போது விமான சேவைகள் அமைச்சராக இருந்ததன் அடிப்படையில் வாக்குமுலம் வழங்க சென்றதாக கூறினார்.

அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் மனு 31ம் திகதிக்கு ஒத்திவைப்பு

தம்மை கைது செய்வதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் 11 பேர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 31ம் திகதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அங்கவீனமடைந்த பொலிஸ் இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கடந்த 2017ம் ஆண்டு ஓய்வூதிய திணைக்களத்தின் முன்னால் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது ஓய்வூதிய திணைக்களத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து தம்மை கைது செய்ய முற்படுவதாக அந்த அடிப்படை உரிமை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு அந்த மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது, இது சம்பந்தமாக ஆலோசனை பெற்றுக் கொண்டிருப்பதாக அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, மனு எதிர்வரும் 31ம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

குழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்த தந்தை உட்பட நான்கு பேரும் விளக்கமறியலில்

குழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்த சம்பவத்தில் கைதான குழந்தையின் தந்தை உட்பட நான்கு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கமுவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

குழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த நிலையில் குழந்தையின் தந்தை உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த சம்பவம் கடந்த 14 திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1 வருடமும் 1 மாதமுமான வயதுடைய குழந்தைக்கே மதுபானம் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த காணொளி தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பீ.ஜி.எஸ். குணதிலக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரான ஜனக சுகந்ததாச நேற்றுடன் ஓய்வுப் பெற்றுச் சென்றுள்ளதால், குணதிலக சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் கடமையாற்றியுள்ள இவர், வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும், 2016ஆம் ஆண்டிலிருந்து சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் சமர்ப்பிப்பு

பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், அந்த சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.

‘ஈ.டி.ஐ ’ நால்வருக்கு வெளிநாடு செல்லத் தடை

எதிரிசிங்ஹ அறக்கட்டளை முதலீட்டு நிறுவனத்தின் (ஈ.டி.ஐ) பணிப்பாளர்கள் நால்வர், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு, நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை, திகதி குறிப்பிடாமல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்னவின் முன்னிலையில், இன்று (18) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

Comments (0)
Add Comment