பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (19.07.2018)

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு..!!

பெருந்தோட்ட பிரதேச மேம்பாட்டுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம், இந்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நேற்று (18) சமர்ப்பித்தார்.

ரயில் தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகளில் தாமதம்..!!

மலையகத்துக்கான சகல ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பேராதெனிய பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால், மலையகத்துக்கான சகல ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்த தலைவர்கள் கலந்துரையாடல்..!!

இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.

திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் சந்திப்பில் பங்குகொள்வதற்காக ஜோர்ஜியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜோர்ஜிய ஜனாதிபதி ஜோர்ஜி மார்கவெல்ஷிவிலி (Giorgi Margvelashvili) இடையிலான சந்திப்பு நேற்று (18) இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இருநாட்டு அரச தலைவர்களும் நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை புதிய வழிமுறைகள் ஊடாக வலுப்படுத்துவது தொடர்பில் தலைவர்கள் கவனம் செலுத்தியதுடன், இது தொடர்பிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுமார் 4.7 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஜோர்ஜியாவின் பிரதான வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயமாகும். அண்மைக்காலமாக சுற்றுலாத்துறையும் அந்நாட்டு பொருளாதாரத்திற்கு வலுச்சேர்த்து வருகிறது.

இரு நாடுகளுக்கிடையிலான விவசாய மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.

இலங்கையைச் சேர்ந்த பல மாணவர்கள் ஜோர்ஜியாவில் கல்வி கற்று வருவதுடன், அவர்களின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையுடனான உறவுகளை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்கு ஜோர்ஜியா விரும்புவதாக ஜோர்ஜிய ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜோர்ஜிய ஜனாதிபதியால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை தூதுவக் குழுவினர் கலந்துகொண்டனர்.

Comments (0)
Add Comment