பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (21.07.2018)

நீராட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி!!!

வெயங்கொட – தல்கஸ்மொட பகுதியிலுள்ள ஆற்றில் இன்று மதியம் 1.30 மணியளவில் நீராட சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மாணவர்கள் இருவரும் மீட்கப்பட்டு வத்துபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

16 மற்றும் 17 வயது மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பஸ் சில்லில் சிக்கி முதியவர் படுகாயம்!!!

தலவாக்கலையிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் முன்பகுதி சில்லில் சிக்கி 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தலவாக்கலையிலிருந்து ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருகை தந்த குறித்த பஸ், ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்த முற்பட்ட போது குறித்த நபர் பஸ்ஸில் அகப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயணிப்பதற்காக பாதையை கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர் பொகவந்தலாவ லொய்னோன் பகுதியை சேர்ந்த 60 வயதுடையவராவர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருக்கோணமலையில் இருவர் கைது!!!

திருக்கோணமலை – ஈச்சளம்பற்று பகுதியில் ஹெரோயின் என சந்தேகப்படும் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2.69 கிலோ கிராம் போதைப் பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத எத்தனோலுடன் மூன்று பேர் கைது

சட்ட விரோத விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை எத்தனோலுடன் மூன்று சந்தேகநபர்கள் ஜாஎல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலால் திணைக்கள அதிகாரிகளால் நேற்று இரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த எத்தனோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த எத்தனோல் பெரல்கள் இலங்கை சுங்கத்திடம் இருந்து சட்ட ரீதியாக ஏலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அவை அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு அல்லாமல் வேறு பிரதேசத்திற்கு விநியோகத்திற்காக எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போதே கலால் திணைக்களத்தால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கிடைத்த தகவல் ஒன்றின் படி உளவாளி ஒருவரை அனுப்பி இந்த எத்தனோல் பெரல்கள் கைப்பற்றப்பட்டதாக கலால் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

Comments (0)
Add Comment