பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (23.07.2018)

தடைப்பட்டிருந்த புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு

தடைப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் நேற்று (22) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டிருந்தது.

தற்போது புகையிரத பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், புகையிரதங்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம் இன்று

களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (23) இடம்பெறவுள்ளது.

மஹாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக்கட்டமான மொரகஹந்த திட்டத்தின் கீழ், நிர்மாணிக்கப்படும் ஐம்பெரும் நீர்த்தேக்கத்தின் இறுதி நீர்த்தேக்கம் இதுவாகும். இலங்கையில் நீர்ப்பாசன துறையில் சமீப காலத்தில் கட்டப்பட்ட பாரிய நீர்த்தேக்கம் களு கங்கை நீர்த்தேக்கமாகும்.

இதன்மூலம் 84 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்புக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீர்ப்பாசனத்தை வழங்க முடியும்.

சவால்களை வெற்றி கொண்டு பிரச்சினைகளை தீர்த்து ஒன்றாக முன்னேறிச் செல்ல வேண்டும்

சவால்களை வெற்றி கொண்டு அனைவரும் ஒன்றாக பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டிய அவசியத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைந்த போதிலும், 2015 ஆம் ஆண்டின் பின்னரே நட்புறவும் ஒருமைப்பாடும் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனினும் வடபகுதி மக்களுக்கு மேலும் பல பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகளுக்கு என்ன நடக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் தென்பகுதி மக்கள் மத்தியில் எல்ரிரிஈ அமைப்பு மீண்டும் தலைதூக்கி விடும் என்ற அச்சம் காணப்படுகிறது. எனினும் அந்த அமைப்பு மீண்டும் தலைதூக்காது என்பது தமது நம்பிக்கையாகும் என பிரதமர் தெரிவித்தார்.

எல்ரிரிஈ அமைப்பு மீண்டும் தலைதூக்கி இருப்பதாக எடுத்துக் கூற சில பத்திரிகைகள் மேற்கொள்ளும் முயற்சி குறித்தும் பிரதமர் அங்கு சுட்டிக்காட்டினார்.

Comments (0)
Add Comment