பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (24.07.2018)

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 48.81 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

கிராமப்புற சமூகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 48.81 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கான திட்டங்களை நிதி அமைச்சுடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சும் இணைந்தே முன்னெடுக்கவுள்ளன.

கிராமப்புற சமூகத்தின் தேவைகளை அடையாளம் காண்பது மற்றும் அவற்றிற்கு முன்னுரிமை வழங்கி அவற்றுக்கான தீர்வினை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

மேலும், கம்பெரலிய, என்டபிரைஸ் ஶ்ரீலங்கா, வீதி அபிவிருத்தி, சமய வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்தல், வீடமைப்பு, பாடசாலை கட்டமைப்பு, மின்சாரம் வசதி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களுக்கே இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாது விபத்துக்குள்ளான கார்

பாணதுறையில் இருந்து பண்டாரகம நோக்கி அதி வேகமாக பயணித்த கார் ஒன்று, இன்று (24) அதிகாலை 4.30 மணி அளவில் விபத்துக்குள்ளானது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன கார், 6 அடி ஆழமான சிறிய நீரோடை ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் போது 3 இளைஞர்கள் காரின் உள்ளே இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காரின் சாரதியை தவிர ஏனைய 2 பேரும் காயமடைந்த நிலையில் பாணதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் 07 பேர் கைது

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (24) அதிகாலை வடக்கு கடற்படை வீரர்களால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் அலுவலகத்தின் உதவி பணிப்பாளர் எஸ். சிவகரன் கூறினார்.

இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவ விசாரணை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

தனியார் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடனை நிவாரண முறையில் செலுத்த அனுமதி

சிறிய அளவிலான தனியார் நிதி நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு வழங்கியுள்ள கடன், நிவாரண முறையில் செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இதன்கீழ் வரட்சியில் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களின் மக்களின் கடன்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ இதனைக் கூறினார்.

இதேவேளை கம்பெரளிய வேலைத்திட்டத்தை மிகவும் முறையாகவும் செயற்திறனுடனும் பரந்தளவில் செயற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

Comments (0)
Add Comment