பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (25.07.2018)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

லோட்டஸ் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மீதே கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியை கற்கும் மாணவர்களே இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் இன்று (25) நடைபெற்ற கலந்துரையாடல்களை அடுத்து, தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து, தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல்

கோட்டை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க அனுமதி

கிங்தொட்ட மற்றும் அம்பாறை பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்கள் மற்றும் மதவழிபாட்டு நிலையங்களுக்கான நஷ்ட ஈட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (25) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கிங்தொட்ட மற்றும் இவ்வருடம் அம்பாறை பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்கள் மற்றும் மதவழிபாட்டு நிலையங்களுக்கான நஷ்ட ஈட்டை வழங்கவதற்காக இதற்கு முன்னர் இது போன்ற சம்பவங்களுக்காக எவ்வாறு நஷ்ட ஈடு வழங்கப்பட்டதே அந்த முறையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Comments (0)
Add Comment