பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (26.07.2018)

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

மஹவெல, கல்கடுல்ல ஆற்றில் குளிக்க சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கல்கடுவ பாலத்திற்கு அருகில் குளிக்க சென்ற நபர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அகுரம்பட, வெந்தேசியாய பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று (26) நடைபெற உள்ளது.

வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

ஒரு தொகை வல்லப்பட்டைகளை அருகில் வைத்திருந்த நபர் ஒருவர் கடவத்தை 09ம் கட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரிடமிருந்து 10 கிலோவும் 884 கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

37 வயதுடைய றாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக அவர் கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் இன்று மகர நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து இறுதித் தீர்மானம் இல்லை

எதிர்காலத்தில் நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

எதிர்காலத்தில் நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையிலேயே நடத்துவது சம்பந்தமாக இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்தக் கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

மீண்டும் எதிர்வரும் புதன்கிழமை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.

வெலிக்கடை கைதிகளுக்கு ஒரு விசேட அறிவித்தல்

கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை (sim) தம்வசம் வைத்திருக்கும் கைதிகள் அவற்றை உடனடியாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலையில் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைக்குள் கைதிகள் அடிக்கடி நடமாடும் பிரதேசங்களில் இந்த அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சிறைக்கூடங்களுக்குள் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்பதாக கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்படுமெனவும், அவ்வாறு கையளிக்காத கைதிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தும் கைதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சு ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

’கொழும்பில் நா​ளை மின்சார தடை’

மின் கட்டமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பில் உள்ள சில பிரதேசங்களில் நாளைய தினம் (27), காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரையிலும் மின்சார தடை ஏற்படுமென, மின்சார சபை மற்றும் மின் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பகுதிகளில் மின்சார தடை ஏற்படுமென, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அப்பகுதிகளில் இம்மாதம் எதிர்வரும் 31 ஆம் திகதி, திடீர் மின்சார தடை ஏற்படலாமெனவும் அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment