பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (26.07.2018)

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை..!!

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

2014ம் ஆண்டு முதல் இன்று வரை சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் 174 படகுகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் 50 படகுகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டதாக இந்தி ஊடகங்கள் கூறுகின்றன.

அதன்படி எதிர்வரும் தினங்களில் அந்த படகுகள் அனைத்தும் விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், கரைக்கல் மற்றும் தஞ்சாவூர் பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி படகுகளே அதிகமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புகையிரத தொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தம்

புகையிரத தொழிற்சங்கங்கள் சில தற்போது முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு திடீர் வேலை நிறுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் புகையிரத போக்குவரத்துக்கள் சில பாதிப்படைந்துள்ளன.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள்,நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன.

பிரதியமைச்சர் ஒருவர் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் வேலி கட்ட முற்படுவதற்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத செயற்பாட்டு அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன கூறினார்.

சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டம்

இலங்கையில் சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ரத்மலான, மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்களை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment