பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (30.07.2018)

இலஞ்சம் வழங்க முற்பட்ட சீன நாட்டவர் கைது

அங்குணுகொலபெஸ்ஸ மகாவலி பிரதேச அலுவலகத்தின் முகாமையாளருக்கு 20,000 ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட சீன நாட்டவர் ஒருவரை குறித்த அதிகாரிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று (30) காலை கல்குவாரி ஒன்றிற்கு அனுமதி பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் வழங்க முற்பட்ட போது குறித்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் அங்குணுகொலபெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அங்குணுகொலபெஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிணையில் விடுதலை

இளைஞர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹொரண நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுங்க அதிகாரிகள்

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குவைட் நாட்டு தம்பதிகளால் சுங்க அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சுங்க திணைக்களத்தின் இறக்குமதி விநியோக பகுதி நடைவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் லால் வீரகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை விமான சேவைக்கு புதிதாக A-321neo விமானம்

இலங்கை விமான சேவையில், புதிதாக சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு இன்று (30), புதிய விமானம் ஒன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து, எயார் பஸ் நிறுவனத்தின், ​ஜேர்மன் ஹெம்பர்க் தொழிற்சாலையினால் உற்பத்தி செய்யப்பட்ட, A-321neo ரக விமானமே இவ்வாறு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் காற்று எதிர்ப்பைக் குறைத்து பறக்கக்கூடிய வகையில் புதிய நிர்மாணிப்பதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் நீளம் 146 அடியும், இறக்கைகள் 117.5 அடியையும் கொண்டுள்ளதுடன், உயரம் 37.7 அடியென தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 176 பயணிகளும், 6 விமான சேவை பணியாளர்களும் இதில் பயணம் செய்யக்கூடியவாறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த விமானம் நேற்று (29), கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த விமானத்தை, சுமார் 3 மணித்தியாலங்களில் பயணம் செய்யக்கூடிய சீனா, டுபாய் போற்ற நாடுகளுக்கு பயணம் செய்வதற்காக பயன்படுத்த உள்ளதாக, இலங்கை விமான சேவைகள் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரரா தெரிவித்துள்ளார்.

மங்களவுக்கு எதிராக பந்துல மனு

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் பொய்யான தகவல்களை உள்ளடக்கி, நிதி மோசடி செய்ததாக குற்றம்சாட்டி பத்திரிகை விளம்பரம் வெளியிட்டமை தொடர்பில், தற்போதைய நிதி அமைச்சுக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றித்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதோடு, நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்ததாகவும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைமாற்றம் தொடர்பில் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பொய்யான தகவல்கள், பொது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் பந்துல குணவர்தன அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment