பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (31.07.2018)

25 வகை மருந்துகளுக்கான விலை குறைப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் 25 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புற்று நோய்க்கான 10 வகையான மருந்துகள் மற்றும் 15 வகையான விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மாணவர்கள் 18 பேருக்கு ஹிந்தி மொழியை கற்க இந்தியாவில் புலமைபரிசில்

இலங்கை மாணவர்கள் 18 பேருக்கு ஹிந்தி மொழியை கற்பதற்கான புலமைபரிசில்களை இந்திய அரசு வழங்கியுள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 18 மாணவர்களுக்கான பயணச் செலவு, கல்விக் கட்டணம் மற்றும் ஒரு வருடத்திற்கான உணவுச் செலவு என்பன இந்த புலமைபரிசிலில் வழங்கப்படுகிறது.

ஆக்ராவில் அமைந்துள்ள கேந்திரியா ஹிந்தி சன்ஸ்தான் கல்வி நிறுவனத்திலேயே குறித்த மாணவர்கள் தமது ஹிந்தி மொழிக்கான புலமைபரிசிலை தொடரவுள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் எச்.ஈ. தரஞ்சித் சிங் சந்து, குறித்த மாணவர்கள் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன்னர் சந்தித்து அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

குறித்த மாணவர்கள் கண்டி, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைகளின் போது கண்டெடுத்த டீ 56 ரக துப்பாக்கிகள் 25 தொடர்பில் அரச இரசாயண பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை கேட்டுள்ள போதிலும் அந்த அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை செய்யப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

மன்றில் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு அமைவாக சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்த நீதிபதி, அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை மன்றில் சமர்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

பிரதமரின் தலையீட்டால் சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் சிக்கல்

தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைபடுத்தும் போது பிரதமரின் தலையீடுகள் காணப்படுவதாக, நீதியான சமூகம் ஒன்றுக்கான அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பான விசாரணைகளில் பிரதமரின் தலையீடு உள்ளதால், அது மந்தகதியில் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மக்கள் சக்தி அமைப்பினரில் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே, பேராசிரியர் விஜயசூரிய இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இடமாற்றக் கொள்கை கல்விச் சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும்

அரச பணியாளர்களுக்கான இடமாற்றக் கொள்கை கல்விச் சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஒரு சில குழுக்கள் பாடசாலை சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல முனைவதாக குளியாப்பிட்டி கிரிந்தவ மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து வருடமே. அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறே பாடசாலைகளில் நீண்டகாலம் பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வது கட்டாயமானது.

இது அதிபர்களுக்கும் பொருந்தும். ஒரு அதிபர் சிறந்தவராக இருக்கும் பட்சத்தில் அவரது சேவை மற்றுமொரு பாடசாலைக்குத் தேவைப்படலாம். இதனை உணர்ந்து கொள்வது அவசியம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் நலன்கருதி நல்ல வேலைகளை செய்யும் போது, அவற்றுக்கு முட்டுக்கட்டை போடுவது நல்லதல்ல. மாறாக அரசாங்கம் தனது காரியத்தை செவ்வனே நிறைவேற்ற இடமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்.

Comments (0)
Add Comment