பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (01.08.2018)

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை நீடிப்பு

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதன் மூலம் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நிறைவடையவிருந்த காலத்தை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு 2018 ஜளவரி மாதம் 31 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிப்பு

நேற்று (31) நள்ளிரவு முதல் சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகரகம நகர சபை உறுப்பினர்கள் சிலருக்கு எதிரான மனு மீளப் பெறப்பட்டது

மகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெறப்பட்டுள்ளது.

மகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரும் அந்த நகர சபை பிரிவுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்றும், திவுலபிட்டிய, படல்கம மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த அவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் படி மகரகம நகர சபையின் உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மகரகம நகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மத்தலயில் தரையிறங்கியது

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ் ஏஎன்-124 ரஸ்லன் (Antonov An-124 Ruslan) மத்தல விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.

எரிபொருள் மீள்நிரப்புவதற்காகவும், விமான ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் குறித்த விமானம் மத்தலயில் தரையிறங்கியதாக விமானநிலைய முகாமையாளர் உபாலி கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு விமானம் இலங்கைக்கு வருகைத்தருவது இதுவே முதற்தடவை எனத் தெரிவித்துள்ள அவர், இந்தோனேசியாவில் இருந்து நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த விமானம் இன்று பிற்பகல் 1.30 அளவில் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment