பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (01.08.2018)

மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை

அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமாக வேறு ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபத்தை நேற்று (31) நிதி அமைச்சு வெளியிட்டிருந்தது.

இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், நிதிப் பிரிவின் தலைவர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்று சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த அலுவல்கள் ஆணையாளர் இராஜினாமா

பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நிமல் கொட்டவிலகெதர தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை புத்த சாசன அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளதாக அவர் அத தெரணவிடம் கூறினார்.

நிமல் கொட்டவிலகெதர தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 30ம் திகதி ஒப்படைத்துள்ளதுடன், அவர் தற்போது சமூர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு உடனடி இடமாற்றம்

சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான கடிதம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.ஆர். அதிகாரியினால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முறையான நிலைக்கு கொண்டு வருவதற்கும் அதிகாரிகளின் செயல்திறன் நிலமையை கருத்திற் கொண்டும் சிறைச்சாலை திணைக்களத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் நோக்கிலும் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மகரகம நகர சபை உறுப்பினர்கள் சிலருக்கு எதிரான மனு மீளப் பெறப்பட்டது

மகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெறப்பட்டுள்ளது.

மகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரும் அந்த நகர சபை பிரிவுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்றும், திவுலபிட்டிய, படல்கம மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த அவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் படி மகரகம நகர சபையின் உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மகரகம நகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

Comments (0)
Add Comment