பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (02.08.2018)

கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணி இன்று

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள ஜனபல சேனா எதிர்ப்பு பேரணி மற்றும் கூட்டம் இன்று இடம்பெற உள்ளது.

இன்று பகல் 02.00 மணியளவில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்துக்கு அருகில் எதிர்ப்பு பேரணி இடம்பெற உள்ளதுடன், 03 மணியளவில் விகாரமகாதேவி பூங்காவில் எதிர்ப்பு கூட்டம் இடம்பெற உள்ளது.

“நாட்டை அழிக்கும், நாட்டை காட்டிக் கொடுக்கும் செயல்திறனற்ற அரசாங்கத்தை விரட்டுவோம்” என்ற தொனிப் பொருளில் இந்த எதிர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி

இம்முறை 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி நாடு பூராகவும் உள்ள 3050 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை இப்பரீட்சைக்காக 355,326 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

முதலாவது பரீட்சை வினாத்தாள் காலை 9.30 மணி முதல் 45 நிமிடங்கள் நடைபெற உள்ளதுடன் இரண்டாவது பரீட்சை வினாத்தாள் 10.45 மணி முதல் ஒரு மணித்தியாளயமும் 15 நிமிடங்களும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பரீட்சார்த்திகள் நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருமாறும் காலை 9 மணியாகும் போது ஆசனங்களில் அமர்ந்து கொள்ளுமாறும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பரீட்சார்த்திகளும் தங்களுடைய பரீட்சை இலக்கங்களை சீருடையின் இடது பக்கத்தில் பதிந்து கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெற்றோர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘நல்லாட்சி் அரசாங்கம் நாட்டை இராணுவ மயமாக்குகிறது’

நல்லாட்சி அரசங்கம், நாட்டை இராணுவ மயமாக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கை அமுல்படுத்தில் நல்லாட்சி அரசாங்கம் தோல்விக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை இராணுவத்தினருக்கு தற்போதைய அரசாங்கம் கையளித்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்டறிதல் மற்றும் மனித கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை இராணுவத்தினர் செய்துவருவது ஆச்சரியமளிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலேயே அதிக ​போதை விற்பனை

இலங்கையில் அதிகமாக போதை விற்பனை இடம்பெறுவது கொழும்பு 1- 15 வரையான பிரதேசங்களிலேயே என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், கம்பஹா மாவட்டம் இரண்டாமிடத்திலும், குருநாகல் மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டுக்குள் 50,000 இற்கு அதிகமானோர் போதைக்கு அடிமையாகியுள்ளனரெனவும், இவர்களால் வருடாந்தம் 1000 கிலோவுக்கு அதிகமாக போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

போதைப் பொருளை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், புதிதாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் போதைப் பொருட்கள் குறித்து பொலிஸாரைத் தெளிவுப்படுத்தி சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment