பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (06.08.2018)

கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக மீண்டும் அநுர

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீ.கே.ஏ அநுர கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுனரினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை பிற்போடுவது ஜனநாயக்கத்திற்கு உகந்ததல்ல

தொடர்ந்து தேர்தலை பிற்போடுவது நாட்டின் ஜனநாயக்கத்திற்கு உகந்ததல்ல என வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கும் உரிமையை கட்டாயம் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல் பீரிஸ் அஸ்கிரி விகாரைக்கு சென்ற போதே வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் விபத்தில் சிக்கி பலி

கடந்த 24 மணிநேரத்தில் சில பிரதேசங்களிலிருந்து 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மூன்று பேர் நீராடச் சென்று, நீரில் மூழ்கி இறந்துள்ளதுடன், ஆறு பேர் மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊறுபொக்க – மெக்கிலியதென்ன – தித்தெனிய பிரதேசத்தைச் சே​ர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய சகோதரர்கள் இருவர், நேற்றைய தினம் (05) கடலில் நீராடச் சென்றதில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் அம்பலாந்தோட்டை – மாமடல பிரதேசத்தில் நீராடச் சென்றதில், இரண்டு பிள்ளைகள் உட்பட நபரொருவரும் உயிரிழந்துள்ளார்.

​​​​மேலும் எம்பிலிப்பிட்டி, கிரிஉல்ல, யட்டியன்தொட்டை, மீகஹதென்ன, தந்திரிமலை மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களில், மோட்டார் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (06) காலை, யாழ்ப்பாணம் – பளை பிரதேசத்தில் இடம்பெற்ற லொறி மற்றும் வான் விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதனை தொடர்ந்து, அம்பலங்கொடை ரயில் நிலையத்துக்கருகாமையில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியொருவர், ரயிலில் ​​மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் (05) உயிரிழந்துள்ளார்.

’பகடிவதையா? உடன் அழையுங்கள் அல்லது வந்து முறையிடுங்கள்’

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்க்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகடிவதை மற்றும் ஏனைய வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பகடிவதைகள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காகவு, புதிதாக அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதோடு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விசேட அலுவலகமொன்றும் நிறுவப்பட்டுள்ளது.

அதற்கமைய, 24 மணிநேரமும் தொழிற்படவுள்ள இந்த 011-2123700 தொலைபேசி இலக்கத்துக்கு, நாடு முழுவதிலுமிருந்தும் அழைப்புகளை ஏற்படுத்தி, பகடிவதைகள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியுமென்றும் அதன் பின்னர், அந்த முறைப்பாடுகள் தொடர்பில், உடனடியாகப் பல்கலைக்கழக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி, அவர்களூடாக, பிரதேச பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் அமைக்கப்பட்டுள்ள விசேட அலுவலகமானது, அரச விடுமுறை தினங்களைத் தவிர்ந்த ஏனைய தினங்களில், காலை 8.30 முதல் பிற்பகல் 4.00 மணிவரை திறந்திருக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment