பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (10.08.2018)

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 ரூபா அறவிடப்படும்..!!

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் போது 100 ரூபா அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 100 ரூபா அறவிடப்பட உள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வௌியிடப்பட்டுள்ளது.

இன்று மாலை புகையிரத சேவையில் முன்னேற்றம் ஏற்படலாம்

தற்போது புகையிரதங்கள் சில கொழும்பு கோட்டையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்று மாலையாகும் போது புகையிரத சேவையில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமைாளர் விஜய சமரசிங்க கூறினார்.

சிலாபம் நோக்கிய புகையிரத மார்க்கத்தில் இரண்டு புகையிரதங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டதாகவும், அதில் ஒன்று தற்போது கொழும்புக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுதவிர கண்டி, மஹவ, ரம்புக்கனை, மாத்தறை, காலி, அநுராதபுரம் மற்றும் அவிஸ்ஸாவளை ஆகிய புகையிரத நிலையங்களில் இருந்து ஒவ்வொரு புகையிரதங்கள் கொழும்புக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இன்று மாலை புகையிரதங்களின் அளவை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் இன்றைய காலநிலை விபரம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைப் பிரதேசங்களிலும் மற்றும் தென் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம்

காமினி செனரத்தை விசேட நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி, காமினி சேதர செனரத் உள்ளிட்ட நால்வருக்கு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (10), நோட்டீஸ் விடுத்துள்ள அதேவேளை, விசேட நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை ரீஜன்சி ஹொட்டல் நிர்மாணப் பணிகளின் போது, 4 மில்லியன் ரூபாயை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே, இவ்வாறு நோட்டீர் விடுக்கப்பட்டுள்ளது.

காமினி செனரத், பியதாஸ குடாபாலகே, நில் பண்டார ஹபுஹின்ன மற்றும் லசந்த பண்டார ஆகியோருக்கே இவ்வாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன், வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று காலை (10), கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, 8,450 ​​போலி அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாலைத்தீவைச் சேர்ந்த, 49 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment