பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (13.08.2018)

எதிர்க்கட்சி என கூறுபவர்கள் எதிர்க்கட்சியினர் இல்லை..!!

தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என கூறுபவர்கள் எதிர்க்கட்சியினர் இல்லை எனவும் அவர்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் உரிமைக்காக அரசாங்கம் மிகவும் மும்முரமான முறையில் முன்னிற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தெரியவருவது, அரசாங்கத்தின் தேவைக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக தற்போதைய எதிர்கட்சி கருதப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

’சிறைக்கைதிகளை சுட்டுக்கொல்லமாட்டோம்’

சிறைக்கைதிகளின் பிரச்சினைகளை பொறுமையாக அணுகி தீர்வை பெற்றுகொடுக்கவுள்ளதாக தெரிவிக்கும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல “சிறைக்கைதிகளை சுட்டுக்கொல்லபோவதில்லை” என்றார்.

இத்தினபுரியில், புதிய நீதிமன்ற கட்டடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று (13) கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “இந்த நாட்டில் சகலருக்கும் சுதந்திரமாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்கார்களை நாம் சுட்டுக்கொல்லபோவதும் இல்லை. அதேநேரம் அவர்களின் தேவைக்காக எமது தீர்மானங்களை மாற்றிக்கொள்ள முடியாது” என்றார்.

நாளை இறுதி தீர்மானம் என்கிறது ஒன்றிணைந்த எதிரணி

ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன குழுவாக இயங்குவது குறித்து, இறுதி தீர்மானம் ஒன்றை நாளை எடுக்கவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நாளை ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் சந்தித்து, இது தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்துக்கு வரவுள்ளதாக, அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, வாசுதேவ நாணயக்கார, ரோஹித அபேகுணவர்தன மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இதனை கூட்டாக தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ​வெவ்வேறான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸை விட்டோடிய சில்லு

பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ்ஸொன்றின் முன் சில்லொன்று, பஸ்ஸை விட்டுவிட்டு, தனியாக கழன்று ஓடிய சம்பவமொன்று மீகொட உடகேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதென ​மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸிலிருந்து கழன்று ஓடிய, அந்த சில்லு, பஸ்ஸின் வலதுபுறமாக வீசுபட்டு, மிகவேகமாக உருண்டோடி, வீதிக்கருகிலிருந்த தனியார் நிறுவனமொன்றின் படலையில் மோதியுள்ளது. இதனால், அந்த படலையும் கழன்று விழுந்துள்ளது. எனினும், இதனால், யாருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை.

ஹோமாகம டிப்போவுக்குச் சொந்தமான மேற்படி பஸ், இங்கிரிய நகரிலிருந்து காலை 6 மணியளவில் புறப்பட்டு, புறக்கோட்டை நோக்கி பயணிக்கும்.

அவ்வாறு பயணித்துகொண்டிருந்த போது, மீகொட வட்டரெக்க பிரதேசத்தில் வைத்து, பஸ்ஸில் ஏதோவொரு மாற்றம் ஏற்பட்டுள்ளமை பஸ்ஸின் சாரதிக்கு தென்பட்டுள்ளது.

அதுதொடர்பில், பஸ்ஸின் நடத்துனருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், பஸ்ஸில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை உடனடியாக கண்டுகொள்ள முடியாமல் போனமையால், வேகத்தை குறைத்தே பயணித்துள்ளார். இதனால், ஏற்பட​விருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

Comments (0)
Add Comment