பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (20.08.2018)

எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்

எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வேறுபாடுகள் இருப்பின் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் ஜப்பான் மற்றும் இலங்கை நாணயங்களுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் கடந்திருப்பினும் இறந்த காலத்தை உற்று நோக்கும் போது நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் இனங்களுக்கும் பல்வேறு குழுக்களுக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடுகளால் பயங்கரமான யுத்தத்தை சந்திக்க நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இறந்த காலத்தை உற்று நோக்கி அப்போது ஏற்பட்ட தவறுகளை இனங்கண்டு எதிர்கால சந்ததியினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேர இந்தியா மற்றும் இலங்கைக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

நாளை (21) இலங்கை வர உள்ள அவர் இதன்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆய்வு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை விஜயம் செய்யும் முதல் தடவை இதுவாகும்.

இலங்கையில் சீனாவின் தலையீடு தொடர்பில் ஜப்பானும் அவதானமாக இருக்கின்றது.

முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஒன்றை நிறுவ திட்டம்

முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கான வரைவு தீர்வுத் திட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி கலாச்சரத்தை எப்போதும் அரசாங்கத்தினால் மாற்ற முடியாது எனவும் அதற்கான ஒரு வரையரையை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான பாரிய வேலைத்திட்டம் ஒன்று போக்குவரத்து ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி நோக்கி செல்ல விஷேட புகையிரதங்கள்

கண்டி தலதா மாளிகையில் நடைபெற உள்ள எசல நிகழ்வை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகளை முன்னெடுக்க இலங்கை புகையிரத சேவைகள் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி செல்வதற்காக விஷேட புகையிரத சேவைகள் சில முன்னெடுகப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் காலை 9.50 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி புகையிரதம் ஒன்று பயணிக்கவுள்ளதுடன் அது மதியம் 1.15 மணியளவில் கண்டியை சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கண்டியில் இருந்து காலை 11.45 இற்கு கொழும்பிற்கும் நாவலபிட்டியவிற்கும் இரு புகையிரதங்கள் பயணிக்கவுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 7.05 இற்கும் கண்டியில் இருந்து இரவு 7 மணிக்கும் இரு புகையிரதங்கள் பயணிக்கவுள்ளதாக இலங்கை புகையிரத சேவைகள் தெரிவித்துள்ளது.

வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

புடவைக்கட்டு மீனவர்களால் மீன்கள் டைனமைட் பாவித்து பிடிக்கப்பட்டது என விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் மீன்களுடன் லொரியும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தமது மீன்கள் அவ்வாறு பிடிக்கப்படவில்லை எனவும் வேண்டும் என்றே இது திட்டமிடப்பட்ட சதி எனவும் கூறி இன்று (20) காலை திருகோணமலை புல்மோட்டை வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரச்சினை அறிந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், அப்பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், குச்சவெளி பிரதேசத்திற்கான பொலிஸ் அத்தியட்சகர், குச்சவெளி பொலிஸ் தலைமை அதிகாரி, திருகோணமலை மாவட்ட மீன்பிடி உதவி பணிப்பாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் வாரம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீன்பிடி திணைக்கள பணிப்பாளர், அரசியல் பிரமுகர்கள், புல்மோட்டை, குச்சவெளி, புடவைக்கட்டு, சலப்பையாறு, இரக்கண்டி, நிலாவெளி மீன்பிடி சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் கூட்டம் இடம்பெற உள்ளது.

அதன் போது வதந்திகளை பரப்பி மீன்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை குறித்து எதிர்வரும் வாரம் வரை பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றும் புடவைக்கட்டு பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment