பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (21.09.2018)

லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.

ஊடாகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலே் சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனது குறித்து வாக்குமூலம் பெற குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த அவர், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

பிரகீத் எக்னெலிகொட ராஜகிரிய பகுதியில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போனார்.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வேண்டுகோள்

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமல் இருந்தால் உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள 3இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களில் சுமார் 3 இலட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபா 170.65 ஆக வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 170.65 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment