பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!!(02.12.2018)

இன்று இரவிலிருந்து மழை வீழ்ச்சியில் சிறிது அதிகரிப்பு

நாட்டில் காணப்படும் மழை நிலைமையில் இன்று இரவிலிருந்து சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து கொழும்பு ஊடாக நீர்கொழும்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக்கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும்காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பழச்சாறு தயாரிப்புக்கான சீனியின் வரி குறைப்பு

பழச்சாறு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சதமாகக் குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பழச்சாறு மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கம் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றபோதே வரியை குறைப்பதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனைத் தவிர, இரசாயன சுவையூட்டிகளுக்காக 6 கிராம் வரை மற்றும் பழச்சாறு வகைகளுக்காக 9 கிராம் வரையும் வரியை குறைக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Comments (0)
Add Comment