;
Athirady Tamil News

மோகன்லாலின் பரிதாபகரமான நிலை..!!

0

சுவாரசியமான காரணங்களால் செய்தியில் இடம்பிடிக்கும் நடிகர்களில் மோகன்லால் முக்கியமானவர். இப்போதும் அப்படித்தான் சிக்கியிருக்கிறார். அதிலும், இவர் மைக்கும், கையுமாக சிக்கியிருப்பது ‘திடீர்’ பாடகர்களாக மேடையில் தோன்றும் சிலரது பின்னணி எப்படி என்பதையும் தெரியவைத்திருக்கிறது. டி.எம்.சௌந்தரராஜன் இசை நிகழ்ச்சிகளில் பாடும்போது, எம்.ஜி.ஆர் ரசிகர்கள் “அச்சு அசல் தலைவர் மாதிரியே பாடுறாரே. குரல் மாத்தி பாடுறதுல பெரிய ஆளா இருப்பாரு போல” என்பார்களாம். அதுபோலவே, ‘ வாயைத் திறக்காமலே பாடுறது என் தலைவருக்கு மட்டுமே இருக்கும் சக்தி’ என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது ஏன் எனப் பார்ப்போம்.

மோகன்லால் எப்படி அவரது நடிப்பில் தனித்துவமான நிலையைப் பெற்றிருக்கிறாரோ, அதுபோலவே கேரள சினிமாவில் பாடல் பாடுவதிலும் தனியானவர். இசைக் குழு வைத்துக்கொண்டு பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிகளைத் தவறாமல் கண்டு மனம் இன்புறுவார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மனம் புண்பட்டுச் சென்றனர் அந்த ரசிகர்கள்.

மோகன்லாலும், நடிகை பிரக்யா மார்ட்டினும் புகழ்பெற்ற ‘சந்திரிகயில் அலியுன்னே சந்திரகாந்தம்’ பாடலை சிட்னி இசை நிகழ்ச்சியில் பாடத் தயாராகிக்கொண்டிருந்தனர். தொடக்கத்தில் வரும் இசை முடிந்து, பல்லவி தொடங்கியது. பிரக்யா மார்ட்டின் அற்புதமாக பாடினார். அடுத்து மோகன்லாலின் முறை. அவரும் பல்லவியை நன்றாகவே பாடினார். மீண்டும் ஒருமுறை பல்லவி ஒலித்து முடித்து, சரணம் தொடங்க வேண்டிய சமயத்தில் பிரக்யாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார் மோகன்லால். மைக் சாதாரணமாக கையில் ஏந்தப்பட்டிருந்தது. மோகன்லாலில் இதழ்கள் அசையவில்லை. ஆனால், அவரது குரலில் சரணம் தொடங்கிக்கொண்டிருந்தது. ஒரு நொடியில் சுதாரித்த மோகன்லால், சட்டென மைக்கை வாய் அருகே கொண்டு சென்றுவிட்டார்.

கவனக்குறைவினால் சங்கடமான நிலையில் மாட்டிக்கொண்டாலும், தலையை அசைத்து பாடுவது போல மோகன்லால் பெர்பாமன்ஸ் செய்தார். அதற்கு கையிலேயே பிரக்யா மார்ட்டின் மெட்டு தட்டிக்கொண்டிருந்த அழகைப் பார்த்த போது, ஒரு வசனம் தான் நியாபகம் வந்தது. அவுக ஆடுறதையும்; இவுக வாசிக்கிறதையும் பாக்கும்போது…

பின்னால் ஒலித்தது மோகன்லால் குரல் தான் என்றாலும், ஏற்கனவே பாடிவைத்து இசை நிகழ்ச்சிகளில் வாயசைப்பதும் ஒரு ஏமாற்று வேலை தான். சில கச்சேரிகளில் இப்படி நடைபெறுவதால்தான், மிகப்பெரிய ஜாம்பாவான்களின் இசை நிகழ்ச்சிகளில் இடையிடையே ஒரு உரையாடலை வைத்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அத்தனை உண்மைத்தன்மையுடன் நிகழ்த்துகிறார்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + two =

*