;
Athirady Tamil News

என்ன செய்யப் போகிறார் மைத்திரி? (கட்டுரை)

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான அண்மைக்கால விமர்சனங்களின் அதிகரிப்பு, அவரைக் குறைத்து எடைபோட்டு விட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. நீண்டகால நோக்கில் பார்க்கும் போது, தனது நீண்டகால அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் விதமான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறாரோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஜனாதிபதியின் அண்மைக்கால நடவடிக்கைகள், கடுமையான விமர்சனங்களை – குறிப்பாக, படித்த, நகரவாசிகள் மத்தியில் – ஏற்படுத்தியிருந்தமைக்கு, எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்யாமை, முக்கியமான காரணமாக அமைந்தது.

இதில் முக்கியமாக, “நான் 6 ஆண்டுகள் பதவி வகிப்பதற்கு, அரசமைப்பில் ஏதேனும் தடைகள் காணப்படுகின்றனவா?” என, உயர்நீதிமன்றத்திடம் அவர் கேட்டமை, தனது ஆட்சியை நீட்டித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்ற விம்பத்தை வழங்கியிருந்தது. அது, உண்மையானதும் கூட. அத்தோடு, அவரது ஆட்சி நிறைவடைவதற்கு இன்னமும் 2 ஆண்டுகள் காணப்படும் நிலையில், இப்போது அக்கருத்தைக் கேட்டமை, அரசியல் ரீதியான தற்கொலை போன்றது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், ஜனாதிபதியால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, எல்லாவற்றையும் அவர் திட்டமிட்டு மேற்கொள்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

அவற்றைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட போது, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்த கருத்தை, ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

“ஐக்கிய தேசியக் கட்சியையும் மஹிந்த ராஜபக்‌ஷ பிரிவினரையும் இல்லாது செய்தால், தனது ஆட்சியை நீட்டித்துக் கொள்ளலாம் என, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகளில் தான் ஜனாதிபதி ஈடுபடுகிறார்” என்பது தான், அவரது குற்றச்சாட்டாக இருந்தது.

அவரது இக்கருத்துக்கு, ஏதாவது ஆதாரம் வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், இராஜாங்க அமைச்சரொருவர், இப்படியானதொரு குற்றச்சாட்டை, ஆகக்குறைந்த அடிப்படைகளின்றி முன்வைத்திருப்பாரா என்பது கேள்விக்குறியே.

இப்போது, நடப்புக் காலத்துக்கு வந்தால், பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, டிசெம்பர் 30ஆம் திகதி, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. பாரதூரமான மோசடிகள், ஊழல், அதிகார, அரச வளங்கள், சிறப்புரிமைகள் ஆகியவற்றைத் துஷ்பிரயோகம் செய்தல் ஆகியன தொடர்பாகப் புலனாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இம்மாதம் 2ஆம் திகதி, அதாவது 3 நாட்களின் பின்னர் வழங்கப்பட்டது.

இரண்டு ஆணைக்குழுக்களுமே, சுயாதீனமான ஆணைக்குழுக்களாக இருந்தாலும், பிணைமுறி ஆணைக்குழு என்பது, ஐக்கிய தேசியக் கட்சியின் மீது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகவும், பாரதூரமான மோசடிகள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது.

சுஜீவ சேனசிங்கவின் எதிர்பார்ப்பின்படி, இரண்டு அறிக்கைகளையும், தனது அரசியல் நோக்கத்துக்காக ஜனாதிபதி பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால், பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை மாத்திரமே, அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் ஒன்றாக இருந்தது. இந்த இரண்டு அறிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆற்றிய உரையில், பிணைமுறி ஆணைக்குழுவே முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அவரது உரையின் ஆங்கில வடிவத்தில், ஆணைக்குழுக்கள் பற்றி, 2,010 சொற்கள் காணப்பட்டன. அவற்றுள் 367 சொற்கள் மாத்திரமே, பாரதூரமான மோசடிகள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகக் காணப்பட்டது. அதாவது, ஜனாதிபதியின் உரையின் 81.7 சதவீதமான பகுதி, பிணைமுறி ஆணைக்குழு தொடர்பாகவே கவனஞ்செலுத்தியது.

அதற்கு, இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருந்தாலும், தேர்தல் நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அதிக ஆதரவு காணப்படும் கிராமப்புறப் பகுதிகளில், தேவையில்லாமல் பிரச்சினைகளையோ அல்லது ஆதரவு இழப்புகளையோ ஏற்படுத்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பாமலிருக்கலாம் என்பது, அக்காரணமாக இருந்தது.

இவ்வாறு, பிணைமுறி ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்களை அதிகரித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அல்லது அக்கட்சியை விமர்சனம் செய்கின்ற சூழலை ஏற்படுத்திவிட்டு, தன்னைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி ஈடுபட்டார்.

அதிலொன்று தான், தனது ஆட்சிக்காலம் தொடர்பாக அவருக்கு எழுந்த “சந்தேகம்”. அடுத்ததாக, நாட்டின் பொருளாதாரத்தை, தானே கையிலெடுக்கப் போவதாக வெளியிட்ட அவரது அறிவிப்பு. தேசிய பொருளாதாரச் சபையில், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ள நிலையில், தான்தோன்றித்தனமாக, அச்சபையைத் தானே வழிநடத்த முடியாது என்பது, ஜனாதிபதிக்குத் தெரியாமலில்லை.

ஆனால், “உச்சபட்ச அதிகாரத்துடன் நான் தான் இருக்கிறேன். இவ்வளவு காலமும் ஐ.தே.கவுக்கு வழிவிட்டேன், அவர்கள் சரியாகச் செய்யவில்லை. இனிமேல், நான் செய்யப் போகிறேன்” என்பது, பாமர மக்களைக் கவரக்கூடிய கருத்தாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

அதேபோல் தான், கிராமப்புற மக்களைக் கவரும் விதமாக, மதுபானம் வாங்குவதற்குப் பெண்களுக்குக் காணப்பட்ட தடையை இல்லாது செய்த வர்த்தமானி அறிவித்தலை, இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி அறிவித்தமையும் இதற்குள் தான் இருக்கிறது.

அவரது மேற்படி நடவடிக்கைகள் அனைத்தும், ஒரு தரப்பினரிடத்தில் வரவேற்பையும், மறுதரப்பினரிடத்தில் எதிர்ப்பையும் கொண்டு சேர்த்திருந்தன. ஆனால், இதுவும் திட்டமிடப்பட்ட கணிப்பாகவே காணப்படுகிறது.

ஏனென்றால், இந்த எதிர்ப்புகள் அனைத்தும் அதிகரித்துக் கொண்டிருந்த தருணத்தில் தான், பாரதூரமான மோசடிகள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது. நன்றாகக் கவனித்துப் பார்த்தால், பிணைமுறி ஆணைக்குழு, இம்மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அது வெளியிடப்பட்டு 6 நாட்களின் பின்னர், 23ஆம் திகதியே, பாரதூரமான மோசடிகள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது. இரு தரப்பினரும், இவ்வறிக்கைகள் காரணமாகப் பாதிக்கப்பட வேண்டும் என்று, திட்டமிட்டே இந்த இடைவெளி விடப்பட்டிருக்கிறது எனச் சந்தேகிப்பதற்கு, முழுமையான காரணங்களும் இருக்கின்றன.

இவ்வறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இது, ஒன்றிணைந்த எதிரணி என்று சொல்லப்படும் மஹிந்த அணிக்குக் கிடைத்த மாபெரும் அடியாகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல், பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான மொட்டு அணி, தேர்தலில் 2ஆவது இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று, சில ஊடக அறிக்கைகள் சொல்லி வந்தன. அவ்வாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அதிக சபைகள் கிடைக்கப்பெறின், ஜனாதிபதியின் தலைமைத்துவம் தொடர்பான கேள்விகளை எழுப்பிவிடும் என்பது வெளிப்படையானது.

இந்நிலையில் தான், தேர்தலுக்கு மிக அண்மையாக வைத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றமை, மஹிந்த குழுவினரை, நிச்சயமாகவே பாதிக்கப் போகிறது. இந்தப் பாதிப்பு, நகரப் பகுதிகளில் மாத்திரமன்றி, கிராமப் பகுதிகளிலும் அதிகமாக இருக்கும். ஏனென்றால், 102 மில்லியன் ரூபாய் நட்டத்தை, அரசுக்கு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு, சாதாரணமான குற்றச்சாட்டுக் கிடையாது. கிராமப் புறங்களில், “மஹிந்த, 102 மில்லியன் ரூபாயைக் களவெடுத்துவிட்டார்” என்ற செய்தி தான் போய்ச் சேரப் போகிறது. எனவே, பாதிப்பென்பது, நிச்சயமாகவே காணப்படும் என எதிர்பார்க்கலாம்.

எனவே, அரசியலில் முட்டாள்தமானச் செயற்படுகிறார் என்ற விமர்சனங்களைச் சந்தித்துவந்த ஜனாதிபதி, அவ்வாறான எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, தனது அரசியல் வாழ்வை நீட்டிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. “ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்கும் வரை, எனது ஜனாதிபதிக் காலம் நிறைவடையாது” என்று அவர் சொல்லியிருப்பதும், இதன் பின்னணியில் தான் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது.

ஆகவே, இப்போதிருக்கின்ற கேள்வியெல்லாம், அடுத்ததாக எதைச் செய்யப் போகிறார் மைத்திரி என்பது தான். ஏனென்றால், இதுவரை காலமும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த ஜனாதிபதி, இப்போது, இருபதுக்கு-20 போட்டிகளை விளையாடத் தொடங்கி, அடித்தாடத் தொடங்கியிருக்கிறார். எந்தப் பந்துவீச்சாளர் சிக்குகிறார் என்பது தான், இப்போதுள்ள அடுத்த முக்கியமான கேள்வி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 5 =

*