;
Athirady Tamil News

யாழ். சாதி ஒடுக்குமுறையும், “பெக்கோ” தேரிழுப்பும்..! -எஸ். கனகரத்தினம் (கட்டுரை)

0

சாதி ஒடுக்குமுறையை நவீன வடிவத்தில் முன்னெடுத்துச் செல்வதில் தென்மராட்சி வாழ் சாதிமான்களும், அவர்களை மறைமுகமாக வழிநடாத்திச் செல்லும் அரசியல் வாதிகளும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர்.

அண்மையில் வரணி கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின் போது ஒடுக்கப்பட்ட மக்களும் வடம் பிடித்து தேரை இளுக்க முஸ்தீபு மேற்கொண்டு வருவதாக அறிந்த ஆலய நிர்வாகிகளும், சாதிமான்களும் இணைந்து இத்தகைய நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு பெக்கோ (ஜேசிபி) இயந்திரத்தின் மூலம் தேரை இளுத்துச் சென்ற செய்தி பத்திரிகைகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், சாதி வெறியர்கள் ஒருங்கிணைந்து அத்தகைய போராட்டங்களை நசுக்க முற்பட்ட வரலாறும், அதன் பின்னணியில் தமிழர் மத்தியில் ஆளுமை செலுத்தி வந்த அரசியல் சக்திகளும் தம்மை அவ்வப்போது இனங்காட்டி வந்துள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் ஐக்கியப்பட்டு தமது மனித உரிமைகளை நிலைநாட்ட முற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாத்வீகம், சமாதானம் மற்றும் அறவழி என்றும் மக்களின் போராட்டங்களை மளுங்கடித்து அவர்களைப் பிளவுபடுத்தியே அவர்களது உரிமைப் போராட்டங்களை சாதிமான்களும் அவர்கள் சார்ந்திருக்கக் கூடிய அரசியல் வாதிகளும் சிதைத்து வந்துள்ளனர்.

1950களின் நடுப்பகுதியில் கைதடிப் பகுதியில் சில பொது அமைப்புகள் ஒருங்கிணைந்து மாட்டு வண்டிச் சவாரியை வருடாவருடம் நடாத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு ஒரு வருடம் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரியின் போது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குன்னியன் என்பவர் செலுத்திய மாட்டு வண்டி முதலாம் இடத்தைப் பெற்றது.

இந்த நிகழ்வுக்கு அப்போதைய சாவகச்சேரித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.குமாரசாமி பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் உதவி மந்திரியாகவும் பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற குன்னியனுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கும் பொருட்டு கையில் மாலையுடன் சென்ற குமாரசாமி எவரும் எதிர்பாராத வகையில் குன்னியனுக்குப் பதிலாக அவரது மாடுகளுக்கு மாலை அணிவித்து தனது சாதித் திமிரை வெளிப்படுத்தினார்.

அதனால் ஆத்திரம் அடைந்த தென்மராட்சி வாழ் ஒடுக்கப்பட்ட மக்கள் இத்தகைய அவமதிப்புக்கும், மனிதரை விட மிருகங்களை மேலாக மதிக்கும் வரட்டுத்தனமான சிந்தனைக்கும் எதிராக ஐக்கியப்பட்டனர். இச்சம்பவம் தென்மராட்சி வாழ் ஒடுக்கபட்ட மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அப்போது தமிழ் காங்கிரஸ் கட்சி சாவகச்சேரி, பச்சிலைப்பள்ளி என இரு பிரதேசங்களை ஒருங்கிணைத்த சாவகச்சேரி தொகுதியில் தேர்தலில் வெற்றி பெற்று வி. குமாரசாமியை பாராளுமன்ற பிரதிநிதியாக பெற்றிருந்தது.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை திசைதிருப்பி தமக்குச் சாதகமான பிரச்சாரங்களை தமிழரசுக் கட்சி முன்னெடுத்தது.

தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருக்குப் பதிலாக தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்தால் சாதிப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என தீவிர பிச்சாரத்தை மேற்கொண்டனர்.

இதன் பயனாக அடுத்து வந்த 1956ம் வருட பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வி.என். நவரத்தினத்தை வெற்றிபொற செய்வதற்கு ஒடுக்கப்ட்ட மக்களின் வாக்குகள் பெரிதும் உதவின.

1956ம் ஆண்டின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நவரத்தினம் கைதடியில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரியையும் அதனால் எழுந்த சர்ச்சையையும் நினைவுறுத்தும் வகையில் மீசாலையில் இருந்து கச்சாய் அம்மன் கோயில் வரை தைப்பொங்கல் தினத்தன்று மாட்டு வண்டி ஊர்வலத்தை நடாத்தியதுடன் வழிநெடுக நின்ற மக்களிடம் மாலை மரியாதையைப் பெற்றுக்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆயினும் குன்னியனுக்கு குமாரசாமி மாலை அணிவிக்க தவறியதை கண்டிக்க திராணியற்று, நவரத்தினமும் அதனைக் கண்டும் காணாதவாறு நடந்துகொண்டார்.

1960களின் நடுப்பகுதியில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக யாழ் குடாநாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

34631363_2104635359820050_5272503742355210240_nகுறிப்பாக கோவில்கள், தேனீர்க்கடைகள் போன்ற பொது இடங்களில் சமத்துவம் கோரியும் ஆலயங்களின் உட்பிரகாரங்களில் உயர் சாதியினருடன் சரிசமமாகச் சென்று வழிபடுவதற்கும், அன்னதானம், தேர் இழுத்தல், கோவில் கேணியில் தண்ணீர் அள்ளும் உரிமை போன்றவற்றில் சமத்துவம் கோரியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த மக்களின் போராட்டங்களை மழுங்கடித்து போராட்டங்களை திசை திருப்பும் நோக்குடன் சாவகச்சேரிப் பாராளுமன்ற உறுப்பினர் நவரத்தினம் மற்றும் இன்றைய சிவசேனா தலைவரும் அன்றைய தமிழரசுக்கட்சி பிரமுகருமான மறவன்புலோ சச்சிதானந்தன் போன்றோர் அறவழிப் போராட்டக்குழு என்னும் அமைப்பை ஏற்படுத்தி ஒடுக்ப்பட்ட மக்களின் மத்தியில் உள்ள தமது விசுவாசிகள் சிலரையும் இணைத்து சாத்வீக வழியில் போராட்டம் நடத்துவதாக பாசாங்கு செய்தனர்.

இந்த அறவழிப் போராட்டக்குழுவுக்கு தலைமை தாங்கிய நவரத்தினமும் அவரது கட்சிப் பிரமுகர்களும் இணைந்து நகரசபை துப்பரவுத் தொழிலாளரோடு சேர்ந்து சந்தையை கூட்டித் துப்பரவு செய்தனர்.

அன்றைய தினம் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களோடு, தாங்கள் சமபந்தி போசனம் அருந்துவதாக விளம்பரப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

நகரசுத்தித் தொழிலாளர்களது இல்லங்ளுக்குச் சென்று உணவருந்தப் போகிறார்கள் என எதிர்பார்த்த தென்மராட்சி மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

உயர் சாதியினரது இல்லங்களில் சமைத்த உணவை கொண்டு வந்து சந்தையில் நகரசுத்தி தொழிலாளர்களுடன் அமர்ந்து அந்த உணவை அவர்களுக்கும் பரிமாறி தாங்களும் உண்டு ஊடகங்களி;ன் மூலம் பெரும் பிரச்சாரங்களை முன்னெடுக்க முயன்றனர்.

பிசுபிசுத்துப் போன சமபந்திப் போசனத்தால் ஏமாற்றப்பட்ட நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தென்மராட்சியில் உள்ள முற்போக்கு இளைஞர்கள் ஒன்றுதிரண்டு அத்தொழிலாளர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களால் சமைக்கப்பட்ட உணவச் சாப்பிட்டு உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டினர்.

இச்சம்பவத்தை ஒட்டி வோடிக்கையான ஒரு சம்பவமும் நிகழ்ந்தது. சாவகச்சேரி நாடளுமன்ற உறுப்பினர் நகரசுத்தி தொழிலாளர்களோடு சேரந்து சந்தையை கூட்டிய பின்னர் குளிப்பதற்கும, உடை மாற்றுவதற்கும் தமது வீட்டுக்குச் சென்ற சமயம் அவரது மனைவி கேற்றை இழுத்துப் பூட்டியதால் செய்வதறியாது திகைத்த அவர் நல்லூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று குளித்து உடைமாற்ற வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. தீண்டாமைக்கு எதிரான இவர்களது கொள்கைகள் ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லை என்பது போன்றது தான்.

1960ன் பிற்பகுதியில் ஒடுக்கபட்ட தென்மராட்சி மக்களின் போராட்டம் பல்வேறு பாகங்களிலும் விரிவடைந்த சமயம் கொடிகாமம் சந்தையில் உள்ள தேனீர் கடைகளில் சமத்துவம் கோரியதுடன், கறள் பேணி போத்தலுக்குப் பதிலாக உயர்சாதியினருக்கு வழங்குவது போன்று சில்வர் பேணியிலோ, கிளாசிலோ தேனீர் தருமாறு கோரிக்கை விடுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்தில் முன்னின்று செயலாற்றிய சமூகச் செயற்பாட்டாளர் இரத்தினத்தை மீசாலை புத்தூர் சந்தியில் நடுவீதியில் மறித்து கோடரியால் கொத்தி படுகொலை செய்தனர். இக்கொலையின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை அச்சுறுத்த எண்ணிய சாதிமான்கள் எதிர்மாறான சூழ்நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகினர்.

தென்மராட்சியில் பிரசித்தி பெற்ற பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பிரகாரத்துக்குள் சென்று வழிபடுவதற்கும் கோயில் கேணியில் நீர் அள்ளவும் உரிமை கோரிய சமயம், கோவில் பிரகாரத்தையும் கேணியையும் சுற்றி முட்கம்பி வேலி அமைத்து சாதி அமைப்பை பாதுகாக்க முற்பட்ட சமயம் தமிழரசுக் கட்சியும் அதன் பாராளுமன்ற உறுப்பினர் நவரத்தினமும் சாதிமான்களின் பக்கம் நின்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொலிசாரைப் பாவித்து அம்மக்களை அச்சுறுத்த முயன்றனர்.

ஆயினும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஐக்கியப்பட்டு போராடியதன் மூலம் கம்பி வேலி அகற்றப்பட்டு அக்கோவிலில் இன்று வரை சமத்துவம் பேணப்பட்டு வருகின்றது.

இத்தகைய போhராட்டங்களின் நியாயத்தன்மையை ஆதரித்து நிற்பதில் பாராளுமன்ற அரசியல்கட்சிகள் தமது முகத்தை மறைத்து வாக்குப் பிச்சைக்காக சந்தர்ப்ப வாதிகளாக மாறி வந்துள்ளதை வரலாறு முழுவதும் காணலாம்.

தற்போது வரணிப் பகுதியைச் சேர்ந்த கண்ணகை அம்மன் ஆலயத்தின் தேரை பெக்கோ இயந்திரத்தின் மூலம் இழுத்துச் சென்று சாதிப் அமைப்பை காப்பாற்ற முயன்ற இச் சம்பவத்தை தென்மராட்சியில் உள்ள எந்தப் பொது அமைப்புகளும் கண்டிக்க முன்வரவில்லை.

அதேவேளை ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றத்திலும், நகரசபைகள், பிரதேச சபைகள் என்பனவற்றில் ஆட்சி அமைத்தவர்களும் மௌனமாக இருந்து வேடிக்கை பார்க்கின்றனர்.

இதிலும் சாவகச்சேரிப் பிரதேச சபையின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கண்ணகை அம்மன் கோயில் இருப்பதும், அப்பிரதேச சபையின் தலைவராக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேரந்த ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு இருந்தும் அவரும் மௌனமாகவே உள்ளார்.

ஆகவே தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசியத்தின் பெயரால் ஐக்கியப்பட்டுள்ளவர்களும் சரி, சாதியமைப்புக்கு எதிராக குரல் கொடுப்பதாக கடந்த காலங்களில் பாசாங்கு செய்து அம்மக்களின் வாக்குகளைப் பெற்றவர்களும் சரி, 30 ஆண்டு கால ஆயுதப் போராடடத்தின் பின்னரும் சாதி அமைப்பைக் கட்டிக் காத்து நிற்கும் சாதிமான்களுக்கு எதிராக குரல் கொடுக்காதவரை, தமிழர்களின் போராட்டம் கேலிக்குரியதாகவே அமையும்.

-எஸ். கனகரத்தினம்

யாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான விபரம்..!! (படங்கள்)

யாழில் தேர் இழுத்த ஜேசிபி வாகனம்..!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + nine =

*