;
Athirady Tamil News

கோத்தாவை “ஹிட்லராக” பார்க்க விரும்பும் மகாசங்கம்? -சபரி (கட்டுரை &வீடியோ)

0

கோத்தாவின் பிறந்த தின நிகழ்வில் இடம்பெற்ற அரசியல் நகர்வுகள், இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷ முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான, வண.வென்டருவே உபாலி தேரர்.

கோத்தா ஜனாதிபதியாக  வருவதை தம்மிடமுள்ள ‘பிரஜாவுரிமை’ என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்கா தடுக்கும் என்று கூறப்பட்டாலும், சிங்களக் கடும்போக்காளர்கள் அவர் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை இது காட்டுகின்றது.

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரின் இந்த உரையும், இதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட முக்கியஸ்தர்களின் பிரதிபலிப்பும்தான் கொழும்பு அரசியலின் இந்த வார ‘ஹொட் ரொப்பிக்’.

இதனைவிட மாகாண சபைத் தேர்தல்களை எவ்வாறு நடத்துவது என்பதில் தொடரும் இழுபறி, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறப்போவதாக அமெரிக்கா அறிவித்திருப்பது, ஞானசார தேரர் பிணையில் வெளியே வந்திருப்பது போன்ற விடயங்கள் அரசியலில் முக்கிய பேசு பொருட்களாக இருந்தன.

இவை அனைத்திலும் கோத்தாவின் பிறந்தநாள் நிகழ்வில் இடம்பெற்ற அரசியல் நகர்வுகள்தான் முக்கியமானவையாக இருந்தமையால், அதன் பின்னணி குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

ஹிட்லராக மாறுங்கள்

கோத்தாபய ராஜபக்ஷவின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது, அனுசாசன உரை நிகழ்த்திய அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான வண.வென்டருவே உபாலி தேரர், தெரிவித்த கருத்துக்கள்தான் அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது.

”இராணுவ ஆட்சியின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு கோத்தாபய ராஜபக்ஷ முன்வர வேண்டும் என்று மகாசங்கம் விரும்புகிறது. இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை  முன்னேற்றுவதற்கு  கோத்தாபய ராஜபக்ஷ முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

வண.வென்டருவே உபாலி தேரர் இதனை தன்னுடைய தனிப்பட்ட கருத்தாக முன்வைக்கவில்லை. மகாசங்கத்தினரின் விருப்பமாகவே இதனை அவர் முன்வைத்துள்ளார்.

கோத்தாவுக்கு சிங்களக் கடும் போக்காளர்கள் மத்தியில் தீவிரமான ஆதரவு உள்ளது என்பது உண்மை. கோத்தா ஜனாதிபதியானால் ஒரு வகையில் கடும் போக்கில் அதிகாரத்தைச் செலுத்துவார் என்ற கருத்து உள்ளது.

இராணுவப் பின்னணியைக் கொண்ட கோத்தா, அதிகாரத்தைக் கைப்பற்றினால், ஹிட்லர் பாணியில்தான் நாட்டை ஆட்சி செய்வார் என்ற ஒரு கருத்து பொதுவாகவே உள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அவர் இருந்த காலத்தில் அவ்வாறான ஒரு போக்கிலேயே செயற்பட்டிருந்தார். நகர அபிவிருத்திப் பணிகளில் இராணுவத்தையும் அவர் ஈடுபடுத்தியிருந்தார்.

ஆனால், அவரது காலத்தில் நகர அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காணக்கூடியதாக இருந்தது என்பது உண்மை. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுதான் வண.வென்டருவே உபாலி தேரர், ஹிட்லரின் பாணியில் நாட்டைக் கொண்டு செல்லுங்கள் என கோத்தாவை வாழ்த்தியிருக்கின்றார்.

அதேவேளையில், தேரரின் இந்தக் கருத்தில் அரசாங்கத்துக்கு எதிரான குறிப்பாக மைத்திரிக்கு எதிரான மறைமுகமான விமர்சனமும் உள்ளது. இராணுவ ஆட்சியையோ, ஹிட்லர் பாணியில் அரசாங்கத்தைக் கொண்டு செல்வதையோ இன்றைய ஜனநாயக யுகத்தில் யாரும் விரும்பப் போவதில்லை.

ஆனால், அவ்வாறான ஒரு ஆட்சியை வரவேற்பதாக வண.வென்டருவே உபாலி தேரர் குறிப்பிடுவது, தற்போதைய அரசாங்கம் அதனைவிட மோசமானதாக இருக்கின்றது என மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

அதனைவிட, ஹிட்லர் பாணியில் சென்றால்தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற கருத்தையும் அவர் முன்வைக்கின்றார்.

வண.வென்டருவே உபாலி தேரர் உரையாற்றிய போது பௌத்த பீடங்களைச் சேர்ந்த தேரர்கள் பலர் அமைதியாக அதனை வரவேற்பது போல பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கூட்டு எதிரணி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் ’16 உறுப்பினர் குழு’வினர் என பெருந்தொகையானவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தார்கள். ஏதோ ஒருவகையில் அவர்களும் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டிருப்பதாகவே கருத வேண்டும்.

மைத்திரியின் சீற்றம்

வண.வென்டருவே உபாலி தேரரின் இந்தக் கருத்தினால் உடனடியாக தனது சீற்றத்தை வெளிப்படுத்தியவர் மைத்திரிதான். நிக்கவரெட்டியாவில் நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, ”2015 இல் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்தார்கள்.

ஆனால், சிலர் அதனை மறந்துவிட்டு மீண்டும் சர்வாதிகார ஆட்சி ஏற்பட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றார்கள். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்” என கடும் தொனியில் கூறியிருக்கின்றார்.

கடந்த மூன்றரை வருடகாலத்தில் ஜனநாயகமும், சுதந்திரமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும், சர்வதேசத்துடனான உறவுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த மைத்திரி, இந்த இடத்திலிருந்து நாட்டைப் பின்னோக்கிக் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கும் சக்திகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.

மைத்திரியைப் பொறுத்தவரையில் “­ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ராஜபக்ஷ முகாமுக்குள் செல்வதைத் தடுப்பது தான் அவருக்குள்ள மிகப்பெரிய பிரச்சினை.

தன்னுடைய தலைமையைப் பலப்படுத்திக்கொள்வதற்காகத்தான் ஐ.தே.க. தலைமையை நோக்கி சில வாரங்களுக்கு முன்னர் கடும் தாக்குதலை நடத்தியிருந்தார்.

இப்போது  ராஜபக்ஷ தரப்பினரை நோக்கி அவரது பீரங்கிகள் திரும்பியுள்ளன.  சுதந்திரக் கட்சியிலிருந்து தனியாகச் சென்ற ”16 உறுப்பினர் குழு” ராஜபக்ஷ முகாமில் முடங்கிக்கொள்வதற்கான சூழ்நிலைகள் தென்படத் தொடங்கியுள்ளது.

கோத்தாவின் பிறந்த தின வைபவத்தில் இவர்கள் கலந்துகொண்டது இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில், தேரரின் உரை, மைத்திரிக்கு பதிலடி ஒன்றைக் கொடுப்பதற்கு வாய்ப்பாகியுள்ளது.

ராஜபக்ஷ தரப்புக்கும் மைத்திரி தரப்புக்கும் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இப்போதைக்கு இல்லை என்பதையும் இந்த நகர்வுகள் உணர்த்துகின்றன.

16 உறுப்பினர்கள் அணி ராஜபக்ஷ தரப்புடன் இணைவது மைத்திரி தரப்பை மேலும் பலவீனப்படுத்துவதாகவே அமையும். மைத்திரியின் சீற்றத்தின் பின்னணியில் உள்ளது அதுதான்.

கோத்தாவின் திட்டம்?

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பிரஜாவுரிமைப் பிரச்சினை கோத்தாவுக்குத் தடையாக இருக்கும் என்பது இப்போது வெளிப்படையாகியிருக்கின்றது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கெசாப், இதனையிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெளிவாகவே சொல்லியிருக்கின்றார். அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறப்பது அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்பது அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டு விட்டது.

கோத்தாவை அமெரிக்காவோ மேற்குலகமோ விரும்பாது என்பதும் அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது. உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், 2020 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாவைக் களம் இறக்குவதுதான் ”மொட்டு அணி”யின் திட்டமாக இருந்தது. அவருக்கான வெற்றி வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாகவும் மதிப்பீடுகள் தெரிவித்தன.

இருந்தபோதிலும், மகிந்தவுடனான சந்திப்பின் போது அமெரிக்கத் தூதுவர் சொன்ன தகவல்கள், கோத்தாவைத் தடுப்பதற்கு பிரஜாவுரிமைப் பிரச்சினையை அமெரிக்கா பயன்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியது.

ராஜபக்ஷ தரப்புக்கு இது கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. ஆனால், கோத்தாவுக்குப் பதிலாக யாரை நிறுத்தலாம் என்பதை உடனடியாகத் தீர்மானிக்கும் நிலையில் மொட்டு அணி இல்லை.

அதேவேளையில், கோத்தா எதிர்நோக்கக்கூடிய தடைகளைத் தகர்ப்பதற்காக எவ்வாறான உபாயங்களைக் கையாளலாம் என்பதையிட்டு அவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிகின்றது. தந்திரோபாய ரீதியாகவும், சட்டரீதியாகவும் இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு கூட்டு எதிரணி தயாராகி வருவதாகத் தெரிகின்றது.

கோத்தா ஜனாதிபதித் தேர்தலில் இறக்கப்பட்டால் தேர்தல் திணைக்களம் உடனடியாக அவரது மனுவை நிராகரிக்காது எனக் குறிப்பிடப்படுகின்றது. கீதா குமாரசிங்கவுக்கு நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும் அது குறித்து யாராவது முறையீடு செய்ய வேண்டும்.

தீர்ப்பு வருவதற்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்துவிடும். அவ்வாறு நடந்தால் உடனடியாகவே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது ராஜபக்ஷ தரப்புக்கு கடினமானதாக இருக்காது.

அதன்பின்னர் 19 ஆவது திருத்தத்தை மாற்றினால், ராஜபக்ஷக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடும். இந்த நம்பிக்கையில்தான் கோத்தாவை ஹிட்லராகப் பார்க்க வண.வென்டருவே உபாலி தேரர் ஆசைப்படுகின்றாரா?

-சபரி-

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*