;
Athirady Tamil News

முதலாளித்துவ சித்தாந்தங்களால் தோல்விகண்ட அதிகாரப்பகிர்வு..!! சு.நிஷாந்தன் (கட்டுரை)

0

பல்லின மக்களும், பல் கலாசார, மொழி பண்பாடுகளைக்கொண்ட இலங்கையில் சமகால அரசியல் அரங்கில் நாலாபுறமும் ஓங்கியொழும் புதிய அரசமைப்புக்கான குரல், வரலாற்றின் காயங்களாலும், அனுபவங்களாலும், பேரிழப்புகளாலும் ஏற்பட்டதேயாகும்.

நீண்ட நெடிய காலமாக நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ் பேசும் சமூகத்துக்கு புதிய அரசமைப்பு என்பது காலத்தின் தேவையாகவுள்ளது. மெல்ல மெல்ல சிதைக்கப்பட்டுவரும் தமிழர்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குக் கொண்டுசெல்ல அரசியல் அதிகாரம் என்பது நவீன ஜனநாயகத்தில் அத்தியாவசிய காரணியாகவுள்ளது.

வரலாற்றுக் காலந்தொட்டு இலங்கையில் தமிழ், சிங்கள மக்கள் வாழ்ந்துவந்தாலும் காலத்தின் கோலத்தால் அதிகாரங்கள் பெரும்பான்மையினம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் சிங்களவர்களிடம் இன்று உள்ளது. அதிகாரங்களை வைத்துக்கொண்டு சுதந்திரத்துக்குப் பின்னரான இந்த 67 வருட காலத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை ஓரிரு வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி சுதந்திரத்தைப் பெற்றுவிட்டு ஒற்றுமை என்ற ஒரு வார்த்தைக்கு அடிபணிந்து, டி.எஸ்.சேனநாயக்கவிடம் அடகுவைத்த தமிழரின் சுயநிர்ணய உரிமையை 67 ஆண்டுகள் உருண்டோடியும் மீட்கமுடியாமல் தமிழ் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் எப்போது இனவாதம் துளிர்விட்டதோ அன்றே தமிழர்களின் தன்னாட்சியை இனியொருபோதும் பெறமுடியாது என்பதே இன்றுவரை கற்றுக்கொண்ட பாடங்களாக உள்ளன. 1926ஆம் ஆண்டு தமிழர்கள் ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது சமஷ்டி அரசமைப்பின் மூலமே இலங்கையில் அனைவரும் சமாதானமாக வாழமுடியும் என்று வலியுறுத்திய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 1952ஆம் ஆண்டு ஐ.தே.கவிலிருந்து பிரிந்து தனது அரசியல் பலத்தை நிரூபிக்க கையில் எடுத்த ஆயுதமே இனவாதம்.

இலங்கைக்கு இனவாதம் என்பது அன்று புதிய சொல்லாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் மாறி மாறி ஆட்சிக்குவந்த இரண்டு பிரதான தேசியக் கட்சிகளும் போட்ட உரத்திலும், ஊற்றிய நீரிலும் இனவாதம் இன்று ஆலவிருட்சமாக மாறியுள்ளது. இனவாதம் வேரூன்றியதாலேயே அனைவரும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய அரசமைப்பொன்றை உருவாக்கமுடியாதுள்ளது.

இனவாதத்துடன் இந்த நாட்டில் வேரூன்றியுள்ள மற்றுமொறு காரணிதான் முதலாளித்துவப் போக்கையுடைய கட்சிகளின் அரசியல் பொருளாதார, சமூக இலக்குகள். முதலாளித்துவ நாடொன்றில் நாட்டு குடிகளின் அரசியல் அபிலாஷைகள் அரசமைப்பில் அங்கீகரிக்கப்படாவிடின் அந்நாடுகள் பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் என்பதே யதார்த்தம்.

ஒரு நாட்டில் சமூக, பொருளாதார அடிப்படையிலேயே அரசமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதனடிப்படையிலேயே அரசமைப்புக்கான பாதுகாப்புகளும் உருவாக்கப்படுகின்றன. கம்யூனிஸ நாடுகளில் மக்களின் நலனை அடிப்படையாகக்கொண்டே அரசமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். இதற்கு தக்க உதாரணங்கள்தான் கம்யூனிஸ சித்தாந்தங்கள் 20ஆம் நூண்றாண்டில் ஆரம்பம்முதல் விதைக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் இன்று அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுகின்றமை.

முதலாளித்துக் கொள்கையில் அரசமைப்பை உருவாக்கிய சில நாடுகளில் ஜனநாயகம் பூரணமாகக் காணப்பட்டாலும் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் அதிகம். குறிப்பிட்ட சிலரின் தேவையைப் பூர்த்திசெய்ய ஆட்சியாளர்கள் விரும்புவதால் முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றும் பல்லின மக்களைக்கொண்ட நாடுகள் பாரதூரமான அரசியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் முதலாளித்துவத்துக்கு எதிராக இடம்பெற்ற புரட்சியின் பின்னர் மலர்ந்த லெனின் தலைமையிலான அரசு 1918ஆம் ஆண்டு உருவாக்கிய புதிய அரசமைப்பு அங்கு சமூகங்களுக்கிடையில் சமாதானத்தையும், பொருளாதார வளங்களையும் சம அளவில் பங்கிட்டுக்கொள்ளவும் உதவியது. தற்போதுவரை சில மறுசீரமைப்புகளுடன் ரஷ்யாவின் அரசமைப்பில் ஜனநாயகம் பேணப்படுகிறது.

அதேபோல், சீனாவில் 1949ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியின் பின்னர் 1950ஆம் ஆண்டு புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்பட்டது. அதில் சமூக ஜனநாயகத்துக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவம் நிலவிய கியூபாவில் பிடல் கெஸ்ரோ தலைமையிலான அரசு மலர்ந்தவுடன் அங்கும் சமவுடமை அரசமைப்பொன்று கொண்டுவரபட்டது. கம்யூனிஸ நாடுகளில் மக்கள் நலனுக்கே முன்னுரிமையளிக்கப்பட்டமை, அரசமைப்புகள் உருவாக்கப்பட்டமை வரலாறு.

இலங்கையில் முதலாளித்துவப் போக்கின் அடிப்படையிலும், இனவாதச் சிந்தனையின் அடிப்படையிலும் அரசமைப்புகள் உருவாக்கப்பட்டமையே மூன்று தசாப்தகால யுத்தத்துக்கும் வழிவகுத்தது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவால் 1956ஆம் ஆண்டு சிங்களம் அரசகரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரும்வரை அதற்கான அங்கீகாரத்தை இலங்கையை ஆண்ட அரச தலைவர்கள் கொடுத்தமை பெரும் வரலாற்றுத் துரோகமாகும்.
1972ஆம் ஆண்டு, 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசமைப்புகள் மக்களின் கருத்துகளைப் பெறாது உருவாக்கப்பட்டவையாகும். வரலாற்றுக் காலந்தொட்டு இலங்கையின் பூர்வீகக் குடிகளாக வாழும் தமிழர்களுடன் கலந்துரையாடல், இந்த நாட்டில் எவ்வாறு அரசமைப்பொன்றை உருவாக்கமுடியும் என்ற சிந்தனை சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் எழாமை இன்றுவரை உள்ள ஒரு துரதிர்ஷ்டமான விடயம்.

1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு சிறிமாவோ பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்டது. இனப்பிரச்சினைத் தீர்வுக்காகக் கொண்டுவரப்பட்ட அந்த யாப்பால் தீர்வுக்குப் பதிலாக பிரச்சினைகளே மேலும் அதிகரித்தன. அதுவரைகாலமும் 1947ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் கொண்டுவரப்பட்டிருந்த சோல்பரி யாப்பில் சிறுபான்மை மக்களுக்காக இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் தகர்த்தெறியப்பட்டன.

1978ஆம் ஆண்டு தமிழர் தரப்புடன் கலந்துரையாடி, சர்வக் கட்சி மாநாட்டை நடத்தியே புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் என்று கூறிய ஜே.ஆர்.ஜெயவர்தன அரசு, தமிழர் தரப்பை புறக்கணித்து முதலாளித்துவப் போக்கைக்கொண்ட அரசமைப்பை கொண்டுவந்தது. முதலாளித்துவக் கொள்கைகள் என்பது பெரும்பான்மை சமூகத்துக்கு எப்போதும் பாலில் தேனைக் கலந்துகொடுப்பது போன்றே ஆட்சியாளர்களால் அர்த்தப்படுத்தப்படுகிறது.
அன்று பௌத்த மக்களின் கதாநாயகனாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள ஜே.ஆர். செய்தவை கொஞ்சநஞ்சமல்ல. முதலாவது, அவரின் இராஜதந்திரம் அரசமைப்பின் இரண்டாவது ஷரத்தை இலங்கையை ஒற்றையாட்சி நாடாக பிரகடனப்படுத்தியமை. இரண்டாவது, பௌத்த மதத்தை அரச மதமாகவும், அதனைப் பேணுவதே ஆட்சியாளர்களின் தலையாய கடமை என்றும் 9ஆவது ஷரத்தில் குறிப்பிட்டமை.

இந்த இரண்டு விடயங்களையும் மாற்றமுடியாது என்று 83ஆவது ஷரத்தில் குறிப்பிட்ட அவர் இவ்வாறு ஒற்றையாட்சியையோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையோ மாற்றுவதாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதுடன், மாற்றத்தின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் என்று இலங்கையில் மீண்டுமொரு புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவரமுடியாத அளவு சாணக்கியத்தைக் கையாண்டு தமிழர்களுக்கு இந்த நாட்டில் பெறக்கூடிய அனைத்து அரசமைப்பு ரீதியான அதிகாரங்களையும் இல்லாதொழித்திருந்தார்.

1978ஆம் ஆண்டு அரசமைப்பின் படி கொண்டுவரப்பட்ட விகிதாசாரத் தேர்தல்முறையால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது சிம்ம சொப்பனமாக்கப்பட்டுள்ளது. ஜே.ஆருக்குப் பின்னர் இதுவரை ஐ.தே.கவாலோ அல்லது சு.கவாலோ நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாதுபோனமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு கட்சிகளின் கூட்டணியின் அடிப்படையிலேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருந்தார். அதேபோல் தற்போதைய தேசிய அரசும் பிரதான இரண்டு கட்சிகளுடன் பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவுடனேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றில் வைத்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்துக்கு மைத்திரி ரணில் தலைமையிலான அரசு முன்வைத்த மூன்று முக்கிய காரணிகள்தான் புதிய அரசமைப்பு, தேர்தல்முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல். அதனடிப்படையில்தான் தற்போது அரசமைப்புக்கான நகர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. அரசமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள் 1972ஐ போலவோ, 1978ஐ போலவோ அல்லாது இன்று மக்கள்மயப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்றில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசமைப்புக்கான கருத்துகளையும், உள்ளடக்கத்தையும் முன்மொழிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. அரசமைப்பின் முழு வடிவம் என்பது பூரண ஜனநாயகமாகும். லத்தின் அமெரிக்க நாடுகளில் 1970, 1980களில் அரங்கேறிய இராணுவப் புரட்சிகள் ஒடுக்கப்பட்ட மலர்ந்த அரசுகளால் அங்கு உருவாக்கப்பட்ட அரசியல் மறுசீரமைப்புகளால் ஜனநாயகத்தை மக்கள் பூரணமாக அனுபவிக்கமுடிகிறது.

அதபோல் காலத்துக்குக்காலம் பல்வேறு நாடுகள் தமது சமூக, பொருளாதார அரசியலின் அடிப்படையில் புதிய அரசமைப்புகளை, அரசமைப்பு மறுசீரமைப்புகளை ஏற்படுத்தியுள்ளன. 1957, 1965, 1972 1978, 2000ஆம் ஆண்டுகள் மற்றும் யுத்தத்துக்குப் பின்னர் என பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் அனைத்தின மக்களும் சமாதானத்துடன், வாழக்கூடிய அரசமைப்பொன்றை கொண்டுவர இலங்கைக்கு வாய்ப்புகள் கிடைத்தும் இனவாதம், பௌத்த தேசியவாதம் மற்றும் முதலாளித்துவக் கொள்கையால் அவை இழக்கப்பட்டிருந்தன. தற்போது எதிரும், புதிருமாக இருந்து இரு தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து அமையப்பெற்றுள்ள தேசிய அரசால் அந்தச் சவாலை வெற்றிக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்திய இலங்கை அரசின் புரிந்துணர்வுடன் ஏற்படுத்திக்கொண்ட 13ஆவது திருத்தத்தைப் போன்று அமையாமல் அனைவரும் இலங்கையர்கள் என்ற நாமத்துடன் வாழக்கூடிய அரசமைப்பொன்றை அரசு கொண்டுவரவேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. அதனைவிடுத்து பொன்விழா காணவுள்ள இலங்கையின் இனவாதத்துக்கு கிரீடம் அணிவிப்பதுபோன்று அரசமைப்பைக் கொண்டுவர நடவடிக்கையெடுக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்பது சர்வதேசத்தின் கைகளுக்கும் செல்லும் என்பதே இன்றைய சர்வதேச அரசியல் சூழலும் யதார்த்தமுமாகும்.

………….(சு.நிஷாந்தன்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*