;
Athirady Tamil News

மீளவும் ஐந்து ஆண்டுகளை நாசமாக்குவதற்கு எந்தப் பொறுப்புமில்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்ய முயற்சிப்பது புத்திபூர்வமானதா? அறிவீனமானதா? – கருணாகரன் (கட்டுரை )

0

ரஜனியின் ஆன்மீகமும் விக்கினேஸ்வரனின் அரசியலும் – கருணாகரன்

அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு எப்படியாவது வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நிறுத்தியே தீர வேணும் என்று சிலர் பாடாய்ப்படுகிறார்கள்.cmrajani

ஏன் வேறு பொருத்தமான ஆட்கள் தமிழ்ச்சமூகத்தில் கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம். தன்னம்பிக்கை குறைந்த சமூகமாக தமிழர்கள் மாறிவிட்ட பிறகு புதியவைகளை எப்படித் துணிச்சலாகத் தேடமுடியும்? இதனால் தங்களுக்கு முன்னே உள்ள பிம்பங்களே அவர்களுக்கு அவதாரங்களாக, தெய்வங்களாகத் தெரிகின்றன.

தெய்வ நிலையில் ஒருவரை பார்க்கத்தொடங்கி விட்டால், அவரைப் பற்றிய மதிப்பீடுகளுக்கோ விமர்சனங்களுக்கோ இடமிருக்காது.

வழிபாட்டு மனநிலையே இருக்கும். இதனால்தான் பிம்ப வழிபாட்டில் தமிழ்ச்சமூகம் வீழ்ந்து கிடக்கிறது.

இவ்வாறானவர்களே விக்கினேஸ்வரன்தான் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேணும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் பல தரப்பினர். ஒரு தரப்பினர் விக்கினேஸ்வரன் தனியாக ஒரு கூட்டை உருவாக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

இன்னொரு தரப்பினர் (தமிழரசுக் கட்சியைத் தவிர) கூட்டமைப்பின் வேட்பாளராக விக்கினேஸ்வரனே நிறுத்தப்பட வேண்டும் என்கின்றனர்.

மற்றத் தரப்பினரோ, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (கஜேந்திரகுமார் தரப்பு) க்கு விக்கினேஸ்வரன் தலைமை தாங்க வேணும் என்கின்றனர். இதே கருத்தையே சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் கொண்டுள்ளது.

இதை விடப் பொத்தாம் பொதுவாக முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரன் நிறுத்தப்பட வேணும் என்று கூறுவோரும் உண்டு.

இவர்களுக்கு யதார்த்த நிலை என்ன என்று தெரியாது. ஏனென்றால், இது ஒன்றும் ஜனாதிபதி தேர்தல் அல்ல. தனியொருவருடைய செல்வாக்கும் அவர் பெறுகிற வெற்றியும் தீர்மானிப்பதற்கு.

ஆகவே தனியொருவரால் ஒரு போதுமே முதலமைச்சராக முடியாது. அவருடைய அணி வெற்றியடைந்தாலே அவரால் முதலமைச்சர் என்ற நிலையை எட்டமுடியும். அத்தகைய அணி எதுவும் இப்பொழுது விக்கினேஸ்வரனுக்கு உண்டா? எதிர்காலத்தில் அவர் அவ்வாறான அணி ஒன்றுக்குத் தலைமை தாங்குவாரா?

அதிர்ஷ்டலாபச் சீட்டு ஒருவருக்கு எதிர்பாராத விதமாக வெற்றி வாய்ப்பைத் தருவதைப்போல, அரசியல் அதிர்ஷ்டத்தின் மூலம் சம்மந்தன் – சுமந்திரன் வழியாக முதலமைச்சரானவர் விக்கினேஸ்வரன்.

வேறு எந்த விதமான அரசியல் வழிமுறையின் மூலமாகவோ, சமூகப் பங்களிப்பின் மூலமாகவோ அரசியலுக்கு வந்தவரில்லை.

இப்படித் “திடீர் அதிர்ஷ்ட அரசியல்” பிரவேசத்தின் வழியே அதிகாரத்துக்கு வந்தவர் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சியின்) ஆதரவை இன்று இழந்து நிற்கிறார்.

ஏனைய கட்சிகள் ஆதரவளித்தாலும் தமிழரசுக் கட்சியை மீறி அவற்றினால் எதுவும் செய்ய முடியாது.

கூட்டமைப்புக்கும் தனக்குமிடையில் அரசியல் ரீதியான பிரச்சினைகள், வேறுபாடுகள் இருக்குமானால் அதை விட்டு வெளியேறியிருக்க வேணும் விக்கினேஸ்வரன். அதுவே அழகு. நேர்மை. சிறப்பு. அதுவே தலைமைத்துவத்துக்கான அடிப்படைப் பண்பு.

ஆனால் அதற்கு விக்கினேஸ்வரன் தயாரில்லை. அப்படி வெளியேறினால் பதவி போய் விடும். தனக்கான ஆதரவுத்தளம் (கூட்டமைப்பு என்ற பல கட்சிகளின் ஆதரவுத்தளம்) பறிபோய் விடும் என்ற பயத்தினால் கூட்டமைப்பை விட்டு வெளியேறாமல் நிற்கிறார்.

மறுவளமாக கூட்டமைப்போடு இணைந்திருக்கவும் தயாரில்லை. அப்படி இணைந்திருந்தால் கூட்டமைப்பின் மீது சனங்களுக்குள்ள கசப்புகளை தானும் பொறுப்பேற்க வேணும் என்ற அச்சம்.

ஆகவே தனக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் வேறுபாடுகளும் பிரச்சினைகளும் உண்டு என வெளியே காட்ட முற்படுகிறார். இதன் மூலம் தன்னை ஒரு புனிதப் பிம்பமாக, ஒரு தனியான சக்தி என்று கட்டமைக்க முயல்கிறார்.

இதேவேளை இன்னொரு தந்திரோபாயத்தையும் அவர் கொண்டிருக்கிறார்.

“விக்கினேஸ்வரன் இப்பொழுதும் கூட்டமைப்பில் இருக்கிறாரா?” என்றால், “ஓம், இருக்கிறார்.

கூட்டமைப்பின் சார்பில்தான் அவர் முதலமைச்சர் அதிகாரத்திலிருக்கிறார்” என்று பதில் சொல்ல முடியும்.

மறுவளமாக “விக்கினேஸ்வரன் இப்பொழுது கூட்டமைப்பில் இல்லையே!” என்றால், “ஓம், அவர் கூட்டமைப்பின் அரசியலுக்கு முற்றிலும் மாறான தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரல்லவா!” என்றும் சொல்லி விடலாம்.

அப்படிக் கேட்டால் அதற்கொரு பதில். இப்படிக் கேட்டால் இதற்கொரு பதில் என பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலுமாக வித்தை காட்டிவிடலாம் அல்லவா!.

இத்தகைய நிலைப்பாடென்பது நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சமூகத்தின் விடுதலை அரசியலுக்கு ஒரு போதுமே சரிப்பட்டு வராது.

இதனால்தான் விக்கினேஸ்வரனால் உறுதிபட எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியவில்லை. முதலமைச்சராக அவர் ஆற்றியிருக்க வேண்டிய பணிகள் செய்யப்படாமல் உள்ளன.

அதற்கான கடுமையான கண்டனங்களை அவர் சுமக்க வேண்டியிருக்கிறது. புலம்பெயர் சமூகத்தின் அரசியல் ரீதியான, பொருளாதார ரீதியான, துறைசார் நிபுணத்துவ ரீதியான பங்களிப்புகளை உருவாக்க முடியவில்லை.

ஆதரவையும் உதவியையும் பெற முடியவில்லை. புதிய அரசியல் கட்சியையோ புதிய அரசியலையோ உருவாக்க முடியாதிருக்கிறது. அவருக்கு ஆதரவு வழங்கவுள்ள சக்திகளைக் கூட அவரால் ஒருங்கிணைக்க முடியவில்லை.

இவ்வளவுக்கும் அவருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் ஒன்றும் சாதாரணமானவையல்ல.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏகமனதான முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டவர் விக்கினேஸ்வரன்.

பிறகு தமிழ் மக்கள் பேரவை அவருக்குத் தனிச் சிம்மாசனம் கொடுக்க முன்வந்தது. இப்போது கூடத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தங்கத்தாம்பாளத்தில் அவரை ஏந்துவதற்குக் காத்திருக்கிறது.

தன்னுடைய நாற்பதாண்டுகால அரசியல் பங்களிப்பையும் ஆயிரக்கணக்கான தோழர்களின் அரசியல் தியாகத்தையும் விட்டுக் கொடுத்து விக்கினேஸ்வரனுக்கான நாற்காலியைக் கொடுக்க முந்திருக்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

விக்கினேஸ்வரன் தும்மினாலும் இருமினாலும் அவற்றையெல்லாம் முன்பக்கச்செய்தியாக்கி ஆதரவளிக்கும் ஊடகங்களின் பேராதரவிருக்கிறது.

போராட்ட கால நெருக்கடி வாழ்க்கையோடு தங்கள் வரலாற்றைக் கொண்ட அரசியல் ஆய்வாளர்களே முன்வந்து “இடைமாறுகால மடைமாற்றி விக்கினேஸ்வரனே” என்று ஆதரவளிக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பொன்னான வாய்ப்புகளிருந்தும் அவற்றையெல்லாம் மண்ணாக்கிக் கொண்டிருக்கிறார் விக்கினேஸ்வரன்.

இந்த நிலையில் மீளவும் அவரை இழுத்துப் பிடித்து அரசியலில் நீடிக்க வைப்பதும் முதலமைச்சராகவே ஆக்க வேணும் என்று அடம் பிடிப்பதும் எந்த வகையில் நியாயமானது? சரியானது?

புலிகளுக்குப் பிறகான அல்லது யுத்தத்துக்குப் பிறகான அரசியலில் தமிழ் மக்களுடைய உரிமைக்கோரிக்கையை தளர்வின்றி ஒலிப்பவர் விக்கினேஸ்வரனே.

இதை அவர் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு முன்பாகவே திமிராகச் செய்கிறார். உலகரங்கில் தெளிவாக முன்வைக்கிறார். எந்தச் சமரசங்களுக்கும் இடமளிக்காமல், துணிகரமாக, விட்டுக்கொடுப்புகளற்று அதைச் செய்கிறார்.

யுத்தக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேணும். அரசியல் ஏமாற்றுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியான நிலைப்பாட்டோடிருக்கிறார். இந்தப் பங்களிப்பு ஒன்றே விக்கினேஸ்வரனுடைய தகுதிக்குப் போதுமானது என்று சிலர் சொல்லக் கூடும்.

இப்படிச் சொல்வோரிடம் நாம் சில கேள்விகளைக் கேட்கலாம். சரி, இப்படி, இவற்றுக்காக விக்கினேஸ்வரன் உருக்காக நிற்கிறார் என்றால், அதற்கான செயல்வடிவம் என்ன? அதாவது இவற்றை வெற்றி கொள்வதற்கான பொறிமுறைகள் என்ன? இப்படிச் சொல்வதால் மட்டும் இவையெல்லாம் நிறைவேறி விடுமா?

எதையும் யாரும் எளிதாகச் சொல்லி விட முடியும். அவற்றில் ஒன்றையேனும் செய்வதே சாதனை. ஒன்றையேனும் வெற்றிகொள்வதே வரலாறு.

ஆகவே இதற்குரிய வேலைகளைச் செய்திருக்க வேணும். அப்படியென்றால் இவை தொடர்பாக விக்கினேஸ்வரன் பல வேலைகளைச் செய்திருக்க வேணும்.

ஒன்று அரசியல் விடயங்களைக் கையாள்வதற்கு மாகாணசபையிலோ அதற்கு வெளியிலேயோ உரிய கட்டமைப்பொன்றை உருவாக்கியிருக்க வேண்டும்.

புலம்பெயர் சமூகத்தை இணைத்து, அரசியல், பொருளாதார, துறைசார் நிபுணத்துவக் கட்டமைப்புகளை நிர்மாணித்திருக்க வேண்டும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாவட்டங்களுக்கும் உரிய முன்னுரிமை அளித்து சிறப்பு வேலைத்திட்டங்களையும் அவற்றுக்கான அணிகளையும் உருவாக்கியிருப்பது அவசியம்.

சர்வதேச விவகாரங்கள் – சர்வதேச தொடர்புகளுக்கான அணியொன்றை அமைத்திருக்க வேணும். இப்படிப் பல வேலைகள் செய்வதற்கிருந்தன.

இதில் எதையுமே விக்கினேஸ்வரன் செய்யவில்லை. விக்கினேஸ்வரனை ஆதரிக்கும் தரப்புகளும் அவருக்கு இவற்றின் அவசியத்தை வலியுறுத்திச் செய்விக்கவில்லை.

தமிழ் மக்கள் பேரவையும் வடமாகாணசபையும் இரண்டு அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்பு நகல்களை சம்பிரதாயமாக உருவாக்கியிருந்தன.

ஆனால், அவற்றை சிங்கள, முஸ்லிம் சமூகங்களிடத்திலும் உலக அரங்கிலும் பிராந்திய சக்தியாகிய இந்தியாவிடத்திலும் எடுத்துச் செல்வதற்கு அவை முயற்சிக்கவில்லை.

யுத்தக் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று தீரமானம் கொண்டு வந்ததோடு அந்தத் தீர்மானம் பெட்டிக்குள் அடக்கமாகி விட்டது. அதை வினைத்திறனோடு – நெருக்கடிக்குரிய தீயாக மேலெழுப்புவதற்கு விக்கினேஸ்வரனாலும் முடியவில்லை. மாகாணசபை, பேரவை போன்றவற்றாலும் முடியவில்லை.

இவ்வாறு விக்கினேஸ்வரனின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி – தூரம் – மிக மிக அதிகமாகவே உள்ளது. இதையிட்டு விக்கினேஸ்வரன் கவலைப்படாதிருக்கலாம். அல்லது அவர் வெட்கப்படாதிருக்கக் கூடும். ஆனால், அவரை ஆதரிப்போர் இதையிட்டு அப்படியிருக்க முடியுமா? அவர்களுடைய பொறுப்பென்ன?

ஏனெனில் முதலமைச்சர் என்பது சாதாரணமான ஒன்றல்ல. அது ஒரு பெரும் பொறுப்பு. யுத்தப் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத மக்களையும் பிரதேசங்களையும் அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு.

கூடவே இவர்களுடைய புதிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பும் கூட. அரசியல், பொருளாதார, பண்பாட்டு, பிரதேச வளப் பேணுகை, வளவிருத்தி போன்ற பலவற்றோடு சம்மந்தப்பட்டது.

36000 ஆயிரம் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட பெரும் நிர்வாகக் கட்டமைப்பை வினைத்திறனோடு இயக்க வேண்டிய கடப்பாடுடையது.

இது தவிர, விவசாயம், மருத்துவம், கல்வி, கூட்டுறவு, கடற்றொழில், போக்குவரத்து, தொழிற்துறை, பொருளாதார விருத்தி, பண்பாடு, விளையாட்டு, சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு, பெண்கள் நலன் மேம்பாடு, சுற்றுச்சூழல் இயற்கை வளப்பாதுகாப்பு, பொதுநிர்வாகம், உள்ளுராட்சி எனப் பலதுறைகளை உள்ளடக்கியது.

எனவே இவற்றையெல்லாம் மீளவும் ஐந்து ஆண்டுகளுக்கு நாசமாக்குவதற்கு எந்தப் பொறுப்புமில்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்ய முயற்சிப்பது புத்திபூர்வமானதா? அறிவீனமானதா?

இதற்கப்பாலும் விக்கினேஸ்வரன்தான் அரசியல் வழிகாட்டியாகவும் முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்றால், அது ரஜனிகாந்தின் ஆன்மீகமும் விக்கினேஸ்வரனின் அரசியலுக்கும் வேறுபாடில்லை என்பதன்றி வேறெதுவாக இருக்க முடியும்?

– கருணாகரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + four =

*