;
Athirady Tamil News

இலங்கையின் “றொக்கற் மனிதனாக” மகிந்த ராஜபக்ச பேரம் பேசுகிறார்..! (கட்டுரை)

0
இலங்கைத் தீவின் பலமான மனிதன் (ஸ்ரோங் மான்) என்று வெளியுலக ஆங்கில ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டுவரும் ராஜபக்ச, வட கொரியாவின் விண்கலம் ஏவும் மனிதன் (றொக்கற் மான்) கிம் ஜொங்-உன்; போல அமெரிக்காவுடன் இயைந்து போகும் மனப்பாங்குள்ளவன் என்ற அடிப்படையிலேயே வெள்ளிக்கிழமை மாலை கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டிருக்கும் தென்னிலங்கை அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகள் அமைந்திருக்கின்றன. ராஜபக்ச சீனாவுடன் அல்ல அமெரிக்காவுடனே தனது ஆழமான அரசியலை மேற்கொண்டுள்ளார். இதையே அமெரிக்காவும் உசிதமாகப் பார்க்கிறது. பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற கேந்திர அரசியலுடன் சேர்ந்து விளையாடப் போகும் தென்னிலங்கைப் பேரினவாதிகளின் அடுத்தகட்ட விளையாட்டுத் தான் என்ன? 

கொழும்பு ஊடகங்களும் கொழும்பில் இருந்து இயங்கும் சர்வதேசச் செய்தி நிறுவனங்களும் காட்டுகின்ற பூச்சாண்டிச் செய்திகளில் வேடிக்கை வினோதங்கள் அமோகமாக இருக்கும்.

பூகோள அரசியல் வியூகங்களை நன்றாக விளங்கி வைத்திருக்கும் ராஜபக்ச வட்டாரமும், தென்னிலங்கையின் சிங்களப் பேரினவாத சக்திகளும் மோடி, டொனால்ட் ட்ரம்ப் வியூகத்தைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளல் என்ற உத்தியில் ரணில் விக்கிரமசிங்காவையும் மங்கள சமரவீராவையும் விடத் தெள்ளத்தெளிவான கணிப்பொன்றைப் போட்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு இலங்கையின் பூகோள அரசியலை அம்மணமாகத் தரிசிக்கும் அறிவுப் பார்வையும் தென்னிலங்கை அரசியல் தொடர்பான நுண்ணுணர்வும் கொண்ட மனிதர்களால் உண்மைகள் சிலவற்றை இலகுவாகப் புரிந்துகொள்ளமுடியும்.

மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்காவுக்கு மாற்றாக மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக்குவதற்குப் பயன்படுத்தியது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் சரத்து 42(4).

ஒற்றையாட்சியின் ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின் ஆதரவு யாருக்கு உள்ளதென்று தான் கருதுகிறாரோ அவரைப் பிரதம மந்திரியாக்கும் உரித்துடையவர் என்பதே அது.

இந்தச் சரத்து எந்தவிதச் சலனமும் இன்றிய தெளிவான சட்டப் புரிதலுடனேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்திலே பின்வருமாறு மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் அந்தச் சரத்து சிங்களத்தில் இன்னம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கும் என்று நாம் நம்பலாம்: The President shall appoint as Prime Minister the Member of Parliament, who, in the President’s opinion, is most likely to command the confidence of Parliament.

இலங்கை ஒற்றையாட்சி யாப்பு தொடர்பான சட்டவிவகாரங்களில் சிங்கள மொழியிலான யாப்பே மூலமாகக் கொள்ளப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை, மகிந்த ராஜபக்சவுக்கான பெரும்பான்மையை பாராளுமன்றில் நிரூபிக்க முடியும் என்ற திண்ணத்துடனேயே இந்த ஆட்சி மாற்றத்தை நொடிப் பொழுதில் கொண்டுவர முடிந்திருக்கிறது.

இதற்கிடையில், அமெரிக்க இராஜாங்க அமைச்சும் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறது.

இலங்கையின் யாப்புக்கு இணங்க இந்தச் சிக்கலை அமைதியாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்தக் கருத்து. இதைச் சொல்கின்ற அதேவேளை, இன்னும் ஒரு செய்தியையும் அமெரிக்க நிலைப்பாடு சொல்லி வைக்கிறது.

அதன் சங்கதி என்ன, அது ஏன் சொல்லப்பட்டிருக்கிறது, யாரை நோக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நாம் சரியாக விளங்கிக் கொள்ள, உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் விடயங்களை ஊகித்தறியும் திறனைத் தீட்டிக்கொள்ள வேண்டும்.

அந்தச் செய்தி என்ன?

ஜெனீவாவில் உடன்பட்டிருக்கிற நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளை இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் காப்பாற்ற வேண்டும் என்பதே அந்தச் செய்தி.

யார் சொல்வது?

ஜெனீவாவில் இருக்கும் மனித உரிமைச் சபையில் இருந்து தானே அண்மையில் முழுமையாக வெளிநடப்புச் செய்திருக்கும் அமெரிக்கா சொல்கிறது.

2018 ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த அமெரிக்கா அந்தப் பேரவையை மனித உரிமைகளைக்குக் களங்கம் விளைக்கும் இடமே ஐ.நா. மனித உரிமைப் பேரவை என்றும் அது இஸ்ரேலுக்கு விரோதமாக நடக்கிறது என்றும் வைதபடியே வெளியேறியது.

சிங்கள பௌத்தப் பேரினவாதிகளும் ஜெனீவா விவகாரத்தில் இருந்து எப்போது தாம் முழுமையாக விடுபடலாம் என்று ஏங்கிக்கிடக்கின்றனர்.

அடுத்தபடியாக இலங்கையின் பலமான மனிதனாக வெளிப்படும் ராஜபக்ச ஜெனீவாவில் இருந்து இலங்கையை எந்தச் சிக்கலுமின்றி வெளியேற்றலாம்.

அது எப்போது சாத்தியமாகும்?

அமெரிக்காவுடன் உயர்மட்டப் புரிதல் இருந்தால் மாத்திரமே மற்றைய நாடுகளிடம் இருந்து எதிர்ப்பு வெளிப்பட்டாலும் அதைத் துச்சமாகக் கருதி மனித உரிமைப் பேரவையில் இருந்து வெளியேற முடியும்.

ஆகவே, அமெரிக்காவுடன் ஏற்கனவே பரம இரகசியமாகப் பேரம் பேசப்பட்டு மறைமுக உடன்பாடு எட்டப்பட்டுவிட்ட விடயமாக இது இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

அண்மையில் மைத்திரிபால சிறிசேன ஐ.நா. பொதுச் சபையில் பங்கேற்க அமெரிக்கா சென்று வந்ததும், அமெரிக்க ஜனாதிபதியை அவர் புகழ்ந்து பேசியதும் நினைவிருக்கலாம்.

ஆகவே, இலங்கை ஜெனீவாவில் இருந்து வெளியேறுவதை தற்போதைய அமெரிக்கா, குறிப்பாக டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்கா, உள்ளார்ந்து ஆதரிக்கும்.

ராஜபக்சவின் பதவி ஏற்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச நிலையான அரசை நடாத்தும் ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அவர்களையே சரவதேச சமூகம் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நகைப்போடு சுருக்கமாகச் சொல்லியிருப்பதையும் இங்கு நாம் உற்று நோக்கவேண்டும்.

அமெரிக்க அரசியலை நன்கு ஆழமாக அறிந்துணர்ந்த உயர்மட்டத் தரப்புடனான புரிதலையோ அல்லது முன் ஆயத்தங்களையோ அமெரிக்கப் பிரசையும் பென்ரகன் வட்டாரங்களோடு நீண்ட நெடுங்கால உறவுகளைப் பேணிவருபவருமான கோத்தபாயா ராஜபக்ச நிச்சயம் செய்து முடித்திருப்பார் என்றும் நம்பலாம்.

சமீபத்திய நாட்களில் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கையை முன்னுதாரணமாகச் சொல்லி அதைப் போல தனது அரசாங்கம் செயற்பட்டதாக மகிந்த ராஜபக்ஷ சொல்லியிருந்தமையும் இங்கு கவனிக்கற்பாலது.

ஐ.நா. மனித உரிமைச் சபையில் இருந்து வெளியேறும் அதேவேளை, சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்கா ஒரு போரையே ஆரம்பித்திருக்கிறது.

அமெரிக்கா மீதோ, இஸ்ரேல் மீதோ அல்லது அமெரிக்காவின் வேறெந்த நட்பு அரசு மீதோ போர்க்குற்ற விசாரணை நடாத்த முயற்சிக்கு சர்வதேச நீதிமன்றின் நீதிபதிகள் அமெரிக்க இறைமைக்குள் காலடி எடுத்துவைக்க முடியாது என்ற பகிரங்க மிரட்டலை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்ரன் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஈழத்தமிழர் தாயகத்தை குடியேற்றம் செய்து சிங்களமயமாக்கும் திட்டத்தில் இலங்கை இனிமேல் இஸ்ரேலைத் தனது மாதிரியாகக் கொண்டு செயற்படும் அபாயம் இருக்கிறது என்பதை ஏற்கனவே விரிவான கட்டுரை ஒன்றில் பார்த்திருக்கிறோம்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) எதிராகப் பகிரங்கமாகவே கருத்து வெளியிட்ட அமெரிக்கா சர்வதேச நீதியியல் நீதிமன்றின் (ICJ) ஈரான் தொடர்பான தீர்ப்பைத் தொடர்ந்து, ஈரானுடான ஒப்பந்தத்தையே ஒக்ரோபர் ஆரம்பத்தில் இரத்துச் செய்தது.

இந்த நிலையில் தான் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீனிய நிர்வாகம் இஸ்ரேலின் ஜெருசலேமுக்கு கடந்த வருடம் அமெரிக்கா இடமாற்றம் செய்த அமெரிக்கத் தூதுவரலாயத்தை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிடவேண்டும் என்று சர்வதேச நீதியியல் நீதிமன்றை நாடியிருக்கிறது.

இந்தப் பின்னணிகளுக்கு முன்னெச்சரிக்கையாக அமெரிக்காவின் வாசிங்க்டன் டிசியில் இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அலுவலகத்தை டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மூடுமாறு உத்தரவிட்டிருந்ததையும் நோக்கவேண்டும்.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை, அமெரிக்கா திருகோணமலைக்குள் வந்தாயிற்று. இதற்குப் பரிபூரண ஆதரவைப் புது டில்லியும் வழங்கியாகி விட்டது. இதை அடையும் வரை ரணிலின், மங்களவின் சேவை அதற்குத் தேவைப்பட்டது.

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்குப் பின்னர் உருவாகியிருக்கும் நரேந்திர மோடியின் இந்துத்துவ ஆட்சி அமெரிக்காவின் தலைமைக்குள் பரிபூரணமாகச் சென்று விட்டது.

இனிமேல், இந்தியா விரும்பினால் கூட வெளியேற முடியாத அளவுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு அணிவகுப்பு என்ற பொறிக்குள் இந்தியா சென்றுவிட்டிருக்கிறது.

இலங்கைத் தீவின் விவகாரங்களை முடிவெடுப்பது தற்போது இந்திய மட்டத்திலோ, இந்திய உளவுத்துறை மட்டத்திலோ அல்ல. அமெரிக்க மட்டத்திலேயே இந்த முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதை நடைமுறைப்படுத்தும் வேலையையே இந்தியாவால் செய்துகொடுக்கமுடியும்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு உடன்படிக்கைகளைப் பற்றி ஆழமாக அறிவு இருந்தாலே இது ஏன் என்பது புரியும். அதை விபரிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

பூகோள அரசியல் வியூகங்களை நன்றாக விளங்கிவைத்திருக்கும் ராஜபக்ச வட்டாரமும், தென்னிலங்கையின் சிங்களப் பேரினவாத சக்திகளும் மோடி, டொனால்ட் ட்ரம்ப் வியூகத்தைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ளல் என்ற உத்தியில் ரணில் விக்கிரமசிங்காவையும் மங்கள சமரவீராவையும் விடத் தெள்ளத்தெளிவான கணிப்பொன்றைப் போட்டிருக்கிறார்கள்.

இந்தக் கணிப்பின் பிரகாரம், உயர்மட்டப் புரிதல்களை மேற்கொண்டு துணிகரமாகக் களத்தில் இறங்கினால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஆக, பூகோள அரசியற் கணிப்பின் அடிப்படையிலேயே மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்சவையும் சிங்கள பௌத்த பேரினவாத சக்தி ஓரணியில் திரட்டியிருக்கிறது.

அமெரிக்க சீன இந்து சமுத்திரக் கடல்மார்க்க வியூகங்கள் தொடர்பான பேரம் பேசல்களில் ஈழத் தமிழர் உரிமைகளை மறுப்பதற்கும், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தம்மை விடுவிப்பதற்கும் எது உகந்த உத்தி என்பதில் தென்னிலங்கை அரசியல்வாதிகளை இயக்கும் சிங்களப் பேரினவாத சக்தி துல்லியமான கணிப்புகளைப் போட்டுக்கொள்ள வல்லது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை பலமான மனிதனுடன் உடன்பாட்டைப் பேணிக்கொள்வதன் மூலம் தனது கேந்திர முக்கியத்துவத்தை உறுதிசெய்துகொள்வதற்கு அது தயாராயிருக்கும்.

அரசியற் பிளவுகளைக் கையாளலாம், ஆனால் இராணுவ ரீதியான பிளவுகள் ஏற்பட்டால் அது தனது நலனுக்குக் குந்தகமானது என்றும் அமெரிக்கா கருதுகிறது.

இது குறித்த ஆழமான கணிப்புகளை மேற்கொண்டு, அவ்வாறான ஒரு நிலை தோன்றாது என்று தெளிந்த நிலையிலேயே ராஜபக்ச அரசகட்டிலில் ஏறுவதற்கான பச்சைக்கொடியை ஒளித்து நின்று அமெரிக்கத் தரப்புக் காட்டியிருக்கும்.

ராஜபக்சவின் வருகையே இராணுவ ஸ்திரத்தையும் இலங்கைத் தீவில் பேணும் தனது தேவைக்கு உகந்தது என்று அமெரிக்கா கருதும் வாய்ப்பும் உள்ளது.

இந்த நிலையில் ராஜபக்சவின் மீள்வருகை சீனாவின் வேலை என்றோ, அல்லது இந்திய உளவுத்துறையின் சில்லறை வேலை என்றோ காட்டப்படும் பூகோள அரசியல் மாயைகளை ஈழத்தமிழர் எளிதாக நம்பிவிடக் கூடாது.

சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சிநிரல்தான் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை எங்கு வைத்திருப்பதென்பதைத் தீர்மானிக்கின்றது.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை பௌத்த சங்கமும் இலங்கை இராணுவமும் பலமாகக் கருதும் பலத்தைத் தன்பக்கம் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதிலும் அமெரிக்கா அதீத அக்கறை செலுத்தும்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நா விலோ, சர்வதேச நீதிமன்றுக்கோ இலங்கை அரசைக் கொண்டு செல்வது மட்டுமல்ல, இலங்கை இராணுவத்துக்கு மாசு கற்பிக்கும் எந்த நடவடிக்கையிலும் அமெரிக்காவோ, அமெரிக்கத் தலைமையிலான சக்திகளோ ஈடுபடா.

ஈழத்தமிழர்கள் பாலஸ்தீனர்களைப் போன்ற மன உறுதியோடு தமக்கென்றான சர்வதேச அரசியல் இராஜதந்திர வியூகத்தை அமைத்துக்கொள்வதொன்றே அடுத்த கட்ட இராஜதந்திரமாகும்.

எந்த அந்நிய சக்திகளிலும் தங்கியிருக்காத நிலையில் இருந்து செயற்படுதல் என்பது இதற்கு முக்கியமானது.

இலங்கையை 2004 இல் சுனாமி தாக்கியபோது இனப்பிரச்சனை என்ற பரிமாணத்துக்கும் அப்பாற் சென்று மனிதப் பேரவலம் ஒன்றை இரண்டு தரப்பும் இணைந்து எதிர்கொள்ள வைப்பதற்கு ஏதுவாக பொதுக் கட்டமைப்பு ஒன்றுக்கான மத்தியஸ்தம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்க பொதுக்கட்டமைப்பை விரும்பவில்லை.

அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையும் பொதுக்கட்டமைப்புக்கான நிதியூட்டத்தை இலங்கை ஒற்றையாட்சி அரசின் இறைமைக்கு உட்படுத்தத் தயாராக இருக்கவில்லை.

இந்த இறுக்கமான நிலையிலும் பொதுக்கட்டமைப்பு ஒன்று கைச்சாத்தாகியது.

அப்போது, உடனடியாக அறிக்கை ஒன்றை அமெரிக்கா வெளியிட்டது.

அந்த அறிக்கை சிங்கள பௌத்த பெருந்தேசியவாதிகளுக்கு ஒரு சங்கதியைச் சொன்னது. அந்தச் சங்கதியின் பிரகாரமே அவர்கள் பொதுக் கட்டமைப்புக்கு எதிராக இலங்கையின் அதியுச்ச நீதிமன்றைத் தீர்ப்பளிக்கச் செய்து இரத்துச் செய்தனர்.

இதன் தொடர்ச்சியே 2006 இல் வடக்கு கிழக்கு இணைப்பை இரத்துச் செய்வதாகவும் இறுதியில் போரின் போக்கை இன அழிப்புப் போராக மாற்றுவதாகவும் அமைந்தது.

அமெரிக்கா அன்று வெளியிட்ட அந்த அறிக்கை என்ன சொன்னது தெரியுமா?

இலங்கையில் இரண்டு தரப்புகளிடையேயும் சுனாமி பொதுக்கட்டமைப்புத் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் உடன்படிக்கையைத் தாம் வரவேற்பதாகவும், மற்றைய நாடுகளை அதற்குப் பங்களிக்குமாறும் ஆனால் தம்மால் அதற்குப் பங்களிக்க முடியாதவாறு ஒரு சட்டச்சிக்கல் இருப்பதாகவும் அந்த அறிக்கை அமைந்திருந்தது.

செய்திக்குப் பின்னால் இருந்த சங்கதியை தென்னிலங்கைச் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சக்திகள் இராஜதந்திர ரீதியாகப் புரிந்துகொண்டதன் தார்ப்பரியமே பேச்சுவார்த்தையை முறித்து ஒற்றையாட்சியை நிலைநிறுத்தும் வாய்ப்பை அவர்களுக்குக் கொடுத்தது.

அந்த அமெரிக்க அறிக்கை உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசியதைப் போலவே, தற்போது வந்திருக்கும் அமெரிக்க அரசின் செய்தியைச் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் புரிந்துகொள்வார்கள்.

ஈழத் தமிழர்களும் இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசைப் பற்றி ஈழத் தமிழர்கள் 1972 இல் இருந்து பாடம் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

2009 இன் பின்னர் சிங்கள மக்களும் அதைப் போன்றே வேறு சில பாடங்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இரண்டுக்கும் பின்னணி ஒன்று தான். இலங்கைத் தீவின் இந்து சமுத்திரத்திலான கேந்திர அமைவிடத்தைக் கொண்டு பின்னப்படும் பூகோள அரசியல் தான் அது.

இந்தச் சூழலில் வயது எண்பதைத் தாண்டினாலும் இறுதிவரை கற்றுக்குட்டிகளாகவே இருப்போம், அதுவே சுகம் என்று இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் அரசியலுக்குப் பலிபோயிருக்கிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.

இவர்களிடம் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட இராஜதந்திர அரசியலுக்கான மூலோபாயங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

ஆக, 1970 களின் இளைய தமிழ்த் தலைமுறையினர் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து அடுத்த பிரளயத்தை உருவாக்கியது போல, மீண்டும் வேறொரு பிரளய மாற்றத்தை உருவாக்கத் தற்காலத் தலைமுறை எழுந்தாகத்தான் வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 15 =

*