;
Athirady Tamil News

அரசியல் சதி வலையில் ஐ.தே.கட்சி! பிரதமர் மாற்றத்தில் நடந்தது என்ன?..!! (கட்டுரை)

0

அண்மைக் காலமாக மைத்ரி – ரணில் இருவருக்கும் நாளுக்கு நாள் உள் முரண்பாடுகள் உருவாகி வந்தன. இந்நிலையில் ரணிலை எப்படியாவது துரத்த வேண்டும் என மைத்ரி முயன்று வந்தார்.

அதன் உச்சம் “ரணிலை மலை உச்சிக்கு கொண்டு போய் தள்ளி விட வேண்டும் போல உள்ளது” என்றார்.

பல சதிகள் ரணிலால் முறியடிக்கப்பட்டன.

1. நம்பிக்கையில்லா பிரேரணை. அது பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதற்கு பின்னால் முழுமையாக செயல்பட்டவர் மைத்ரி. ஆனால் பலியானவர்கள் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள்.

2. கொலை சதியென ஒரு நாடகத்தை நடத்தி அதற்கு பின்னால் இருந்தது ரணில் என சொல்லி ரணிலை கைது செய்வது இன்னொரு திட்டம். ஆனால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சீடியில் அப்படி ஒரு தகவலும் இல்லை.

ஆனால் நாலக்க டீ சில்வாவை வேறோர் பிரச்சனைக்காக கைது செய்தனர். அவரை மீட்க கொலைச் சதிக்கு பின்னால் ரணில் இருப்பதாக சொல்லுமாறு கேட்டார்கள். அது சரி வரவில்லை.

ஆனால் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அந்த விடயத்தில் ரணில் மற்றும் பொண்சேகாவை கைது செய்ய இன்னமும் சமயம் பார்த்து காத்திருக்கிறார் மைத்ரி.

இதற்குள்தான் ரவி கருணாநாயக்க முரண்படுகிறார். அவர் வெகு காலமாக அமைச்சு பதவி இல்லாமல் இருக்கிறார். அந்த கோபத்தில் பாராளுமன்றத்தில் காரசாரமாக பேசுகிறார். அந்த சந்தர்ப்பத்தை மைத்ரி பயன்படுத்த முயல்கிறார்.

இதன் போது மைத்ரி – ரவி கருணாநாயக்க சந்திப்பு ஒன்று நடக்கிறது. இங்கேதான் ரணிலை அகற்றும் பேச்சும் நடக்கிறது.

ஐதேகவின் 23 பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு தன்னால் வர முடியும் என ரவி , மைத்ரிக்கு உத்தரவாதம் ஒன்றை வழங்குகிறார். அதோடு சஜித்தை பிரதமராக்கலாம். அப்படியானால் ரணிலை பிடிக்காதவர்களும் இளையோரும் வருவார்கள் என ரவி தனது யோசனையை முன் வைக்கிறார். சஜித் இழுத்தடித்தால் கருவை கேட்கலாம் என்கிறார் ரவி.

இதைக் கேட்டு மகிழ்ச்சி அடையும் மைத்ரி , அப்படியானால் பிரச்சனையில்லை. மகிந்த தரப்பினர் இடைக்கால அரசொன்று அமைந்தால் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சொல்லியிருப்பதை மைத்ரி சொல்கிறார்.

இதெல்லாம் ரவி – மைத்ரிக்கு மட்டுமே தெரியும். இதை சஜித்திடம் ரவி பகிர்ந்திருப்பார். சஜித் வெகு காலமாக ஐதேகவின் தலைமை பதவிக்கு கண் வைத்துக் கொண்டே இருப்பவர்.

முன்னய காலத்து ரணில் – சஜித் மோதல் முடிவுக்கு வந்தது போல இருந்தாலும் உள்ளே கசப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

ரணிலுக்கும் சஜித்திடம் தலைமையை ஒப்படைக்க விருப்பம் இல்லை. அவர் நவின் திசாநாயக்கவை முன்னிலைப்படுத்த முயன்று வருகிறார்.

ரவி சந்திப்பின் பின்னர் மைத்ரி , பசிலை சந்திக்கிறார். பசிலிடம் விடயத்தை சொல்லி தமக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும்படி கேட்கிறார். இந்த இடத்தில் பசில் தமது கட்சி எதிர்கால அரசியலை சிந்தித்து வேறோர் முடிவுக்கு வருகிறார்.

சஜித் அல்லது கரு தலைமையேற்று ஐதேகவை கையிலெடுத்தால் எமக்கான அரசியல் இல்லாமலே போய்விடும் என்று சொல்லியதோடு , மகிந்தவை பிரதமராக்கலாம் எனும் யோசனையை முன் வைத்துள்ளார். அதற்கு மகிந்த ஒத்துக் கொள்வாரா எனக் கேட்க , நான் மகிந்தவை அனுப்புகிறேன். பேசி முடிவெடுங்கள் என பசில் சொல்லியுள்ளார். இதை வெளியில் தெரிய வேண்டாம் என்பது அவர்களது டீல்.

இந்த நம்பிக்கை உருவானதும் மைத்ரி , நல்லாட்சியின் பங்கு கட்சியான தமது கட்சியின் ஆதரவை விலக்கிக் கொண்டார். இது குறித்து மைத்ரி தரப்பே அறியாதிருந்துள்ளனர். இவை குறித்து தெரியாத சஜித் தரப்பு மைத்ரியின் அழைப்புக்காக காத்திருந்து இருக்கலாம்.

ரவியின் திட்டப்படி சஜித் தரப்பு , ஆட்சியமைத்தால் மகிந்த தரப்பு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவார்கள் என நினைத்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

திடீரென மகிந்த பிரதமரானார் என்ற செய்தி வெளியிடப்பட்டது. இதைக் கேட்ட ரவி – சஜித் தரப்பு அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். ரவியோடு வருவதாக சொன்ன எவருமே அதன்பின் வரவில்லை. சஜித் அம்பாந்தோட்டையில் இருந்தார். அவரது நெருங்கிய சினேகிதரான வசந்த சேனாநாயக்க கென்யாவில் இருந்தார். இவர் சேனாநாயக்க பரம்பரையில் உள்ளவர். இவருக்கும் ரணிலுக்கும் ஆகாது.

இத்தனை நிகழ்வுகள் நடக்கும் போதும் ரவி – சஜித் ஆகியோர் அலரி மாளிகை பக்கம் வரவே இல்லை. ரவி , மகிந்த பக்கம் தாவப் போகும் செய்தி கேட்டு ரவியின் ஆதரவாளர்கள் ரவியின் வீட்டுக்கு சென்று இப்படியான நேரத்தில் இதுபோல செய்தால் தாங்கள் ரவியின் எதிர்கால அரசியலுக்கு உதவப் போவதில்லை என சொன்னார்கள்.

கட்சி பிரச்சனை எதுவானாலும் மகிந்த – மைத்ரியோடு இணைவதை ஐதேக ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இந்த நிலையில்தான் ரவி காலம் தாழ்த்தியே அலரி மாளிகைக்கு வந்தார். அதிலிருந்து ரவி , மகிந்த – மைத்ரி தரப்போடு இணையவில்லை என ஐதேக ஆதரவாளர்களுக்கு நிம்மதி வந்தது.

சஜித் கூட வசந்த சேனானாயக்க கென்யாவிலிருந்து திரும்பிய பின் அவரோடுதான் அலரி மாளிகைக்கு வந்தார். அதுவரை அவரும் தலை காட்டாமலே இருந்தார். வசந்த தனக்கு நாட்டில் நடந்த எதுவும் தெரியாது. தான் கென்யாவின் காட்டில் இருந்து இப்போதுதான் வந்துள்ளேன் என்றார். பெரிதாக பிடி கொடுக்காமல் பேசும் போதே அவருக்கு விடயம் தெரியும் என உணர முடிந்தது. சஜித் பக்கதிலேயே இருந்தார். அப்படி பேசிய வசந்த இப்போது மகிந்த – மைத்ரி கொடுத்த அமைச்சு பதவியை பெற்றுள்ளார். இங்கே ஐதேகவை உருவாக்கிய D.S. சேனாநாயக்க குடும்பத்தில் ஒருவர் ஐதேகவை விட்டு சென்றுள்ளார்.

மகிந்தவை பசில்தான் மாட்டி விட்டார் என கட்சியில் சிலர் இப்போது குமுறி வருகிறார்கள். நினைத்தது போல கோடி கொடுத்தாலும் கட்சிக்கு ஆள் இல்லை. காரணம் விபரம் தெரிந்தவர்களுக்கு அதன் ஆபத்து தெரியும். தெரியாதோர் வெடி கொழுத்தி மகிழ்கிறார்கள். அதற்குள் அமெரிக்க குடியுரிமையாளர்களுக்கு அமெரிக்கா கடுமையாக நடந்து கொள்ள இருக்கிறது எனும் செய்தி கிடைக்கிறது. இதற்குள் மாட்ட அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதனால் திரை மறைவில் விளையாட பார்க்கிறார்கள். அது ஆபத்தான விளையாட்டு. அது எடுபடாது. சான்றுகளோடு மாட்டினால் இலங்கையில் அல்ல அமெரிக்காவில் கம்பி எண்ண வேண்டும்.

மகிந்தவும் மைத்ரியும் பௌத்த கோயில்களுக்கு போய் திரிகிறார்கள். மைத்ரியின் மகள் சத்துரிகா அனுராதபுரத்திலுள்ள பெண் சூனியக்காரி வீட்டில் மைத்ரியின் ஆசைகள் நிறைவேற பூசைகள் செய்து வருகிறார்.

சிலர் நினைக்கிறார்கள் இது ஒரு புரட்சி என்று. இல்லை! ஒரு நாட்டின் சட்டம் என பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பை மீற சர்வதேசம் அனுமதிக்காது. இது ஒன்றும் வீட்டுக்கு காய் கறி வாங்க முடிவெடுக்கும் விடயமல்ல. எனவே பாராளுமன்றத்தைக் கூட்டி தமக்கான ஆதரவை மைத்ரி – மகிந்த தரப்பு காட்ட வேண்டிய தேவை உள்ளது. அது அவ்வளவு இலகுவானதல்ல.

இவர்களது சதி திரும்பினால் மைத்ரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று வரும். அதன் பின்னர் மகிந்த – மைத்ரி இருவரது குடியுரிமை கூட ரத்தாகலாம். இந்த பீதி அவர்களது முகங்களில் தெரிகிறது. நாட்டுக்குள் இருக்கும் பலத்தை வைத்து ஊருக்குள் சண்டித்தனம் காட்ட முடியும். சர்வதேசம் ஒரு நாட்டின் இறமைக்கு பங்கம் ஏற்படும் போது எந்த விதத்தில் இறங்கும் அல்லது தாக்கத்தை கொடுக்கும் என்பதை நம்மால் இப்போது கணிக்க முடியாது. போர் குற்றத்துக்கே ஆடிப் போனவர்கள் இங்கே சும்மாவா?

பருப்பு மூடைகளை போட்டதற்கே இலங்கை அடங்கிப் போன சரித்திரம் ஒன்று உண்டு. இந்த பிரச்சனையை வைத்து எந்த படை வந்து இறங்கும் எனத் தெரியாது. அப்படி ஒரு நிலை வந்தாலும் வரலாம். அதை தவிர்க்க விரைவில் பாராளுமன்றத்தை கூட்டி சுமூகமாக பிரச்சனையை முடிப்பது எல்லோருக்கும் நல்லது. சாவுகள் விழும். நாடும் விழும்.

நாளை என்ன நடக்கும்? பார்ப்போம்!

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Samaran

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*