;
Athirady Tamil News

நாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..!! (கட்டுரை)

0

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை, “புரட்சி” என்று வர்ணிப்போர் மிக அதிகளவில் உள்ளோர். அவர்களின் எண்ணங்கள் தவறானவையல்ல. அந்த மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட முடியாமல் போயிருக்கலாம்.

ஆனாலும் கூட, அந்த மாற்றங்கள் எல்லாம், அரசியலோடு சம்பந்தப்பட்டவை என்பதால், மக்களின் மாற்றங்களாக அவை கருதப்பட முடியாத நிலை காணப்பட்டது. குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடத்தைகள், ஊழலைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தயக்கம் போன்றனவெல்லாம், அந்த மாற்றங்களின் பெறுமதி, பயன் என்ன என்ற கேள்விகளை எழுப்பியிருந்தன. ஆனால், உயர்நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் (13) வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு, முக்கியமானதொரு செய்தியை வழங்கிச் சென்றிருக்கிறது: 2015 ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட மாற்றம், அரசியல்வாதிகளோடு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல; அதையும் தாண்டியது தான் அது.

ஏனென்றால், அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும், நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியாக இன்னமும் உள்ள ஒருவர் மேற்கொண்ட முடிவை, இவ்வாறாக எதிர்ப்பதென்பது, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒன்றல்ல. நேற்று முன்தினம் வழங்கப்பட்டது, இடைக்காலத் தடையுத்தரவு தான், ஆனால், நாட்டின் ஜனாதிபதிக்கு எதிரானது என்பதை மறந்துவிடக்கூடாது.

இதுவொன்றும், தனித்த சம்பவம் கிடையாது. இவ்வாண்டு ஆரம்பத்தில், தனது பதவிக் காலம் 6 ஆண்டுகளா என அறிவதற்காக, உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன நாடிய போது, அவரது பதவியை நீட்டிப்பதற்கான முயற்சியாகவே அது கருதப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 ஆண்டுகளே என வாதிட்டிருந்தார். அவரது வாதம் நிராகரிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் தான் என, உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற அமர்வுகளிலும், ஜனாதிபதியின் நடவடிக்கைகளை, அதே சட்டமா அதிபர் ஜயசூரி, முழுமையாக நியாயப்படுத்தி வாதிட்டிருந்தார். அவரது வாதங்கள், இம்முறையும் (இடைக்கால அடிப்படையில்) நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

இதில், முக்கியமான விடயம் என்னவென்றால், பதவிக் காலம் தொடர்பான விடயத்தை, அப்போதைய பிரதம நீதியரசர் பிரியசெத் டெப், மற்றும் நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவநேக அலுவிஹார, சிசிர டி அப்ரூ, கே. சித்ரசிறி ஆகியோர் கையாண்டிருந்தனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான இந்த மனுக்களை, தற்போதைய பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கையாண்டிருந்தனர்.

இவர்களின் பெயர்களைப் பார்க்கும் போது, நாட்டின் ஜனாதிபதி, தனது அதிகாரத்தை அதிகரிப்பதற்கான அல்லது தவறாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை, ஒரே ஆண்டில் இரண்டு தடவைகள், 8 நீதியரசர்கள் தடுத்திருக்கிறார்கள். (இம்முறை வழங்கப்பட்டது இடைக்காலத் தடை என்பது உண்மையென்றாலும், அதையும் தடுத்தல் என்று தான் எடுக்க வேண்டியிருக்கிறது)

இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத் தன்மை பற்றிய கேள்விகள் இப்போது இருந்தாலும், உயர்மட்டத்தில், நாட்டின் மிகவுயர்ந்த அதிகாரம் கொண்ட நபரை எதிர்த்து நிற்கக்கூடிய பலமும் தைரியமும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டிருக்காவிட்டால் சாத்தியமா என்று கேட்டால், இல்லையென்று தான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது.

இது தான் இங்கு முக்கியமானது. உயர்நீதிமன்றத்தின் (இடைக்கால) தீர்ப்பை, பல்வேறு தரப்பினர், தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எந்தக் கட்சிக்கும் சாராத ஒன்றாகத் தான், இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது;இது, மக்களுக்கான தீர்ப்பு.

எனவே தான், அரசியல் தலையீடுகள் அற்ற வகையில் வழங்கப்பட்டிருக்கின்ற இந்தத் தீர்ப்பு, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற “புரட்சி”யை விட, மிகப்பெரிய புரட்சியாக அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு, மறுபக்கமாக ஜனாதிபதிக்குச் சார்பாகச் சென்றிருந்தால், நாட்டின் அனைத்துப் பிரிவுகளும் செயலிழந்து போயிருக்கக்கூடிய ஆபத்துக் காணப்பட்டது. நீதியரசர்களுக்குக் காணப்பட்ட அழுத்தம், சாதாரணமானதாக இருந்துவிட முடியாது. இவற்றுக்கு மத்தியில் வழங்கப்பட்ட தீர்ப்பு, மிகப்பெரிய புரட்சியாகவே கருதப்பட வேண்டியிருக்கிறது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மாற்றத்தை, தரம்குறைக்கும் நோக்கம் இல்லாவிட்டாலும், அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோற்பதற்கு, பல்வேறு காரணிகள் இருந்தன: ஆட்சியில் இருப்போருக்கு எதிராக வரும் எதிர்ப்புணர்வு; ஊழல் குற்றச்சாட்டுகள்; மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்; சர்வதேச அழுத்தம்; ராஜபக்‌ஷவின் கட்சிக்குள்ளேயே எழுந்துவந்த எதிர்ப்புணர்வு போன்றனவெல்லாம், ராஜபக்‌ஷவின் தோல்விக்குப் பங்களித்திருந்தன. அவரைத் தோற்கடிக்க வேண்டுமென்று, சர்வதேச நாடுகள் கங்கணம் கட்டிக்கொண்டு நின்றதெல்லாம் நாமனைவரும் அறிந்தது தான்.

எனவே, அந்த மாற்றம் முக்கியமானதென்றாலும், உயர்நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்போடு ஒப்பிடும் போது, அது சிறியதாகத் தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை.

இப்படியான புரட்சி ஏற்படுவதற்கு, பொதுமக்கள் மாத்திரமே காரணமானவர்கள். ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்துக்குச் சென்றவர்களில், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உள்ளடங்குகிறார்கள் என்றாலும் கூட, இந்த எதிர்ப்புக்கான இயங்குவிசையை வழங்கியவர்கள், சாதாரண மக்கள் தான். மக்களின் போராட்டங்களும் மக்களின் எதிர்ப்பும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்த போராட்டங்களும் தான், மிகப்பெரிய அளவிலான இயங்குவிசையை வழங்கியிருந்தன.

எனவே, இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல்ரீதியான எழுச்சியும் விழிப்புணர்வும், அரசியல் தரப்புகளால் தவறாகப் பயன்படுத்தப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது. ஏனென்றால், இந்தப் “புரட்சி” வெற்றியடையும் கட்டம் உருவானதுமே, ஐ.தே.க தரப்பில், தமக்கான ஆதரவாக இதை எடுத்துக்கொள்ளத் தொடங்கியதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. மக்களின் ஆதரவை மாத்திரமன்றி, ஜனாதிபதியின் “சட்டவிரோதமான” நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தவர்களையும் கூட, தமக்கான ஆதரவாக அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள், ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவாக ஒருபோதும் கருதப்படக்கூடாது. உண்மையில், ஜனநாயகத்துக்கான போராட்டத்தில், ஐ.தே.க என்பது வெறுமனே ஒரு கருவியே. ஐ.தே.கவுக்குள்ளேயே ஜனநாயகப் பண்புகள் இல்லையென்று தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், ஜனநாயகத்துக்கான காப்பாளர்களாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கு, ஐ.தே.கவுக்கு எந்தவிதமான உரிமைகளும் கிடையாது.

தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து, கட்சிக்குப் பின்னடைவுகளை வழங்கிக்கொண்டு வரும் தலைவராக இருந்துவரும் ரணில் விக்கிரமசிங்க, கட்சியைச் சீரமைக்கவோ அல்லது அடுத்தகட்டத் தலைவர்களுக்கோ வழிவிடாமல், தொடர்ச்சியாகத் தலைமைக் கதிரையைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார். தொடர்ச்சியாக இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில், தன்னால் போட்டியிட முடியாத நிலையில், வெளித் தரப்பினரை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய நிலைமையை, ஐ.தே.க எதிர்கொண்டிருக்கிறது.

இவற்றுக்கு நடுவில், தற்போது எழுந்திருக்கின்ற அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஐ.தே.கவின் பிரதமர் வேட்பாளராக, ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்கவை நிறுத்த வேண்டுமென்ற குரல்களும், அண்மைய நாள்களில் ஐ.தே.கவுக்குள்ளிருந்து எழுந்திருந்தன.

அதேபோல், சலுகைகளுக்காகவும் வேறு விடயங்களுக்காகவும் மஹிந்த தரப்போடு இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை, ஐ.தே.க, மீண்டும் அரவணைத்திருக்கிறது. தமக்கான பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்காக, எவரோடும் இணைவதற்கும் அக்கட்சி தயாராக இருக்கிறது. எனவே, ஜனநாயகம் என்பது, பலர் அணிந்துகொள்ளும் ஆடையாக இருக்கிறதே தவிர, அனைவருக்குமே, ஆட்சி அதிகாரம் பற்றிய ஆர்வரும் விருப்பும் தான் அதிகமாக இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், நீதித்துறையால் வழங்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, ஜனநாயகமான சூழலொன்றைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அந்த நடவடிக்கையில், தற்போதிருக்கும் அரசியல்வாதிகளில் அநேகர், தோற்கடிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அவ்வாறான தோல்விகள் மூலமாக, அனுபவமற்ற அரசியல்வாதிகள் உருவாகினாலும் பரவாயில்லை. ஏனென்றால், அனுபவமற்ற அரசியல்வாதிகள் ஒன்றும், ஊழல் தவளைகளை விட மேலானவர்கள் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + five =

*