;
Athirady Tamil News

“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல் மாறி விடக்கூடாது..!! (கட்டுரை)

0

சில மாதங்களுக்கு முன்னர், காட்டமான உரையொன்றை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வாளை வெளியில் எடுத்து, வீசத் தொடங்கியிருப்பதாகவும் இதில் யார் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்று தனக்குத் தெரியாது என்ற தொனியிலும் ஆக்ரோஷமான கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.

அந்தவகையில், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, அப்பதவியில் இருந்து நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் புதிய பிரதமராக நியமிக்கும் அதிரடி நடவடிக்கையின் மூலம், மைத்திரி அவ்வாளை வீசத் தொடங்கினார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், அடுத்தடுத்ததாக நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது, மைத்திரியின் வாள், அதனது குறி, குறித்துப் பல கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியாதுள்ளது.

மைத்திரி பொருத்தமில்லாத ஒரு சந்தர்ப்பத்தில் வாளை உபயோகித்திருக்கின்றாரா? அவரது வாள் கூர் மழுங்கியதா? இலக்குத் தவறி வேறு யாரையும் பதம் பார்த்து விடுமா, சுழற்றத் தெரியாமல் சுழற்றுவதால், அவருக்கே ஆபத்தாக வந்து விடுமோ? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது.

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை, உயர்நீதிமன்றின் இடைக்காலத் தடையுத்தரவு, நம்பிக்கையில்லாப் பிரேரணை எனப் பரபரப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற சூழலில், இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த அதிகாரச் சண்டையில், நேற்றுவரை இடம்பெற்ற சம்பவங்கள், இலங்கையின் அரசியல்ப் பெருவெளியை, பெரும் அபத்தம் (அபத்தத்துக்குப் பொருள் – முட்டாள்தனம், பொய், நிலையாமை,வழு, மோசம்) நிறைந்ததாக மாற்றியிருப்பதைக் காண முடிகின்றது.

என்றுமில்லாத எதிர்ப்பார்ப்புடன் நிறுவப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிராக, இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால், புதிதாகக் களவு செய்வோருக்கு பயம் இருந்திருக்கும்.
அளுத்கம, ஜிந்தோட்டையில் இனக்கலவரம் செய்தோரைத் தண்டித்திருந்தால், திகணவில் வன்முறைகள் இந்தளவுக்கு மோசமாக இருந்திருக்காது.

எனவே, இன்று நாட்டில், கடந்த மூன்று வருடங்களில் ஏற்பட்ட பின்னடைவுக்கு, ரணில் விக்கிரமசிங்க தரப்பினரே காரணம் என்பது போல, ஜனாதிபதியின் கருத்து அமைந்திருந்தாலும், உண்மையில் இத்தனை பின்னடைவுகளுக்கும் வங்குரோத்து நிலைக்கும் மைத்திரி – ரணில், அவர்களுக்கு முண்டுகொடுத்த சிறுபான்மைக் கட்சிகளுமே பொறுப்புக் கூற வேண்டும்.

தனியே, ரணில் விக்கிரமசிங்க மீது, ஜனாதிபதியோ, ஜனாதிபதி தரப்பினர் மீது ரணிலோ பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் அரசமைப்பில், இப்படியெல்லாம் ஏற்பாடுகள் இருக்கின்றனவா என, இதுவரை காலமும் அறிந்திராத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், சிறுபான்மை மக்களுக்காக, பொதுவான நாட்டு நலனுக்காக, இவ்வாறு அதிகாரத்தை யாரும் பாவித்ததாகக் கூற முடியாது. அதேபோல், ஜனநாயகம் என்று பேசுகின்ற தரப்பினரும், முஸ்லிம் கட்சிகளும், கடந்த காலங்களில் முஸ்லிம்கள் விடயத்தில், ஜனநாயகம் மீறப்பட்ட போது, துள்ளி எழுந்து நீதிமன்றம் சென்றதாகவும் நினைவில் இல்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்த கையோடு, அப்போது அப்பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியிருந்தார்.

இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்க, சற்றும் அலட்டிக் கொள்ளாமல், அமைச்சரவையைக் கலைத்த ஜனாதிபதி, புதிய அமைச்சரவையையும் கட்டம்கட்டமாக நியமித்தார்.

சமகாலத்தில், ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தார்.

முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகத் தொடர்ந்துமிருக்க விட முடியாதளவுக்கு, அவர் பக்கத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்ற அடிப்படையில், சஜித் பிரேமதாஸவிடமும் சபாநாயகர் கருஜயசூரியவிடமும் பிரதமர் பதவியை ஏற்குமாறு கூறி, அவர்கள் மறுத்த நிலையிலேயே,மஹிந்த ராஜபக்‌ஷவை நியமிக்கும் முடிவை எடுத்ததாக, ஜனாதிபதி கூறினார்.

இவ்வாறான, அதிரடி நடவடிக்கைகளுக்கான பின்னணிக் காரணம் என்னவென்பதை, மக்கள் அறியாதவர்களல்ல; என்றாலும், ஜனாதிபதி கூறிய மேற்படிக் காரணம், சற்று நியாயமானதாகப் பலராலும் நோக்கப்பட்டது.

ஆனால், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, அவர் சொன்ன முதலாவது காரணம், தர்க்கவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் இயலுமை, பிரதமர் மஹிந்தவுக்கு இருந்திருக்குமானால், நிச்சயமாக நாடாளுமன்றத்தைக் கூட்டியிருப்பார்கள் என்பதும், அதற்கான சாத்தியம் இல்லாமல் போனதாலேயே கலைக்கப்பட்டது என்றும் சிறுபிள்ளைகள் கூட அறியும்.

இப்படியிருக்க ,இரு தரப்பிலும் பேரம்பேசல்கள் இடம்பெற்றாலும், மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பிலிருந்தே அதிகமான பேரங்கள் வந்ததாகப் பரவலாகப் பேசப்பட்ட ஒரு சூழ்நிலையில்,‘எம்.பிக்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாய் விலைபேசியதை’ ஜனாதிபதி ஒரு காரணமாகக் கூறியமை, முரண்நகை என்றும், சர்வதேசத்தைத் திருப்திப்படுத்தும் முயற்சி என்றுமே கருத முடிகின்றது.

நாட்டின் அரசமைப்பு என்னதான் திருத்தப்பட்டாலும், ஜனாதிபதிக்கு இன்னும் ஏகப்பட்ட அதிகாரங்கள் உள்ளன. அந்த அடிப்படையில் தனக்குச் சாதகமான உறுப்புரைகளைப் பயன்படுத்தியே, ஜனாதிபதி அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார். அதைவிடுத்து, நாட்டின் ஜனாதிபதி ஒருவர், சட்டத்தை முற்றாக மீறி, இவற்றையெல்லாம் செய்திருப்பார் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனால், எதிர்பாராத தருணத்தில், தடாலடியாக அதைச் செய்ததும், அதனால் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களையும் கணிசமான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதேவேளை, சட்டம், அரசமைப்புப் பற்றி அறிந்தவர்கள், இது ஜனநாயகத்தை மீறும் செயல் என்று, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த அடிப்படையிலேயே, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்ததை ஆட்சேபித்து, 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு ஆதரவாக, ஐந்து மனுக்களும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களைக் கடந்த 12, 13 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் விதத்தில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, எதிர்வரும் டிசெம்பர் ஏழாம் திகதி வரை, இடைக்காலத் தடையுத்தரவு வழங்கியதுடன், இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை டிசெம்பர் 4,5,6 ஆம் திகதிகளில் நடத்துவதாக அறிவித்தது.

இதனால், இலங்கை அரசியலில் எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்பட்டது. அதாவது, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவித்தலின்படி, செயலிழந்த நாடாளுமன்றம் மீண்டும் உயிர்பெற்று, திட்டமிட்டபடி 14ஆம் திகதி கூடியது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தவர்கள், மீண்டும் அப்பதவிக்கு உரித்தானவர்களாகச் சபைக்குச் சென்றனர்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பிக்கும் அக்கிராசன உரையை நிகழ்த்துவதற்கு, ஜனாதிபதி சமுகமளித்திருக்காத நிலையில், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐ.தே.கட்சி கொண்டு வந்தது. அதற்கு ஆதரவாக, 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்டு ஒப்படைக்கப்பட்டதுடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறியதாக, சபாநாயகர் அறிவித்தார்.

இது தொடர்பான ஆவணங்களை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த போதும், அதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். “நாடாளுமன்றத்தில், புதனன்று (14) நடைபெற்ற நிகழ்வுகளின் போது, நாட்டின் அரசமைப்பு, நிலையியற் கட்டளைகள், சம்பிரதாயங்களைச் சபாநாயகர் புறக்கணித்திருப்பதாலும், வேறு சில அடிப்படைகளின் நிமித்தமும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என, ஜனாதிபதி பதில்க் கடிதமொன்றை, சபாநாயகருக்கு அனுப்பியிருந்தார்.

இதற்கிடையில், சிறுபான்மைக் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதின், மனோ கணேசன் போன்றோரை, நேற்றுமுன்தினம் இரவு சந்தித்த ஜனாதிபதி, நடப்பு விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடினார்.

அதன்பின்னர், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவளித்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் நேற்றுக்காலை சந்திக்க, ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதும், அங்கு போய்ப் பயனேதும் இல்லை என்ற அடிப்படையில், ஜனாதிபதியின் அழைப்பை, அவர்கள் புறக்கணித்ததாகக் கூறப்படுகின்றது.

இதற்கிடையில், ஜனாதிபதி சுழற்றுவதாகச் சொன்ன ‘வாள்’, ரணில் விக்கிரமசிங்கவை நேரடியாகக் குறிவைத்திருக்கின்ற நிலையில், தொடர்ந்து, அவரைப் பிரதமராக நியமிப்பதற்குத் தனக்கு உடன்பாடில்லை எனவும் சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய, நவீன் திசாநாயக்க ஆகியோரில் ஒருவரை முன்மொழிந்தால், அதுபற்றிப் பரிசீலிக்க முடியும் என்று, ஜனாதிபதி சொன்னதாகவும் ஒரு தகவல் வெளிவந்திருந்தது.

இந்தப் பின்னணியில், ஜனாதிபதி பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று, நேற்று (15) விடியற்காலை வரை எதிர்பார்க்கப்பட்டது,

1. ரணில் விக்கிரமசிங்க அல்லாத வேறு ஒருவர் பிரதமராக நியமிக்கப்படலாம்.
2. நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒருபக்கம் வைத்துவிட்டு, பெரும்பான்மையை (113) நிரூபிக்குமாறு கோரி, அவ்வாறு நிரூபிக்கும் தரப்புக்குப் பிரதமரையும் ஆட்சியையும் வழங்கலாம்
3. நாடாளுமன்றத்தை மீண்டும் ஒத்திவைக்கலாம்.

4. தேர்தல் ஒன்றுக்கு முன்னதாக, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கான அறிவிப்பை விடுக்கலாம்.
ஆனால், நாடாளுமன்றம் நேற்றுக்காலை கூடிய போது, நிலைமைகள் வேறு விதமாக இருந்தன. சபை நடவடிக்கைகள் ஆரம்பமானபோது, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இராஜதந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் களரியில் நிரம்பியிருந்தனர். அதேபோல, ஒவ்வொரு வீட்டிலும், மக்கள் தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்து கொண்டும், ‘பேஸ்புக்’ ஊடாகவும் நேரடி ஒளிபரப்பை, ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேற்று, நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமான போது, சபைக்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் ஆசனத்திலேயே அமர்ந்தார். அதன் பின்னர் விசேட உரையொன்றை ஆற்றினார்.

அவர் தனதுரையில், “நான் பிரதமராக வந்தபோது, நாட்டு மக்களிடையே எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டன” என்று குறிப்பிட்டார். குறிப்பாக, பிரதமரை நியமிப்பது, ஜனாதிபதிதான் என்று கூறிய மஹிந்த, ‌சபாநாயகர் நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில், தவறாக நடந்து கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

கடைசியாக, “தீர்ப்பை மக்களிடம் விடுங்கள். தேர்தல் ஒன்றுக்கு செல்லுங்கள். மக்கள் விடுதலை முன்னணி, தேர்தலுக்குத் தயார் எனக் கூறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி என்ன சொல்கின்றது” என்று, தனது உரையை நிறைவு செய்தார்.

இதன்பின் எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி, மஹிந்த ராஜபக்‌ஷவின் உரை மீது, நம்பிக்கை இல்லை என்பதால், அந்த நம்பிக்கையீனத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்னுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் வாக்கெடுப்பு நடத்த முற்பட்ட வேளையில், சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. சபாநாயகரின் கதிரை சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து, சபாநாயகர் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 5 =

*