;
Athirady Tamil News

கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க? ( “கட்டுரை”)

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்த விவகாரமும், அதுசார்ந்து நடத்தப்பட்ட பேச்சுகளும் இணக்கப்பாடுகளும், இப்போது பரவலாக விவாதிக்கப்படும் விடயமாக மாறியிருக்கிறது. இதை அரசியலாக்குவதில், கூட்டமைப்பின் போட்டியாளர்களும், ஐ.தே.கவின் அரசியல் எதிரிகளும், முனைப்புக் காட்டி வருவதால், இந்த விவகாரம், இன்னும் சூடு பிடித்திருக்கிறது.

ஒக்டோபர் 26ஆம் திகதி, அரசியல் குழப்பங்கள் ஆரம்பித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்தப் பக்கம் நிற்கப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று 2010, 2015 ஜனாதிபதித் தேர்தல்களில், கூட்டமைப்பு கங்கணம் கட்டி நின்றதோ, அதே மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கூட, பேரம் பேசலாம் என்றொரு தெரிவையும் அப்போது பலரும் முன்வைத்திருந்தனர்.

மஹிந்த ராஜபக்‌ஷ பேசுவதற்கு அழைத்தபோது, இரா. சம்பந்தன், அவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியும் இருந்தார். ஆனாலும், அதற்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.

“நாட்டின் அரசமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வகையில், செயற்படுவோம்” என்று அறிவித்தது. நாடாளுமன்றத்தில் மஹிந்த தரப்பைத் தோற்கடிப்பதிலும், அதுசார்ந்த நடவடிக்கைகளிலும் கூட்டமைப்பு பங்களித்தது. அதற்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என்று, ஜனாதிபதிக்கு சத்தியக் கடதாசியைக் கொடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே, இப்போது நாடாளுமன்றத்தில், ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது கூட்டமைப்பு. கூட்டமைப்பின் இந்த முடிவு, நகர்வு தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

“கூட்டமைப்பு எப்போதும், ஐ.தே.கவின் தோழனாகவே இருந்து வந்திருக்கிறது” என்கிறார்கள் சிலர்.
“இந்தியா, மேற்குலகின் கைப்பொம்மையாகச் செயற்படும் கூட்டமைப்பு, அவர்களின் நலனுக்காக, அவர்களின் சொற்படி, ரணிலை ஆதரித்தது” என்கிறார்கள் இன்னும் சிலர்.

வடக்கு, கிழக்கு அரசியலில் உள்ளவர்களின் கருத்து இது என்றால், தெற்கு அரசியலில், இந்த ஆதரவை, வேறுவிதமாகத் திருப்பி விடும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2001இல், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில், போர்நிறுத்தம் செய்து கொள்ளப்பட்டபோது, தென்னிலங்கை இனவாதிகளால் ‘யானை – புலி உடன்பாடு’ என்று விமர்சிக்கப்பட்டது.

அதேபோன்று தான், இப்போதும், சம்பந்தனும், ரணிலும் இரகசிய உடன்பாடு செய்துள்ளனர் என்றும், யானை – புலி உடன்பாடு என்றும், சிங்களத் தேசியவாத சக்திகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. இதைப் புலம்பெயர் தமிழர்களின் சதி என்றும், ஈழத்தை, சமஷ்டியைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சி என்றும் விமர்சிக்கின்றனர். இந்தளவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது, புலம்பெயர் சமூகத்தின் ஈடுபாடு மிகக்குறைவானது என்பதே உண்மை.

ஆனாலும், ரணில் – சம்பந்தன் இணக்கப்பாட்டை, தவறான நோக்கில் சித்திரிக்கவே, தெற்கின் கடும்போக்குவாத சக்திகள் முயற்சிக்கின்றன. ஏனென்றால், அதன் ஊடாகத்தான், அவர்களால் அரசியல் இலாபத்தை அடைய முடியும்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான பிரேரணைக்கு, கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று, ஜனாதிபதி சிறிசேன, கடைசி நேரத்தில் கூட கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அதற்குக் கூட்டமைப்பு இணங்கவில்லை.

கூட்டமைப்பின் ஆதரவுடன், ரணில் விக்கிரமசிங்க, தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபித்து விட்டார் என்பதை, ஏற்றுக்கொள்ளத் தாயாராக இல்லாத மஹிந்த- மைத்திரி தரப்புகள், கூட்டமைப்பைத் திட்டித் தீர்ப்பதில் ஆச்சரியமில்லை.

இதை ‘யானை – புலி’ உடன்பாடு என்றும், சமஷ்டியை, ஈழத்தை வழங்கும் இணக்கப்பாடு என்றும் விமர்சிக்கும் தரப்புகளுக்கு, இவற்றில் எதையும் ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கமுடியாது என்பது, நன்றாகவே தெரியும்.

ரணில் விக்கிரமசிங்க, தனது பதவியைத் தக்க வைப்பதற்கே, கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் நிலையில் இருக்கும் போது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அவர் எப்படி சமஷ்டி அரசமைப்பை நிறைவேற்ற முடியும்? எனவே, சிங்கள மக்கள் மத்தியில், தவறான கருத்தை ஏற்படுத்துவதற்காகவே, இந்த ‘யானை- புலி’ உடன்பாடு பற்றிய பிரசாரங்கள் அமைந்திருக்கின்றன.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிக்கும் விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே, கடுமையான வாதப்பிரதிவாதங்களும் இழுபறிகளும் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிட வேண்டிய விடயம். ரணில் விக்கிரமசிங்கவிடம், கூட்டமைப்பு நிபந்தனைகளை விதித்து, எழுத்துமூல உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று, ஒற்றைக்காலில் நின்றது, பங்காளிக் கட்சியான டெலோ. ஆனால், எந்தவிதமான எழுத்துமூல உடன்பாடும் செய்து கொள்ளப்படாமலேயே, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு அளித்திருக்கின்றனர்.

கூட்டமைப்புடன், எழுத்து மூலமான எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்று, ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தவிசாளர் கபீர் காசிமும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பதும், கவனத்தில் கொள்ளத்தக்கது. எதிர்க்கட்சியாக இருந்தே, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டில், உறுதியாக இருப்பதாகக் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு, கூட்டமைப்பு நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு அளித்ததா, நிபந்தனையின்றி ஆதரவு அளித்ததா என்ற குழப்பங்கள் நீடிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அளித்துள்ள செவ்வி ஒன்றில், “மஹிந்த ராஜபக்‌ஷ வரக்கூடாது என்பதற்காகவே, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தோம்; வேறு எந்த உடன்பாடும் செய்து கொள்ளவில்லை” என்று கூறியிருக்கிறார். அதாவது, ‘எதிரிக்கு எதிரி’ என்பதால், ரணில் கூட்டமைப்பின் நண்பன் ஆகிவிட்டார்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர், தர்மலிங்கம் சித்தார்த்தனும், சாந்தி சிறீஸ்கந்தராஜாவும், நிபந்தனைகளின் அடிப்படையில், இணக்கப்பாட்டின் அடிப்படையில் தான் ஆதரவு அளிக்கப்பட்டது என்று கூறியிருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி, சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பான பிரச்சினை, காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, மாகாண சபைகளைப் பலப்படுத்துதல், புதிய அரசமைப்பின் ஊடான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில், ரணிலுடன், கூட்டமைப்பு இணக்கப்பாட்டை எட்டியிருக்கிறது.
இதுதொடர்பாக, எழுத்து மூல உறுதிப்பாடு அளிக்கப்பட்டதா என்பதை, இரண்டு தரப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஐ.தே.க தரப்பில், இந்த விடயங்களில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை, சாந்தி சிறீஸ்கந்தராஜா கூறியிருக்கிறார்.

இந்த உறுதிமொழிகள் தொடர்பான இணக்கப்பாடு, நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதாகவும், ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வின் போதும், இதன் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க இணங்கிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கூட, “வடக்கு, கிழக்கு மக்களுக்கு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் எதையும் செய்யத் தவறிவிட்டோம்” என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இது முக்கியமான விடயம். அடுத்து வரும் காலத்தில், அவற்றைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவும் கிட்டத்தட்ட அதேவாக்குறுதியை நாடாளுமன்றத்தில் கொடுத்திருந்தாலும், அவரது உரையில் கூறப்பட்டிருக்கும் விடயம் ஒன்று சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. ஒற்றையாட்சி என்ற விடயமே அது.

“பிரிக்கப்படாத நாட்டுக்குள், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசமைப்பு ஒன்றின் மூலம், அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம்” என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு சமஷ்டியாக இருக்கும் போது, அதை வலியுறுத்தும் போது, ஒற்றையாட்சி நிலைப்பாட்டைப் பகிரங்கமாக அறிவிக்கும் ரணில் விக்கிரமசிங்கவை, ஆதரிக்க முடிவு செய்தது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கூட, இந்தச் சூழல் சிக்கலானது. எஞ்சியிருக்கும் குறுகிய காலத்துக்குள் எதையாவது செய்து, தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்து விட வேண்டும் என்பதில், கவனமாக இருக்கிறது.

அதற்கு, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள, கூட்டமைப்பு முற்பட்டிருந்தாலும், கொள்கை சார் அரசியல் என்று வருகின்றபோது, கூட்டமைப்பு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

ஏற்கெனவே, கடந்த மூன்றரை ஆண்டுகளில், கூட்டு அரசாங்கத்தின் பங்காளியாகவே, விமர்சிக்கப்பட்டு வந்த கூட்டமைப்பு, ரணில் மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால், அதைவிட மோசமான எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வாறான விமர்சனங்களைச் செய்வோரின் வாயை, கூட்டமைப்பு அடைப்பதற்கு, ஐ.தே.க தான் உதவ வேண்டியிருக்கும். அதற்கு, ஐ.தே.க எந்தளவுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 2 =

*