;
Athirady Tamil News

ஓய்ந்தது அரசமைப்பு நெருக்கடி; ஓயாத அரசியல் நெருக்கடி!! (கட்டுரை)

0

ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ரணில் மீண்டும் பிரதமரானால் நான் ஒரு மணித்தியாலமேனும் பதவியில் இருக்க மாட்டேன்” என்று கூறினார். மற்றுமொரு முறை அவர், “நாடாளுமன்றத்தில் 225 பேரும் விரும்பினாலும் நான், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப்போவதில்லை” எனக் கூறினார்.

ஆனால், இப்போது அவரே, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்து, அவரோடு அரசாங்கத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒக்டோபர் 26ஆம் திகதி, பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் காலடி வைக்காமலேயே, பதவியை ஏற்று 50 நாள்களில், அதாவது டிசெம்பர் 15ஆம் திகதி, அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துவிட்டார்.

நவம்பர் மாதம் 14ஆம் திகதியும் 16ஆம் திகதியும், நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகள், முறைப்படி நிறைவேற்றப்படவில்லை என்று வைத்துக் கொண்டாலும், மிகவும் குறுகிய காலம் (50 நாள்கள்) பதவி வகித்த பிரதமராக மஹிந்த, இலங்கை வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முறையாக நிறைவேற்றப்பட்டதால், மஹிந்த ராஜபக்‌ஷ உண்மையிலேயே பதவி வகித்த காலம் 19 நாள்களாகும். இதற்கு முன்னர் டட்லி சேனாநாயக்க, 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை (காபந்து அரசாங்கம் உட்பட) பதவியில் இருந்து நிலைநாட்டிய சாதனையையே மஹிந்த ராஜபக்‌ஷ முறியடித்துள்ளார்.

தாம் விடுத்த சவாலில் ஜனாதிபதி தோல்வியடைவதற்கும் மஹிந்த இந்தச் சாதனையைப் படைப்பதற்கும் காரணம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரைப் பிரதமராக, ஜனாதிபதி நியமித்தமையாகும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என்று, தாம் கருதும் உறுப்பினரையே பிரதமராக, ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என, அரசமைப்பு கூறுகிறது.

மஹிந்த ராஜபக்‌ஷ, பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என, ஒக்டோபர் 26ஆம் திகதி உண்மையிலேயே ஜனாதிபதி கருதினாரா? அவ்வாறு கருதினால் எந்த அடிப்படையில் அவ்வாறு கருதினார்?

இந்த வினாக்களுக்கான விடைகளில், அரசமைப்பை ஜனாதிபதி மீறினாரா என்ற வினாவுக்கும், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக, நாட்டில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிக்கு, யார் பொறுப்பு என்ற வினாவுக்குமான விடையைக் காண முடியும்.

கடந்த சனிக்கிழமை, கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள தமது இல்லத்தில், தமது ஆதரவாளர்கள் மத்தியில் அறிக்கையொன்றை வெளியிட்டுவிட்டு, மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்வதாக அறிவித்தார். அத்தோடு, அங்கேயே எங்கும் ஒருபோதும் நடக்காதவாறு, வைபவ ரீதியாகத் தமது இராஜினாமாக் கடிதத்தில் கையொப்பமிட்டார்.

அங்கு, அவர் ஆற்றிய உரையின் போது, தமது அரசியல் எதிரிகள், பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் சென்றதாகவும் பொதுத் தேர்தலுக்குப் போக முடியாத பிரதமர் பதவியில் அர்த்தம் இல்லாததனால், தாம் இராஜினாமாச் செய்வதாகவும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக, எவரும் நீதிமன்றம் செல்லவில்லை. மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைப் பலத்தைத் திரட்டிக் கொள்ள முடியாததன் காரணமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்துக்கு முரணான முறையில், நவம்பர் ஒன்பதாம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதை எதிர்த்தே, அரசியல் கட்சிகள், சிவில் சமூக நிறுவனங்கள், தனி நபர்கள் எனச் சிலர் நீதிமன்றம் சென்றார்கள்.

நாடாளுமன்றத்தைக் கலைத்தால், அடுத்து, பொதுத் தேர்தல் வருவது நிச்சயம் தான். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்ந்த, இந்த வழக்கின் மனுதாரர்களில் எவரும் பொதுத் தேர்தலை எதிர்க்கவில்லை.

நாடாளுமன்றம் முதன் முறையாகக் கூடியதிலிருந்து, நாலரை ஆண்டுகள் செல்லும் வரை, அதைக் கலைக்க முடியாது என்று சட்டத்தில் இருக்கும் போது, அந்தச் சட்டத்தை மதியாது, நாடாளுமன்றத்தைக் கலைத்ததை எதிர்த்தே, வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது, சட்டத்தின் ஆட்சி இருக்க வேண்டும் என்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். அதைத் தேர்தலுக்கு எதிரான நடவடிக்கையாகச் சித்திரிப்பது, மக்களைத் தவறாக வழிநடத்துவதாகும்.

மஹிந்த தேர்தலை நடத்தும் நோக்கில், குறுகிய காலத்துக்கே பிரதமர் பதவியை ஏற்றார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகத் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும், கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார். இதுவும் உண்மையல்ல.

தேர்தல் தேவை என்பதால்தான், ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என்றால், அவர் அதற்காக ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து, மஹிந்தவைப் பிரதமராக நியமித்துவிட்டு, அதனை ஏன் செய்ய வேண்டும்? அவற்றைச் செய்யாமலேயே, ஒக்டோபர் 26ஆம் திகதியே, நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்கலாமே?

நடந்தது என்னவென்றால், ஆரம்பத்தில் மஹிந்த ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்குகளுக்கு, ஐ.தே.க இடையூறு செய்ததால், மஹிந்த மீண்டும் பதவிக்கு வந்தால், தமக்கு ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து, ஐ.தே.கவோடு முரண்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால பின்னர், ரணில் தம்மை மதியாது முடிவுகளை எடுப்பதால், மேலும் ஆத்திரமடைந்து இருந்தார்.

அத்தோடு, பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, மஹிந்த ஆட்சி நிச்சயம் வரப் போகிறது என உணர்ந்து, ராஜபக்‌ஷக்களை சிறைக்கு அனுப்பும் நோக்கத்தை, மைத்திரி கைவிட்டு, மஹிந்தவுடன் இணைந்து செயற்பட வழிகளைத் தேடலானார்.

அதனிடையே, மஹிந்தவின் குடும்பத்தினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிராகச் சில வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இழுத்தடிக்கப்பட்டும் வந்தன. அந்த வழக்குகளில் இருந்து, தமது குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் தப்புவிக்கும் வழிகளை, மஹிந்தவும் ஆராய்ந்து வந்தார். அந்த நிலையில் தான், மஹிந்தவிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து, தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள, மைத்திரி ஒக்டோபர் 26ஆம் திகதி மேற்படி அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.

வழக்குகளைக் கருத்தில் கொண்டு, மஹிந்தவும் அதற்கு இணங்கினார். பிரதமராகப் பதவிக்கு வந்தவுடன், சில முக்கிய இரகசியப் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் மஹிந்த முயற்சி செய்தார்.

இதனிடையே, மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாததால், அவர் அதைத் தேடிக் கொள்ளும் வகையில், மைத்திரி முதலில் ஒக்டோபர் 27ஆம் திகதியே, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைத்தார். நவம்பர் 14ஆம் திகதி, நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போதும், மஹிந்தவுக்குப் பெரும்பான்மையைத் தேடிக் கொள்ள முடியாது போகும் என்று, அறிந்தே அவர், நவம்பர் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவங்களின் போது, சில சுவாரஷ்யமான விடயங்களும் இடம்பெற்றன. மஹிந்த, பிரதமராகப் பதவியேற்ற போது, மகிழ்ச்சியில் குதித்த அவரது ஆதரவாளர்கள், இராஜினாமாச் செய்வதாக மஹிந்த, கடந்த சனிக்கிழமை அறிவித்த போதும் கைதட்டினர். ஆனால், அவர்களது முகங்கள் மகிழ்ச்சியின்றி, இறுக்கமாகவே காணப்பட்டன.

அதேபோல், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும் போது, அவரும் ஜனாதிபதியும் முடிந்த வரை, ஒருவரது முகத்தை மற்றவர் பார்ப்பதைத் தவிர்க்க எடுத்த முயற்சியும் விசித்திரமான காட்சியாகவே இருந்தது.

மஹிந்தவின் பிரதமர் பதவி, நம்பிக்கையில்லாப் பிரேரணைகளோடு இரத்தாகிவிட்டதாகவும் அவருக்கு, இராஜினாமாச் செய்ய பிரதமர் பதவியொன்று இருக்கவில்லை என்றும் மஹிந்த, பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்த போது, ஐ.தே.கவினர் கூறினர். அது உண்மைதான்.

ஆனால், அதேபோல் ஒக்டோபர் 26ஆம் திகதி, ஜனாதிபதி தம்மைப் பதவி நீக்கம் செய்தமை, சட்ட விரோதமானது எனவும் எனவே, தாமே பிரதமராக இருப்பதாகவும் கூறி வந்த ரணில் விக்கிரமசிங்க, கடந்த சனிக்கிழமை மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அப்போதும் அவர், தான் சட்டப்படி பிரதமர் என்றால், அவர் ஏன், மீண்டும் பதவி ஏற்க வேண்டும்?

பிரதமர் நியமனம், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான சட்டப் பிரமாணங்கள், சாதாரண மக்களும் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில், தெளிவாக இருக்கையில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான ஜனாதிபதி, ஏன் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரைப் பிரதமராக நியமித்தார் என்பதும், நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என்பதும், புரியாத புதிராகவே இருக்கிறது.

ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்த நீக்குவதற்கு முதல் வாரத்தில், ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகையில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் பேட்டியொன்று பிரசுரமாகி இருந்தது.

ரணிலைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, மஹிந்தவைப் பிரதமராக்க ஜனாதிபதியால் முடியும் என, அவர் சில அரசமைப்பு, தேர்தல் சட்டப் பிரமாணங்களை எடுத்துக் காட்டிக் கூறியிருந்தார்.

அதே, சட்டப் பிரமாணங்களைத் தான், ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, ரணிலை நீக்கிவிட்டு மஹிந்தவைப் பிரதமர் பதவியில் அமர்த்திய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டு இருந்தார். எனவே, சரத் என் சில்வாவே, ஜனாதிபதிக்கு இந்த ஆலோசனையை வழங்கினார் என, ஊகிப்பதில் தவறில்லை.

ஐ.தே.க தொடர்ந்தும் ஜனாதிபதியைப் புறக்கணித்து, அவரை மதியாது செயற்பட்டு வந்த நிலையில், இந்த நெருக்கடிக்கு ஐ.தே.கவும் பொறுப்பை ஏற்கத்தான் வேண்டும். ஐ.தே.க மீதான, ஜனாதிபதியின் கோபம் நியாயமானது தான். ஆனால், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் படி, அதனை எதிர்த்து, இந்தச் சந்தர்ப்பத்தில் அவரால் எதையும் செய்ய முடியாது. அந்தத் திருத்தம், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யாவிட்டாலும், அதற்கு அண்டிய ஒரு நிலைக்கு, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்துள்ளது.

அரசமைப்புச் சபையின் அங்கிகாரமின்றி, அவரால் எந்தவொரு நியமனத்தையும் வழங்க முடியாது. பிரதமரின் ஆலோசனைப் படியே, அமைச்சர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறே, அவர்களுக்குரிய திணைக்களங்களை ஒதுக்க வேண்டும்.

பிரதமருக்கு அவ்வாறான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. பிரதமர் எவ்வாறு நடந்து கொண்டாலும், அவரை நீக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் தெளிவான சட்டப் பிரமாணங்கள் இல்லை.

அரசமைப்பின் சிங்கள பிரதியில் மட்டும், அதற்கான தெளிவற்ற ஒரு வாசகம் இருக்கிறது. பிரதமரும் அரசாங்கமும் எவ்வாறு நடந்து கொண்டாலும், அரசாங்கத்துக்கான ஐந்தாண்டு பதவிக் காலத்தில், நாலரை ஆண்டுகள் செல்லும் வரை அரசாங்கத்தை கலைக்க முடியாது.

மஹிந்தவின் எதேச்சாதிகார ஆட்சியின் காரணமாக, நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக எழுந்திருந்த எதிர்ப்பால், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் கை கால்கள் இவ்வாறு கட்டிப் போடப்படும் போது, எவரும் அதைப் பாதகமானதாகக் கருதவில்லை.

இப்போது, அது அரசியல், அரசமைப்பு நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. ஜனாதிபதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள 19ஆவது அரசமைப்புத் திருத்தம், பிரதமருக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. பிரதமர்கள் எதேச்சாதிகாரமாக நடந்து கொள்ள மாட்டார்களா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே, ரணில் அரசாங்கத்தை நிறுவியுள்ளார். கூட்டமைப்பு அதற்கு முன்வராவிட்டால், அரசியல் நெருக்கடி இந்தளவிலாவது தீர்ந்திருக்காது. கூட்டமைப்பிடமே, தற்போதைய நெருக்கடிக்கான தீர்வின் சாவி இருப்பதாக, கடந்த ஐந்தாம் திகதிய கட்டுரையில் கூறியிருந்தோம்.

ஆனால், தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஐ.தே.க அரசாங்கத்தை ஆதரிக்க முடியாது. அவ்வாறு, ஆதரிப்பதாக இருந்தால் கைதிகள், காணிகள், புதிய அரசமைப்பு போன்ற கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஐ.தே.க நிறைவேற்ற வேண்டும்.

அவற்றில், அரசமைப்பு பற்றிய நிபந்தனையை ஐ.தே.கவால் நிறைவேற்ற முடியாது. இந்த நிலையில், ஐ.தே.கவுக்கான கூட்டமைப்பின் ஆதரவு தொடருமானால் இரு சாராரினதும் போட்டியாளர்களின் கைகள் ஓங்கும். அடுத்த பொதுத் தேர்தலின் போது, அது அவ்விரு கட்சிகளையும் பாதிக்கும்.

இந்த அரசியல் நெருக்கடி, ஐ.தே.கவை ஒரு படி உயர்த்திவிட்டது. ஐ.தே.கவுக்குள் ஒற்றுமையைப் பலப்படுத்திவிட்டது. ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ நெருங்கும் போது, பொருளாதார நெருக்கடி, கூட்டமைப்புடனான உறவின் காரணமாக, எதிர்க்கட்சி இனவாதத்தைத் தூண்டுதல், ஜனாதிபதியின் சூழ்ச்சிகள் போன்ற காரணங்களால் ஐ.தே.கவின் நிலை மோசமடையும்.

அத்தோடு, கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின் போது, ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த 15 இலட்சம் வாக்குகளில் பெரும்பகுதி, மஹிந்தவுடன் சேர்ந்துவிடும்.

எனவே, இப்போதே நாடாளுமன்றப் பிரேரணையொன்றின் மூலம், பொதுத் தேர்தலொன்றுக்குப் போவதே, ஐ.தே.கவுக்குச் சாதகமானதாக அமையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + fourteen =

*