;
Athirady Tamil News

திருநீறு!! (கட்டுரை)

0

சைவர்களால் நெற்றியில் தரிக்கப்படும் புனித சின்னம், இந்துக்களின் ஐஸ்வர்யம் என அழைக்கப்படும் சிவ சின்னம் திருநீறு. இது ஞானம் எனும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சி இருப்பது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை குறிக்கின்றது. விபூதியின் புனிதத் தன்மையும் சிறப்பும் பல்வேறு புராணங்களிலும் திருமுறைகளிலும் சித்தர் பரிபூரணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்

செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு

மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும்

வேகானந்த மானதொரு நீற்றை வாங்கி

வையடா சவ்வாதுவுடனேபு னுகு சேர்ந்து

மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி

மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி

மார்க்கமுடன் அரசாரிடன் சென்று பாரே.

-அகத்தியர் பரிபூரணம்.

சிவனின் ஐந்து முகங்களில் இருந்து ஐந்து வகை பசுக்கள் தோன்றியதாகவும் அவை ஒவ்வொன்றிலிருந்தும் பெறப்படும் சாணத்தில் செய்யப்படும் திருநீறுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு என வீராகம ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

“சத்யோ சாதாத் விபூதிச்ச வாமாத் பசிதமே வச

அகோராத் பஸ்ம சம்சாத் புருசாத் சார நாமச”

ஈசானிய முகத்தில் இருந்து தோன்றிய சிவப்பு நிற பசு சுமனை. அதன் சாணத்தினால் ஆன திருநீறு ரட்சை எனப்படும்.

தற்புருஷ முகத்திலிருந்து தோன்றிய சாம்பல் நிற பசு சுசீலை. அதன் சாணத்தினால் ஆன திருநீறு சாரம் எனப்படும்.

அகோர முகத்தில் இருந்து தோன்றிய கருப்பு நிற பசு சுரபி. அதன் சாணத்தினால் ஆன திருநீறு பஸ்மம் எனப்படும்.

வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வெள்ளை நிற பசு பத்திரை. அதன் சாணத்தினால் ஆன திருநீறு பசிதம் எனப்படும்.

சத்தியோசாத முகத்தில் இருந்து தோன்றிய கபில நிற பசு தந்தை. அதன் சாணத்தினால் ஆன திருநீறு விபூதி எனப்படும்.

பசுவின் சாணத்தை தீயில் எரிக்கும் முறை அடிப்படையில் அதை சைவ விபூதி, வைதீக விபூதி என பிரிக்கலாம். சைவ விபூதியானது கல்பம், அணுகல்பம், உபகல்பம் மற்றும் அகல்பம் என நான்கு வகைப்படுத்துவர்.

கல்பம் – கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தை பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களான ஓம் ஹோம ஈசான மூர்த்தாய நமஹ, ஓம் ஹேம் தத்புருஷவக்த்ராய நமஹ, ஓம் ஹீம் அகோர இருதாய நமஹ, ஓம் ஹிம் வாம தேவ குவாற்யாய நமஹ ஓம் ஹம் சத்யோஜாத மூர்த்தயே நமஹ என்று கூறி அக்கினியில் எரித்து எடுப்பது கல்ப திருநீறு ஆகும்.

அணுகல்பம்

காடுகளில் கிடைக்கும் பசும்சாணங்களை கொண்டு முறைப்படி தயாரிக்கப்படும்.

உபகல்பம்

மாட்டு தொழுவத்திலோ அல்லது மாடு மேயும் இடங்களிலிருந்து பெறப்படும் சாணத்தை கொண்டு முறைப்படி தயாரிக்கப்படும் திருநீறு.

அகல்பம்

அனைவராலும் சேகரித்து வழங்கப்படும் சாணத்தை சுள்ளிகளால் எரித்து தயாரிக்கப்படும் திருநீறு.

வைதீக விபூதி இரண்டு வகைப்படும்.

புராதனி- பிரம்ம தேவர் யாகத்தில் உண்டானது. சத்தியோசாதை- வேதியர்களின் யாகத்தில் உண்டானது.

திருநீறு செய்வது எப்படி?

அருகம்புல்லை உண்ணும் ஆரோக்கியமான பசுமாட்டின் சாணத்தை சாணம் இடும் போது தாமரை இலையில் ஏந்திப் பிடித்து கொள்ள வேண்டும். இது பௌடிகம் என அழைக்கப்படும். இச் சாணத்துடன் பசும்பால், தயிர், நெய், பன்னீர், கோமியம் கைகளால் பிசைந்து உருண்டையாக்கி ஒவ்வொரு உருண்டைகளிலும் ஆட்காட்டி விரலால் சிறு குழிகளை உருவாக்க வேண்டும். இது முட்டகம் எனப்படும். பின்பு உமிகளை கொட்டி அதன்மேல் முட்டகங்களை மூடி எரிக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து சென்று தீயில் வந்த வெண்ணிற சாண உருண்டைகளை எடுத்து பொடிசெய்து சல்லடையில் சலித்து பின் வெண்நிற பருத்தி துணியில் போட்டு சலித்து எடுக்க வேண்டும். இதனுடன் பன்னீர் தெளித்து காற்றில் உலர வைக்க வேண்டும். மேலதிகமாக மல்லிகை, பிச்சி போன்ற பூக்களையும் வாசனைக்கு சேர்க்கலாம். வில்வத்தால் அல்லது சுரைக்குடுவைகளால் ஆன குடுவைகளிலோ செம்பு அல்லது மண்பானைகளில் இட்டோ தினமும் அணிந்து கொள்ளலாம்.

உடலில் திருநீறு அணியக்கூடிய பதினெட்டு இடங்கள்

1. தலை நடுவில் (உச்சி)

2. நெற்றி

3. மார்பு

4. தொப்புளுக்கு சற்று மேல்.

5. இடது தோள்

6. வலது தோள்

7. இடது கையின் நடுவில்

8. வலது கையின் நடுவில்

9. இடது மணிக்கட்டு

10. வலது மணிக்கட்டு

11. இடது இடுப்பு

12. வலது இடுப்பு

13. இடது கால் நடுவில்

14. வலது கால் நடுவில்

15. முதுகுக்குக் கீழ்

16. கழுத்து முழுவதும்

17. வலது காதில் ஒரு பொட்டு

18. இடது காதில் ஒரு பொட்டு

திருநீறு அணியும் முறைகள்

வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று கொண்டு, வலது கையின் பெருவிரல், மோதிர விரல் ஆகிய இரண்டு விரல்களால் விபூதியினை சிந்தாமல் எடுத்து ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களிலும் பெருவிரலினால் பரவி இறைவனை நினைத்து அண்ணாந்து பூசிக்கொள்ளல் வேண்டும்.

இரண்டு விதமாக விபூதியினை பூசிக் கொள்ளளாம்.

திரிபுண்டரமாக அதாவது மூன்று கோடுகளாக தரிப்பது. இது சமய தீட்சை கேட்வர்கள் பூசும் முறையாகும்.
உத்தூளனமாக அதாவது நெற்றி முழுவதும் பரவலாக தரிப்பது. இப்படி யார் வேண்டுமானாலும் விபூதி பூசலாம்.

திருநீற்றின் பயன்கள்

ஈரமான திருநீற்றினை குளித்தவுடன் அணிவதால் உடலின் மிகையான நீரை உறிஞ்சி நீர்க்கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்.

அதிகாலை எழுந்தவுடன் எம்மைச் சுற்றியுள்ள படுக்கையில் பல அணுக்கள் நமது சிந்தனையுடன் சிதறிக் கிடப்பதால் முகத்தை அலம்பி நீரில் நனைக்காத திருநீறை அணிவதால் அது தீய அணுக்களை அழிக்கும். அதுபோல் மாலையிலும் நோய் அணுக்கள் உலாவுகின்றதால் அவ்வேளையிலும் இவ்வாறு திருநீறை தரிப்பதால் நோய் அணுக்கள் நம்மை பாதிக்காது.

விபூதி சூரிய சக்தியை இலகுவாக நெற்றி வழியாக உள் கடத்தும்.

இரு புருவங்களுக்கு இடையிலான நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்புகள் இருப்பதனால் இவற்றின் வழியே வீணாக செல்லும் நமது சக்திகளை தடுக்கவும் மனவசியம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் விபூதி பூசுவது மற்றும் திலகம் இடுவது சிறந்தது.

மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும்.

ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்களை நீக்கும்.

உடலுக்கு மிக முக்கியமான ஓமோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டும்.

வாத, பித்த, கப நாடிகளை சமநிலைப்படுத்தக் கூடியது.

முறைப்படி செய்த திருநீற்றை உட்கொண்டால் உடம்பின் நாடிநரம்புகள் வலிமை அடையும்.

ஆக்கம்: பவதாரணி ரவீந்திரன்
பிரிட்டிஷ் கவுன்சில், யாழ்ப்பாணம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + ten =

*