;
Athirady Tamil News

சிங்கள பௌத்தர்களின் வாக்குகள் யாருக்கு ? (கட்டுரை)

0

உச்ச நீதிமன்ற தீர்ப்பானது நாட்டில் உருவாகிய அரசியல் நெருக்கடிகளை ஓரளவுக்கே தணிக்க உதவியது என்று தான் கூற வேண்டியுள்ளது. ஏனென்றால் ஜனாதிபதியும் அவரது புதிய நம்பிக்கையான மஹிந்தராஜபக்ஷ மற்றும் அவரது அணியினரும் கூறி வரும் கருத்துக்கள் நாட்டு மக்களை அந்த வகையிலேயே சிந்திக்க தூண்டியுள்ளன. உண்மையைக்கூறப்போனால் நாட்டில் இன்னும் அரசியல் நெருக்கடிகள் முற்றாக தீரவில்லை.என்ன தான் நீதித்துறை ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் வண்ணம் செயற்பட்டாலும் கூட அதிகார வர்க்கத்திலிருந்தே பழக்கப்பட்டு விட்ட அரசியல் பிரமுகர்கள் அதை மீறி செயற்படும் தந்திரோபாயத்திலிருந்து எப்போதும் விலகிச்செல்ல மாட்டர். நான்கரை வருடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தை கலைத்தது தவறு என்றும் அப்படி கலைப்பதாக இருந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற வேண்டியும் அவசியம் என்ற நீதிமன்ற தீர்ப்பானது ஜனாதிபதி மைத்திரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இரு வேறு காட்சிகளையே கண் முன்னே நிறுத்தியிருக்கும்.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதா இல்லையா என்ற கேள்வி ஜனாதிபதி மைத்திரிக்கும் பாராளுமன்ற அதிகாரத்தைப் பெறுவதென்றால் நிச்சயமாக அதை நோக்கியே காய்களை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் மஹிந்தவுக்கும் தோன்றியுள்ளது. ஆனால் பிரதமர் ரணிலுக்கு எப்படியாவது நடப்பு பாராளுமன்றை அதன் ஆயுட்காலம் முடிவடையும் வரை (அடுத்த வருட இறுதி வரை) கொண்டு செல்வதற்கே காய்களை நகர்த்துகிறார்.

ஏனென்றால் தற்போதைய பாராளுமன்றில் எந்த தேசிய கட்சிகளு.மே மூன்றிலிரண்டு ஆதரவை தக்க வைக்கக்கூடியதாக இல்லை. இந்நிலையில் அடுத்த வருட இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் இடம்பெறத்தக்கதாகவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்தான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் படி நான்கரை ஆண்டுகளுக்குப்பிறகு தற்போதைய ஜனாதிபதியானவர் தேர்தல் ஒன்றுக்குச்செல்லலாம் என்றாலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பிரதமர் ரணிலை தனது ஜனாதிபதி என்ற பதவி அதிகாரமே கடிவாளமிட்டு கட்டுப்படுத்தும் என்று மைத்திரி நினைக்கின்றார். அதே வேளை ரணில் ,மஹிந்த ,மைத்திரி மூவருமே நாட்டின் 70 வீதமான பௌத்த சிங்கள வாக்குகளை நம்பியிருக்கும் அரசியல்வாதிகளாவர். ஆனால் இந்த 70 வீதமான வாக்குகளும் தற்போது சிதறுண்டு இருப்பதை மறுக்க முடியாது. இவை ஐக்கிய தேசிய கட்சி,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் மஹிந்தவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய மூன்று கட்சிகளையும் சார்ந்து நிற்கின்றன.

மிகக்குறைவான அளவு வாக்குகளே மக்கள் விடுதலை முன்னணிக்கு உள்ளன. ஆகையால் இந்த பெரும்பான்மை வாக்குகளே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கப்போகின்றன. இந்நிலையில் இந்த பிரதான கட்சிகளும் எவ்வாறு அந்த வாக்குகளைப்பெறப்போகின்றன, இக்கட்சிகளுக்குள் எவை கூட்டாக செயற்படப்போகின்றன, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. ஏனெனில் பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சிகள் தனித்தனியாகவே போட்டியிட தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன ஆனால் ஜனாதிபதி தேர்தல் அப்படியன்று. அடுத்த ஐந்த வருடங்களுக்கான நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்ற அதிகாரத்தை தக்க வைக்க வேண்டிய பொறுப்பு அப்பதவிக்கு முன்பாக உள்ளது.

இறுதியாக இடம்பெற்ற தேர்தல்

நாட்டில் இறுதியாக இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் மஹிந்தவின் பொதுஜன முன்னணி 40% மான பௌத்த சிங்கள வாக்குகளை அள்ளியது. இதில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதோடு இணைந்து கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணி 29 வீதமான வாக்குகளைப்பெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன இணைந்து 12 வீதமான வாக்குகளைப்பெற்றன. மக்கள் விடுதலை முன்னணி 6 வீதமான வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 வீதமான வாக்குகளையும் பெற்றிருந்தன. எனினும் தேசிய அரசாங்கம் என்ற வகையில் சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியினர் தாம் 41 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்றதாகக்கூறினர்.

ஆனால் இவை அனைத்தும் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி சம்பவங்களுக்குக்குப்பின்னர் மாற்றமடைந்து விட்டன. தற்போது மஹிந்தவின் பொது ஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இணைந்த கூட்டணியின் வாக்கு வங்கியின் பலம் 52 % ஆக உள்ளது. ஆகவே இந்த கூட்டணியினால் தெரிவு செய்யப்படும் ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதி வேட்பாளராக்கினால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமென கூறப்படுகின்றது. கணிசமான சிங்கள பௌத்த வாக்குளைக்கொண்ட கூட்டணியாக இந்த மூன்று கட்சிகளும் விளங்குகின்றன. எனினும் இங்கு எழுந்திருக்கும் பிரச்சினை யார் அந்த வேட்பாளர் என்பது தான். அரசியலமைப்பின் படி ஜனாதிபதி மைத்ரி இன்னுமொரு தடவை அப்பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் 2015 ஆம் ஆண்டு பதவியேற்கும். போதே மைத்திரி தான் இரண்டாவது தடவை போட்டியிட மாட்.டேன் என நாட்டு மக்களுக்குக்கூறியிருந்தார். எனினும் தற்போதைய சூழ்நிலையில் அவரது கூற்றுக்களை நாட்டு மக்களும் ஏனையோரும் நம்பத்தயாரில்லாத நிலையே உள்ளது. காரணம் ரணில் மீண்டும் பிரதமரானால் தான் பதவி துறப்பதாக கூறியவர் தான் இவர்.

அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப உறுதிமொழிகளை செயற்படுத்த முடியாத நிலைமை இங்கு ஜனாதிபதிக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும் உள்ளது. இதை மக்களும் உணர்ந்து தான் இருக்கின்றனர். இந்நிலையில் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் அடுத்த பிரதமர் வேட்பாளராக மஹிந்தவையே மைத்ரி களமிறக்க வேண்டும். ஏனென்றால் மஹிந்தவால் ஜனாதிபதி வேட்பாளராக முடியாது அவரது மகன் நாமலுக்கும் வயதும் பொருத்தமாக இல்லை. (ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகளில் வேட்பாளர் 35 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்) மஹிந்தவின் அடுத்த தெரிவான கோத்தா மற்றும் பஷில் இருவருமே இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் . மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஆளுமையை கொண்டிருக்கின்றாரா என்பது சந்தேகமே. அதே வேளை கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய ஆளுமையைக்கொண்டிருக்கக்கூடிய வேறு எவரையும் மைத்திரியாலும் மஹிந்தவாலும் அடையாளம் காண முடியாத சூழ்நிலைகள் உள்ளன. எனினும் மஹிந்த ,மைத்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இணைவே பெரும்பான்மையான சிங்கள பெளத்த வாக்குகளைப்பெற்றிருக்கக்கூடிய அதே வேளை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய சாத்தியப்பாட்டைக்கொண்டிருக்கின்றது.

ரணிலின் நிலைமை

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி பெற்ற 29 வீதமான வாக்குகளில் 12 வீதமே சிங்கள பௌத்த வாக்குகளாகும். இதில் 5 வீதம் சிங்கள கத்தோலிக்க வாக்குகளாகும். மிகுதியான 12 வீதமான வாக்குகள் சிறுபான்மை கட்சிகளின் வாக்குகளாகும். அதே வேளை மக்கள் விடுதலை முன்னணி 6 வீதமான சிங்கள பௌத்த வாக்குகளைப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியைப்பொறுத்தவரை ரணிலே களமிறங்குவார் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. தான் வேட்பாளராக களமிறங்க மாட்டேன் என்பதை எச்சந்தர்ப்பத்திலும் ரணிலும் கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த / மைத்ரி இணைவு ஏற்பட்டால் நிச்சயமாக ரணிலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் நிபந்தனை ஆதரவு என்ற பெயரில் முன்வரும்.

உள்ளூராட்சி சபைத்தேர்தலில் இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளில் அடிப்படையில் 9வீதமான வாக்குகள் ஐ.தே.க பக்கம் சேரும். ஆகவே அதன் வாக்குபலம் 38 ஆகும். ஆகவே ஜனாதிபதிதேர்தலில் ௫௦ வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற ரணிலுக்கு தேவைப்படுவது மிகுதியான 13 வீதமான சிங்கள பௌத்த வாக்குகளேயாம்.இந்த வாக்குகளை அவர் எவ்வாறு பெறப்போகின்றார் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகின்றார் என்பதற்கு அவருக்கு இருக்கும் காலம் ஒரு வருடங்கள் மட்டுமே. ஆகவே அந்த ஒரு வருடத்தில் அவர் கிராமப்புற சிங்கள வாக்குகளையா அல்லது நகர்புறங்களில் உள்ள சிங்கள வாக்குகளையா திரட்டப்போகின்றார் என்பது அவரது செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. அல்லது இரண்டு பிரிவினரையும் திருப்தி படுத்தும் நோக்கில் என்ன அபிவிருத்தித்திட்டங்கள் அல்லது வாக்குறுதிகளை வழங்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும்.

இந்நிலையில் எப்படியும் இந்த கணக்கை கணித்திருக்கும் மஹிந்த /மைத்திரி அணி தொடர்ச்சியாக ரணிலுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்களையும் தயாரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலைப்பற்றி யோசிக்கவும் விடாது அடுத்த ஒரு வருடத்திற்கு பாராளுமன்றத்தையும் ஜனநாயாக ரீதியாக செயற்படுத்தவும் விடாது அழுத்தங்கள் கொடுப்பதற்கான தந்திரோபாயங்களே இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் சிங்கள பௌத்த வாக்குகளை பிரித்தெடுத்தல் என்பதிலேயே ரணிலின் அரசியல் வாழ்க்கை தங்கியுள்ளது என்பதையும் இங்கு மறுக்க முடியாது. அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தோடு ஜனாதிபதியின் பதவிக் காலம் நான்கரை ஆண்டுகளை கடக்கின்றது. சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து மைத்ரி உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்குச்செல்வாரா அல்லது 2020 இல் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா என்பது இலங்கை அரசியலைப்போன்றே குழப்பகரமான கேள்வியாகத்தான் உள்ளது.

Share

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 7 =

*