;
Athirady Tamil News

சாண் ஏற முழம் சறுக்குகிறதா விக்னேஸ்வரனிற்கு?… முதல் கூட்டத்தை நடத்த முடியாத நெருக்கடியில் “தமிழ் மக்கள் கூட்டமைப்பு”..!

0

ஒரு கட்சி ஆரம்பிப்பதென்பது தமிழ் சூழலில் சாதாரண விடயமாகி விட்டது. ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்து, தொடக்க நிகழ்வை வைக்கிறார்கள். ஆனால் அதன்பின்னர், அந்த கட்சிகள் எங்கே என்றே தெரியாமல் போய் விடுகின்றன.

அண்மையில் முன்னாள் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஒரு கட்சியை ஆரம்பித்தார். அதன் தொடக்க நிகழ்விலேயே ஆட்களை காணவில்லை. அது அனந்திக்கும் சங்கடத்தை கொடுத்தது. பின்னர், தனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களை சந்திக்கும்போது, “முதல் கூட்டம்தானே… அப்படித்தான் இருக்கும். போகப்போக சரியாகி விடும்“ என்றார்.

தமிழ் அரசியல் என்பது, அரச நிர்வாகத்துடன் ஒட்டி, அதன் வளங்களின் மூலம் மக்களின் அபிவிருத்தி பணியை செய்வதென மாறிவிட்டது. அதனால் பல கட்சிகள் தொடங்குகின்றன. ஆனால் எதுவும் நிலைக்கவில்லை.

அரச நிர்வாக பலத்துடன் அனந்தி இருந்தபோது கட்சி தொடங்கினார். ஆனால், இப்போது அவரது, கட்சியினது செயற்பாட்டை காணவில்லை.

இதே விபத்துத்தான் முன்னாள் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிற்கும் நடந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

காரணம்- அவரது தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை 20ம் திகதி நடத்துவதென்று திட்டமிட்டுத்தான், கடந்த ஓரிரண்டு மாதமாக செயற்பட்டு வந்தார். ஆனால், அவரால் திட்டமிட்டபடி 20ம் திகதி கூட்டத்தை நடத்த முடியவில்லை. நாளை அப்படியொரு கூட்டம் நடப்பதாக இதுவரை எந்த தகவலும் இல்லையல்லவா!

வடக்கு முதலமைச்சராக இருந்த க.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறைகளை சுட்டிக்காட்டியபோது, அவர் மீது மக்களின் அபரிமிதமான ஆதரவு திரும்பியிருந்தது. கூட்டமைப்பிற்கு, அதிருப்தியாளர்களில் ஆக தலையிடியான அதிருப்தியாளர் அவர்தான்.

கூட்டமைப்பின் மீதான விமர்சனம் விக்னேஸ்வரனின் ஆதரவாக பரிணமித்திருந்தது. எனினும், அதை அவரால் இன்னொரு கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை போலத்தான் தெரிகிறது. அவரது கட்சி உருவாக்க பணிகளில் நிறைய சறுக்கல்கள் நடந்து வருகிறது. ஒரு ஆரம்ப முயற்சி பற்றிய நிறைய தகவல்களை வெளியிட்டு, அதை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாமலிருக்கலாமென்பதால், அது பற்றிய தகவல்களை தவிர்த்து விடுகிறோம். என்றாலும், பொதுவான அரசியல் எதிர்பார்ப்பு- விக்னேஸ்வரன் நினைத்ததை போல- அவரது கட்சி உருவாக்கும் பணி அமையவில்லை.

சாண் ஏற முழம் சறுக்கும் நிலையில்தான் உள்ளது.

வலுவான அமைப்பாளர்களை நியமிக்க முடியவில்லை. இப்போது அவரது கட்சியில் அதிகபட்ச செல்வாக்கானவராக, அவரை தவிர்த்தால், அருந்தவபாலன் ஒருவரைத்தான் சொல்ல முடியும்.

எனினும், பொதுமக்களை திரட்டும் கட்டமைப்பு அவர்களிடம் இல்லை. 20ம் திகதி கூட்டத்திற்காக பொதுமக்களை திரட்டும் பணிகளை, கட்சி முக்கியஸ்தர்களிடம் வழங்கியிருந்தார். ஆனால் அவர்களிற்கு அது சுலபமாக இருக்கவில்லையென அறிய முடிகிறது. கட்சி கட்டமைப்பையும் இன்னும் முழுமையாக உருவாக்கவில்லை.

சிங்கப்பூரில் உள்ள பேராசிரியர் சொர்ணராஜா, விக்னேஸ்வரனின் நெருக்கமான நண்பர். தமிழ் மக்கள் கூட்டணியின் கட்டமைப்பு அமெரிக்க அரச நிர்வாகத்தை ஒத்ததென முன்னர் குறிப்பிட்டிருந்தோம். கட்சிக்குள் அப்படியான கட்டமைப்பை சொர்ணராஜாதான் வடிவமைத்து கொடுத்திருக்கிறார். பன்னிரண்டு செயலாளர்களின் கீழ், கட்சியின் கட்டமைப்பு வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், நினைத்ததை போன்ற பலமான கட்சியொன்றை அவரால் உருவாக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று- அவரது கட்சிக்கு நிதி வழங்குனர்கள். புலம்பெயர் தேசங்களில் இருந்து நிதி வழங்குபவர்கள் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தால், அந்த காரியம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற வேண்டியிருக்கும். கனடா கிளை தமிழரசுக்கட்சிக்கு நிதி வழங்கி, முக்கிய முடிவுகளில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்ததால் நிறைய குழப்பங்கள் உருவாகியதல்லவா. அதுபோலத்தான் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் நடக்கிறது.

யாழ் பல்கலைகழக மாணவர்கள் மாவீரர்தினத்தை அனுட்டிக்க முயன்றபோது, இங்கிலாந்து மற்றும் சில நாடுகளில் இருந்து அவர்களை வழிநடத்தியவர்களை பற்றி தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். அந்த அணி இப்போது, தமிழ் மக்கள் கூட்டணிக்குள்ளும் செல்வாக்கு செலுத்துகிறது.

யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தை அந்த அணி தமிழ் மக்கள் கூட்டணியுடன் நெருக்கமாக்கியுள்ளது. எப்படியோ, விரைவில் இன்னொரு திகதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நடக்கும்.

அதில் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் பெரும் பங்கு வகித்தாலும் ஆச்சரியமில்லை!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*