;
Athirady Tamil News

‘தியாகி, ‘துரோகி’ என்ற இரு அந்தங்கள்!! (கட்டுரை)

0

போர் முடிவடைந்து, பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், எம்மை நாமே கேட்ட வேண்டிய கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளை, மனச்சுத்தியுடன் கேட்க வேண்டும். அதற்கான பதில்களையும் தேட வேண்டும்.

இதைச் செய்வதாயின் எம்மை நாமே சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். சுயவிமர்சனத்துக்குத் தயாரில்லாத மனிதர்களிடமோ, சமூகத்திடமோ எதிர்பார்க்க அதிகம் இல்லை.

இன்று விமர்சனத்துக்கோ, சுயவிமர்சனத்துக்கோ தயாரில்லாத சமூகமாக இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகமும் அதனிலும் மேலாக, புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் உள்ளது.

முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டமும், அதற்கு முந்தைய தமிழ்த்தேசிய அரசியலின் குறுந்தேசியவாதக் குணங்களும் அதற்கு வலுவான காரணிகளாக உள்ளன. ஜனநாயக மறுப்பின் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட விடுதலைப் போராட்டமும் அதன் வழிவந்த அரசியலும் இன்றுவரை தொடர்கிறது.

இன்று தமிழ்ச்சமூகம், ஒரு முக்கியமான திருப்பு முனையில் நிற்கிறது. ஒரு சமூகமாகத் தன்னைச் சுயவிமர்சனம் செய்து, தவறுகளில் இருந்து திருத்திக் கொண்டு, முன்செல்வதற்கான தேவை தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு.

இதில் எம் அனைவருக்கும் பங்குண்டு. நாம் அனைவரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளவும் கலந்து பேசவும் சேர்ந்து பணியாற்றவும் வேண்டும். அதற்கான அடிப்படை எமது சமூகத்தில் ஜனநாயகத் தன்மையை உறுதிப்படுத்துவதும் மாற்றுக் கருத்தை மதிப்பதுமே ஆகும்.

ஆண்டாண்டு காலமாக, இதைச் செய்யத் தவறியதன் துர்பலன்களை, இன்றும் தமிழர்கள் அனுபவிக்கிறார்கள். 1976ஆம் ஆண்டு, “தமிழீழத்தை வென்று தர, உங்களிடம் என்ன வேலைத்திட்டம் இருக்கிறது” என்று, ஒரு பகிரங்க விவாதத்தின் போது, கொம்யூனிஸ்ற்றான சண்முகதாசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தருமலிங்கத்திடம், ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் முன்னிலையில் கேட்டபோது, தருமலிங்கம் கூறிய பதில், “அது எங்கள் இரகசியம்” என்பது தான்.

அந்த இரகசியமும், ‘சிதம்பர இரகசியம்’ மாதிரி, இல்லாத ஒரு இரகசியமே. தருமலிங்கத்தின் பதில், தப்பியோடப் போதுமானதாக இருந்ததே ஒழிய, நேர்மையானதல்ல என்பதைப் பலரும் அறிவர்.

ஆனாலும், அந்தவிதமான இரகசியங்களாலேயே தமிழ் மக்கள் இன்னமும் வழிநடத்தப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து, “தனித் தமிழீழம் முடிந்த முடிவு; அது விவாததத்திற்குரியதல்ல” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் கூறி, பகிரங்க விவாதங்களைத் தடைசெய்தது, தமிழ்த் தேசிய ஜனநாயக மறுப்பு அரசியலின் ஒரு பகுதியாகும். ‘ஈழத்து காந்தி’, ‘தந்தை’ என மகுடமிடப்பட்டு அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகமோ அவரது ‘மைந்தர்களோ’, ‘பேரப்பிள்ளைகளோ’ தமிழ்ச் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு அன்றும் சரி, இன்றும் சரி, தயாராக இல்லை.

விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக விரிவடைந்த முதற்கொண்டு, தமிழ்ச் சமூகம், ‘தியாகி, ‘துரோகி’ என்ற இரு அந்தங்களில் இயங்கி வந்துள்ளது. இதன் எச்சங்கள், இன்னமும் எம்மத்தியில் உயிர்ப்புடன் இருக்கின்றன.

மாற்றுக் கருத்துகளைக் பேசவும், எழுதவும் கூடிய ஜனநாயக சூழல் உருப்பெறும் போதே, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எமது எதிர்காலத்தின் திசைவழிகள் குறித்துப் பரந்துபட்டதும் ஒன்றிணைந்ததுமான உரையாடலை எம்மால் நிகழ்த்த முடியும்.

இவற்றில் இருந்து ஒதுங்கிச் சும்மா இருப்பது சுகமாய்த் தெரியலாம். ஆனால், அவ்வாறு நினைப்பவர்களுக்கு எமது கடந்த காலத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

துரோகி எனத் தீர்த்து
முன் ஒரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக் கண்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை இட்டவனைச் சுட்டது
குற்றம் சாட்டியவனை
வழக்குரைத்தவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது
எதிர்த்தவனைச் சுட்டது
சும்மா இருந்தவனையும் சுட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + nine =

*