;
Athirady Tamil News

திருக்கேதீச்சரக் காணிக்கு சொந்தக்காரர் யார்? 125 ஆண்டு பழைமையான ஆவணம்!! (கட்டுரை)

0

திருக்கேதீச்சர ஆலய நிலம் மீண்டும் சைவசமயிகளுக் கானதாகிய மகிழ்ச்சியான செய்தியை 1893ஆம் ஆண்டு மார்கழி மாதம் பதின்மூன்றாம் திகதி வெளியான இந்துசாதன இதழ் பின்வருமாறு வர்ணித்திருந்தது.

“இன்றைய தினம் இலங்கையிலும் மற்றெங்கணுமுள்ள சைவர்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான தினம். இலங்கைச் சரித்திரத்திலும் குறிக்கப்படவேண்டிய ஒரு முக்கிய தினம். இலங்கைத் தீவில் மாதோட்டத்திற்குச் சமீபத்திலே ஒரு மருந்து இருக்கின்றது. ஒரு தேன்பொந்து இருக்கின்றது. ஒரு திரவியம் இருக்கின்றது என்று முதலிலறிந்து ஸ்ரீலஸ்ரீ நாவலர் அவர்கள் நமக்கெல்லாம் அறிவித்திருந்தார்கள். திருக்கேதீச்சரம் என்னும் சிவாலயத்துக்குரிய நிலத்தை அரசினரிடம் வாங்கி, அங்கு பழுதுபட்டுப்போயிருந்த ஆலயத்தைப் புதுப்பிக்கவேண்டுமென்று நாவலரவர்கள் இதற்கு இருபது வருஷங்களுக்கு முன் வெளியிட்ட நாள்தொட்டு இத்தேசத்திலுள்ள சைவர்கள் எல்லாரும் ஒரே மனசோடு “அடியவர்கள் குறைகள் தீர்த்தாண்டு அருள்வதே விரதம் பூண்ட” பெருங் கருணைக் கடலாகிய சிவபெருமானது திருவடிகளை நோக்கி அரிய பிரார்த்தனைகள் செய்தனர். இந்த நிலம் முன் இரண்டுமுறை வெந்தீசில் (ஏலத்தில்) விற்கும்படி குறிக்கப்பட்டிருந்தது. ஆயினும் சைவர்களுடைய தவம் பலிக்கும் காலஞ் சிறிதிருந்தமையால் அந்த நேரங்களில் அது விற்கப்படவில்லை.

இறுதியில் இன்று விற்கும்படி குறிக்கப்பட்டது. ஒன்றரை மாச காலம், இந்தக் கலியூகத்து நாலாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றைந்துக்குச் சரியாய் நிகழும் விசய வருடம் கார்த்திகை மதம் 29 ம் நாள் எப்போது பொழுது விடியுமென்று காத்திருந்தவர் அநேகர்.

அவர்களுடைய மனமெல்லாம் மலர இன்று காலையில் கோழிகள் கூவ மற்றும் பறவைகள் பாடியாரவாரிக்கச் சிவபெருமானுடைய மெய்ஞ்ஞானப்
பிரகாசம்போல் ஒளிமலரச் சூரியன் உதயமானான்.

நித்திய கருமம் முடித்துத் திருக்கேதீச்சர நாதருடைய திருவடிகளைத் தியானித்துக்கொண்டு சைவர்களெல்லாரும் இன்றைக்குப் 12 மணிக்கு
முன் யாழ்ப்பாணக் கச்சேரியில் வந்து கூடினார்கள். இந்த விஷயத்திற்போல வேறொன்றிலும் சைவர்கள் ஒற்றுமையூடையவர்களாய்த் திரளவில்லை. நாட்டுக்கோட்டைச் செட்டிமார் சகலரும் அங்கு வந்தார்கள். 25 சதம் சம்பாதிக்கிற கூலிக்காரர் தாமும் வந்தார்கள். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் இந்நாள் விடுதலை நாளாயிருந்தது. எல்லோரும் ஒற்றுமையூடையவர்களாய்த் தங்கள் தங்களாலியன்ற பொருளுபகரித்து நாட்டுக்கோட்டை நகரத்தாரையே சைவர்களுடைய உபயோகத்துக்காக அந்நிலத்தை வாங்கும்படி ஏற்பாடு செய்துகொண்டனர்.

கத்தோலிக்கக் கிறிஸ்தவரும் இந்தச் சமயத்தைத் தப்ப விடவில்லை. இந்த நிலம் சைவக்கோயிலிருந்த நிலமென் பதிற் சந்தேகம் சிறிதுமில்லை. கர்ப்பக்கிருக முதலான மண்டபங்களுடையதும் துவசத் தம்ப பீடம் முதலானவற்றினுடையவூம் அத்திவாரம் இன்றைக்குங் காணப்படுகின்றது. அத்திவாரத்தினுடைய ஆகிருதியெல்லாம் இது ஒரு சைவக் கோயிலென்பதை நன்றாகக் காட்டும்.

“றௌயல் ஏசியாட்டிக் சொசைற்றி” என்னும் கூட்டத்தாருடைய பத்தாம் இலக்கப் பத்திரிகைளிலும் போக்ஸ் (Mr. Boakes, C.C.S) என்பவரால் இது சைவக் கோயிலென்றும் அதன் சில வைபவங்களும் சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தின் மேற்செய்தருளிய தேவாரத் திருப்பதிகத்தின் மொழிபெயர்ப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன.

அரசினருடைய வெந்தீசு விளம்பரத்திலும் “திருக்கேதீச்சரம் என்னும் சைவக்கோவில் இருந்து அழிந்த நிலம் என்று காட்டப்பட்டிருக்கின்றது. இப்படியெல்லாமிருந்தும் இதில் ஒரு கிறிஸ்துவ ஆலயத்தைக் கட்டலாம் என்றெண்ணிப் போலும் கத்தோலிக்கக் கிறிஸ்தவரும் இந்நிலத்தை
வாய்விட்டுக் கேட்டார்கள். வயல், தோட்டம் செய்ய இந்நிலத்திலுள்ள அத்திபாரக்கற்கள் இடங்கொடா, வீடு கட்டி வாழலாமென்றால் இது காடு. புராதன சைவக்கோவில் நிலம் மூவாயிரத்து ஐம்பது ரூபாய் வரையிற் பெறும் என்று நினைத்தார்கள்.

புராதனமான சைவக்கோவில் நிலம் மூவாயிரத்து ஐம்பது ரூபா வரையிற் பெறுமென்று நினைத்தார்களே. இவர் மத விஷயங்களில் பிரவேசியாத பரமசாதுக்கள் என்பது இது வரையில் சிலருடைய கருத்து இந்தக் கத்தோலிக்கரைப் போலப் பத்துப்பேர் வந்தாலும் என்ன விலை வந்தாலும் வாங்கவேண்டுமென்பதே இங்குள்ளவர்களுடையதும் செட்டிமார்களுடையதும் கருத்து.

மதுரையிலிருந்து வேண்டிய பணமனுப்ப ஆயத்தமென்று தந்தி வந்தது. காலியிலிருந்து வந்தது. இங்குள்ளவர்களும் தங்கள் பணப்பைகளை அவிழ்க்கப் பூரண சித்தமுடையவர்களாயிருந்தார்கள். இப்படியெல்லாமிருந்தும் கத்தோலிக்கருடைய மதிப்பும் கேள்வியூம் மூவாயிரத்து ஐம்பது ரூபாவுக்கு மேலே போகவில்லை. இறுதியில் ஸ்ரீ பழனியப்ப செட்டியாருடைய கேள்விப்படி மூவாயிரத்தொரு நூறு ரூபாவாக மூன்றாம் முறை கூறி அவருக்குக் கொடுக்கப்பட்டது. உடனே அன்பர்களெல்லாரும் ஆனந்த பாஷ்யம் சொரியக் கரதலகோஷஞ் செய்தார்கள். தேவர்கள் கற்பக பூமாரி பெய்தது போலச் செட்டியார் ரூபாவைக் கட்டிவிட்டனர்.

இந்தத் திருக்கேதீச்சரம் இப்பொழுது எங்களுடைய நிலமாய் விட்டது. இனி எங்களுடைய பழைய கோயிலைக் கட்டுவதற்கு ஆரம்பிக்கத்
தடையில்லை. இதோ எல்லா இலிங்கங்களுக்குள்ளும் விசேஷமாகிய சுயம்புமூர்த்தி எழுந்தருளியிருக்குமிடம். இந்த நிலத்தில் ஒரு சிறு
மணலை யேனுமுடையவர்களுக்குச் சிவலோகத்தில் ஒய்யாரமாயிருக்கப் பெரிய இடமுண்டு. இங்குள்ள மூர்த்தி ஆவாகனாதி வேண்டாதே
பிரசன்னாராயிருந்து அருள் செய்பவர். இங்கே இறப்பவர்கள் எல்லாருக்கும் சிவபெருமான் வலக்காதிலே பிரணவோபதேசம் செய்வரென்று
தட்சிணகைலாச மான்மியத்திற் சொல்லப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகத்தில் “பாலாவியின் கரை மேற்றிடமா யூறைகின்றான் திருக்கேதீச்சரத்தானே” என்றும்இ திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகத்தில் “கேதீச்சரம் பிரியாரே” என்றும் அருளிச் செய்யப்பட்டது.

அவரங்கே திடமாயூறைகின்ற அந்த விசேஷமே இப்பொழுது இந்த நிலத்தை இவ்வளவூ சொற்ப விலையில் எங்களுக்கு ஆக்கியது.
அருள்வாக்கொன்றும் பொய்ப்பதில்லை. திடமாயூறைகின்றான் கேதீச்சரம் பிரியார் என்ற அந்தத் திருவாக்கும் பொய்க்காது. பொய்க்காது. ஒரு காலும் பொய்க்காது. சுவாமி அங்கே பிரசன்னராய் எழுந்தருளியிருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒருநிலத்தை வாங்கவூம் அதிலொரு கோயிலைக் கட்டவும் அதுவும் கிலமாயிருந்த ஒரு கோயிலைக் கட்டவும் பூருவ சென்மங்களில் நாங்கள் எவ்வளவு, எவ்வளவு தவஞ் செய்திருத்தல் வேண்டும். இந்த ஈழதேசத்திலே அருமருந்து இருக்கவும் அதை அருந்தாது இந்தியாவிலுள்ள கோயில்களுக்கு ஓடியோடிப்போகின்றௌம். அதனால் அங்குள்ளவர்களும் ஏதோ கொஞ்சம் தங்களூரைப் பெரிதாக எண்ணிக் கொள்கின்றார்கள். அங்குள்ளவர்தான் இங்குமிருக்கிறார். இங்கிருக்கிறவர்தான் அங்குமிருக்கிறார். அங்குள்ளவருக்கு உள்ள புராணங்களும் தேவாரங்களும் இங்குள்ளவருக்கும் இருக்கின்றன.

இங்குள்ளவருக்கு உள்ள அவை அங்குள்ளவருக்கும் இருக்கின்றன. இம்மகிமையை அறிந்து இந்தச் சிவாலயத் திருப்பணியை நடத்துந்திறமையூடையவர், இங்கு பலரிருப்பினும் நாட்டுக் கோட்டைச் செட்டிமாரளவு இதில் கைவந்தவர் மிகச் சிலரே. அதனால் இன்று வந்தவர்களெல்லாரும் அவர்கள் பேராலே வாங்கித் திருப்பணியை நடத்தும்படி விட்டிருக்கிறார்கள்.

செட்டிமாரிடம் கொடுக்கும் பணம் மோசம் போகா தென்பதற்கு நாம் யோக்கியதா பத்திரம் கொடுக்க வேண்டியதில்லை. சிதம்பரம், மதுரை,
திருவாரூர் முதலான தலங்களே கையோங்கிச் சாட்சியம் பகர்கின்றன. அவர்கள் மூலமாகவே இத்திருப்பணி நடக்கப்போகின்றதென்பதை
மாத்திரம் அறிவிக்கின்றௌம்.

மதுரைத் திருநகரங் கண்ட பாண்டியராசன் போல இத்தலத்தை செட்டிமார் புதுக்குவித்துச் சைவாகம விதிப்படி ஆதி சைவர்களை ஏற்படுத்திப் பூசை முதலானவைகள் செய்வித்து வருவாராயின் இது சீக்கிரம் பெரிய நகரமாய் விடும்.

இங்கு நகரத்துக்கு உகந்த மேட்டு நிலங்களுமுண்டு. வயல் நிலமாக்குவதற்குகந்த நிலங்களுமிருக்கின்றன. குடியிருக்கத்தக்க இடங்களுமிருக்கின்றன. இது சீக்கிரம் பட்டணமாக வேண்டும். இங்கே சைவப்பள்ளிக்கூடங்கள் வேண்டும். மடங்கள் வேண்டும்இ குளங்கள்
வேண்டும், சோலைகள் வேண்டும், புத்தகசாலை வேண்டும், பிரசங்க மண்டபம் வேண்டும், அத்தியயனசாலை வேண்டும், நாங்களும் எங்கள்
பிள்ளைகளும் போய் அங்கே குடியேற வேண்டும். அதனால் கவர்மெண்டும் நயமடைதல் வேண்டும்.

சோபனகரமான இவ்வெந்தீசு நடந்தவுடன் ஸ்ரீ இராகவப் பிள்ளை எல்லாருக்கும் சர்க்கரை வழங்கினர். சிவன் கோவிலில் பெரிய மணிகளெல்லாம் கணகணவென்று ஒலித்தன. சேர் ஆதர் ஹவலக் தேசாதிபதி அவர்களுடைய காலத்திலே மெஸ் துவைனந்துரை ஏசண்டராயிருக்கும் காலத்திலே நமக்கு இந்த நிலம் கிடைத்தது. அதனால் அத்தேசாதிபதியவர்களுக்கும் துவைனந்துரைக்கும் உபசாரம் சொல்லுகிறௌம்.

இத்தலம் மிக முக்கியமானதொன்றாதலால் சைவர்களுக்கெல்லாரும் இதற்கு உதவவேண்டும். உதவ விரும்புபவர்களெல்லாரும் ஷை.ராம. அரு.அரு.பழனியப்பச் செட்டியாருக்கும் அனுப்பலாம். நம்முடைய இத்தேகமிருக்கும்போதே நம்மைத் தரிசிக்கத் திருக்கேதீச்சரப் பிரபு அருள்செய்வார். “முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ” என்றார் சேக்கிழார் நாயனார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*