;
Athirady Tamil News

கிழக்கில் அரசியல் காத்திருப்புக்கு யார் கைகொடுப்பது? (கட்டுரை)

0

வடக்கு, கிழக்கு இணைந்த மொழிவாரி மாநில சுயாட்சி இல்லாமல், புதிய அரசமைப்பொன்று வருவது, தமிழர்களைப் பொறுத்தவரை தேவையற்றது என்ற கருத்துகள் நிலவுகின்ற போதும், அதற்கான வேலைகள் நடைபெறுவதாகத் தான் காண்பிக்கப்படுகிறது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பெற்ற பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்தத்தின் வாயிலாக, ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் சரத்துகள், அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 1987இலிருந்து இன்றுவரை, அதன் நோக்கம் அர்த்தமுள்ள வகையில், அரசியல் விருப்பத்துடன் முழுமையாக அமுல் செய்யப்பட்டு, இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளான காலஞ்சென்றவர்களான ஜே.ஆர். ஜெயவர்தன (ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்), ஆர். பிரேமதாஸ, டி.பி. விஜயதுங்க ஆகியோராலும் பின்னர், ஜனாதிபதி பதவிகளை ஏற்ற சந்திரிகா, மஹிந்த ராஜபக்‌ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட யாவரும் மாகாண சபை சட்டச் சரத்துகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் யுத்தம் நிறைவு பெற்ற பின்னர், 13 பிளஸ், 13 பிளஸ் பிளஸ் என்றெல்லாம் தீர்வுகள் தருவதாகக் கூறப்பட்டாலும் அது நடைபெறவில்லை. இப்போது, “அதற்கிடையில் ஜனாதிபதி, அரசாங்கத்தை மாற்றிவிட்டீர்கள்” என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.

இருந்தாலும், அதற்கான சரியான முறையிலான அரசியல் அழுத்தம், தமிழர் தரப்பிலிருந்தும் இதுவரை கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், இந்தியாகூட இந்த விடயத்தில், இராஜதந்திர அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற முக்கிய விடயத்துடன் உருவான மாகாண சபை ஆட்சி முறையை, ஏனைய மாகாணங்கள் திறமையாக நடத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கும் கிழக்கும் தனித்தனியே பிரிந்திருந்தும் திறமைகளைக் காணவில்லை.

இந்தியாவைப் பின்தள்ளி, ஓர் அரசியல் தீர்வுக்கான முயற்சி, இலங்கையில் சாத்தியப்படுமா என்ற கேள்விக்கு, முழுமையாக அமுல்படுத்தப்படாத ‘13’ இருக்கிறது.

முதலாவது வடக்கு மாகாண சபை, புலம்பெயர் தரப்பினர் பலருடைய அழுத்தங்களை எதிர்கொண்டு, பெயரளவில் நடந்து முடிந்து விட்டது. ஆனால், அரசியலில் அறிவு மிகக் குறைந்த முதலமைச்சர் இருந்த முதலாவது கிழக்கு மாகாண சபையை விடவும் செயற்பாட்டுப் பயன் குறைவுதான் என்று கருத்துகளும் இருக்கின்றன.

கடந்த வருட இறுதியில், நடைபெற்ற அரசியல் குழப்பம், இரண்டு பிரதமர் ஆட்சி என்று, உலகளவில் வரலாறாகப் பேசப்படுகின்றது. இந்தக் காலகட்டத்தில், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அரசியல் தீர்மானம், படையினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்பு, புதிய அரசமைப்பு சாத்தியமாகும் வரைக்கும் காத்திராமல் ஏற்கெனவே கையிலுள்ள 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்தல் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில், ஆதரவ வழங்க வேண்டும் என்ற முன்வைப்புகள் தமிழர் தரப்பு புத்திஜீவிகள் ஒருசிலரிடமிருந்து வந்திருந்தன.

இவையெல்லாம் நடைபெறாமல், எந்தவிதமான உறுதியான உடன்பாடுகளும் இல்லாமல், மீண்டும் ரணில் பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்தார். இப்போது மீண்டும் அரசியல் குழப்பம்; மீண்டும் ஜெனீவா. அதற்கான பதிலழிப்பு என்று தொடர்கிறது. இப்போது அந்தக் குழப்பத்துக்கும் ஜெனீவா காரணமாகச் சொல்லப்பட்டது.

எப்படியிருந்தாலும், பொதுப்படையில் எடுக்கப்படுகின்ற முடிவுகளில், இணைந்ததாக, கிழக்கு மாகாணத்துக்கான போக்கே காணப்படுகிறது. கிழக்கு மாகாணம் தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் மற்றும் ஏனைய இனங்களும் வாழும் மாகாணமாகும். தமிழ் பேசுபவர்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்ற வகையில், ‘தமிழ் பேசும்’ மாகாணம் என்றுதான் சொல்லிக்கொள்ளும் நிலை.

முஸ்லிம்கள் நாட்டில் எங்கு வாழ்ந்தாலும், அரசியல் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும், இனம் என்ற வகையில், ஒற்றுமையுடன் செயற்படுகிற நிலை இருந்தாலும், தமிழர்களிடம் அந்தப் போக்கு மிகவும் குறைவு.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், அம்பாறை மாவட்டத்தில் கல்முனைத் தமிழ்ப் (உப) பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தல், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் வட்டமடு மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கான தீர்வு,பொத்துவில் கனகர் கிராம மீள்குடியேற்றம் எனக் காணப்படுகின்ற பல பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வுகளை, யாரும் கொண்டுவரவில்லை.

இவற்றைப் பொதுவில், தமிழ்த்தேசியம் கருத்தில் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்திலும் மேய்ச்சற்றரை, யானைப்பிரச்சினை எனப் பல்வேறுபட்ட, தீர்வை எட்ட முடியாத பிரச்சினைகள் காணப்படுகின்றன. திருகோணமலை மாவட்டம் வேறு கதை.

அரசில் செல்நெறியில் வடக்குடன் இணைந்து, இழுபட்டுப் போகின்ற நிலைமையிலேயே கிழக்கு மாகாணம் இருக்கிறது என்பது வெளிப்படை. வடக்கு, கிழக்கில் தங்களது அரசியலைச் செய்து கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்த கட்சிகளான தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகிய கட்சிகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி போன்ற தமிழ்க் கட்சிகள், தவிரவும் கிழக்கை மய்யப்படுத்தி இருக்கின்ற தமிழ்க் கட்சிகள், புதிதாக உருவான அமைப்புகள் என்று, அவற்றின் அரசியலுக்குள் அடிபட்டு, அல்லற்படுவதும் கிழக்கு மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது.

‘ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சி அலகை’ உள்ளடக்கிய புதிய அரசமைப்புக் கோரிக்கை இருந்தாலும், அது ஒருபோதும் சாத்தியப்படப் போவதில்லை.

ஜெனீவாக் கூட்டத்தொடர் ஆரம்பத்தின்போது, வடக்கில் ஹர்த்தாலும் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இலங்கை தொடர்பான விவாத நாளின்போது, காணாமல் போனவர்களின் உறவுகளது சங்கத்தினர் போராட்டத்தையும் ஹர்த்தாலையும் கிழக்கில் நடத்தவிருக்கின்றன. இதற்கு அனைத்துத் தரப்பினருடைய ஆதரவும் கோரப்பட்டிருக்கிறது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கை, தமிழர் தரப்பில் பலமடைந்து வருகின்ற நிலையில், கிழக்கின் ஆதரவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைப்புக் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் கூட, சிங்களச் சமூகத்தின் மனதைவெல்லாமல் சாத்தியமே இல்லை. அப்படி நடந்தால் கூட, கிழக்கில் முஸ்லிம்களது நிலைப்பாடு வேறுவிதமாக உள்ளது. இவ்வாறிருக்கையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில்,க கிழக்கு மாகாணம் முக்கிய பங்கினை வகிக்கும்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில், நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை நிபந்தனைகளாக விதிப்பதும் அவற்றுக்காக அரசியல் நடத்துவதும்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதை விடுத்து, நடைமுறைச் சாத்தியமான முயற்சிகள், கிழக்கு மாகாணத்துக்கான தேவைகள் என்பவற்றை முன்வைப்பது, அறிவு பூர்வமானதாக இருக்கிறது.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கான தேர்தல், கிழக்கில நடத்தப்பட்டிருந்தால், அன்றைய காலத்தில் அது சாத்தியப்பட்டிருக்கக்கூடும். ஆனால், அது நடைபெறாமல் போனமை, அதற்கான அழுத்தங்களை, இந்தியா பிரயோகிக்காமல் போனது என்பவை, கவலை நிறைந்ததொரு விடயம்தான்.

இருந்தாலும் இந்தியா அந்த வேளையில், அந்தத் தேர்தலுக்கான அழுத்தத்தைக் கொடுக்காது விட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபை முதலமைச்சரான வரதராஜபெருமாளுக்கு அடைக்கலம் கொடுத்தது. ஆனால் அவரது தமிழீழப்பிரகடனம் மாத்திரம் இங்கு விடப்பட்டு இருந்தது.

வடக்கு, கிழக்கின் இணைப்பு, போர்க்காலத்தில் காணப்பட்டிருந்தாலும் இப்போது ,‘தொட்டும் தொடாமலும்’ நிலையிலேயே இருந்து வருகிறது;இதை யாரும் மறுப்பதற்கில்லை. அரசியல் கட்சிகள் என்பவை, மக்களது குரலுக்கு இயங்குகிறவைகளாக இருக்க வேணடும் என்றாலும், இப்போதைய நிலையில் இருந்து, புலம்பெயர் அமைப்புகளின், தரப்புகளின் உந்தலுக்குச் செயற்படுகின்ற தன்மையைக் காணமுடிகிறது.

இவ்வாறானதொரு செயன்முறையானது, கிழக்கிலும் உருவாகி வருகின்ற சூழலில், எதிர்வரப்போகின்ற தேர்தல்கள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி.

வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைப்பதானது கிழக்குக்குப் பலமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டு, அதனால்ப் பிரயோசனம் இல்லை என்ற நிலைப்பாடே உருவாகி உள்ளது. அது போல, எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாத நிலைக்குத்தான் வந்து சேரவோமோ என்ற அச்சமும் சில புத்திஜீவிகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ளது; பொறுத்திருந்து பார்ப்போம்.

2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தொடக்கத்திலிருந்து, நமது நாட்டில் அரசியல் தீர்வு கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் நடைபோட்ட மக்களுக்கு, ஐந்து வருடங்களும் ஏமாற்றமாகப் போகின்றது. இலங்கையின் சுதந்திரத்துக்குப்பின்பிருந்து, ஒவ்வொரு அரசாங்கம் வரும் போதும், இவ்வாறான எதிர்பார்ப்புகள் இருந்ததும், பின்னர் இல்லாமல் போய்விடுவதுமே வழமை. இதையே, இந்த நல்லாட்சியும் ஞாபகப்படுத்தியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*