;
Athirady Tamil News

ஆரோக்கியமற்ற அரசியல் தளம்: புஷ்வாணமாகும் கோரிக்கைகள்!! (கட்டுரை)

0

சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகிப்போயிருக்கும் தீர்வு விடயங்களில், முன்னேற்றம் காணப்படுகிறதா என்பது சந்தேகம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது.

தமிழர்கள் கோரி நிற்கும் தீர்வு, அவர்களது அபிலாஷைகள், யுத்தத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அநீதிகளுக்கான தீர்வு என்பனவற்றை நிவர்த்திக்கும் வகையிலானதாக அமைதல் என்பது, தென்னிலங்கை அரசியல்ப் போக்கைப் பொறுத்தவரையில் சாத்தியமானதொன்றாக அமைய முடியுமா என்ற கேள்வி நிறைந்தே உள்ளது.

ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கை தேசத்தில் பல தரப்பாலும் முன்னெடுக்கப்படும் நிலையில், இதன் விழுமியங்களைக் காப்பதற்கு, ஏதுவான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பது தொடர்பில், சிந்திக்க வேண்டும்.

இந்தச் சூழலிலேயே, தற்போது சாலிய பீரிஸ் தலைமையில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமொன்றை ஸ்தாபித்துச் செயற்பட முற்படுகின்றது.

தொடர்ச்சியாக ஏமாற்றங்களுக்குள்ளான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அதன் உச்சக்கட்டத்தில் குறித்த அலுவலகத்தை தாம் எதிர்ப்பதாகவும் அதை எவ்வகையிலும் நம்பத் தயார் இல்லை எனத் தெரிவித்துள்ளதுடன், சர்வதேசத்தின் தலையீடே, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தேவையானது; அதனூடாகவே எமக்கு நியாயம் கிடைக்கும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளனர்.

ஐ.நாவைச் சமாதானப்படுத்தவும் மனித உரிமை பேரவையில் இருந்து தம்மைத் தற்பாதுகாத்துக்கொள்ளவும் அரசாங்கத்தால் போடப்பட்ட வேடங்களில் இதுவும் ஒன்று என, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வெளிப்படையாகவே கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலைமைக்கு அவர்கள் வருவதற்கு, அவர்களை இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தலைமைகளும் கண்டுகொள்ளாத தன்மையும் காரணமாகி உள்ளது.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் போராட்டங்கள் இரண்டாண்டுகளைத் தாண்டியுள்ள நிலையில், முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே அவர்களின் கோரிக்கைகள் அமைந்துள்ளன.

வெறும் போராட்டமாக இவர்களது உணர்வுகளைப் பார்த்துவிட முடியாது. தமது எதிர்காலமென பலநூறு கனவுகளுடன் வாழ்ந்த தமது உறவுகளைத் தேடியலையும் படலமாகவே, இது அமைந்துள்ளது. அவர்களது கண்ணீரின் கதைகளை, இவ்வாறான வேதனையை உணராதவர்களால் புரிந்துகொள்வது கடினமானதாவே இருக்கும்.

தமிழர்களின் போராட்டங்களை, தமிழ் தலைமைகள், வெறுமனே தமது சுயலாப அரசியலுக்காகப் பயன்படுத்தும் நிலை, அதன் எல்லையைக் கடந்துசென்று விட்டதால், அரசியல் தலைமைகளை வெறுத்தொதுக்கும் நிலைக்கு வந்து, அது மக்கள் போராட்டமாக மாறியுள்ளது. இரண்டு ஆண்டுகளைத் தாண்டி, நடைபெற்றுவரும் போராட்டங்கள், அவர்களுக்கு உரமேற்றியுள்ளதே தவிர, சோர்வுத் தன்மைக்கு இட்டுச்செல்லவில்லை. இதன் வெளிப்பாடே, அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற எட்டு மாவட்டங்களையும் உள்ளடக்கி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும் கிளிநொச்சியில் நடத்திய போராட்டமும் ஆகும்.

அதற்கும் அப்பால், முன்பெல்லாம் எவ்வாறு அரசியல்வாதிகளால் வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் கதவடைப்புப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்து, தமது எதிர்ப்பைக் காட்டியிருந்தனரோ அதையும் விட மேலோங்கி, இன்று வடக்கு, கிழக்கையும் தமிழ் அரசியல்வாதிகளையும் நிர்ணயிக்கும் சக்தியாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளும் கணவன்மாரும் மீளவருவார்கள் என்ற எண்ணப்பாடு இன்றுவரை நிறைவேறாத நிலையிலேயே அவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கொடிகளைத் தாங்கியவாறு, போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, இப்போராட்டங்கள் அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்காகவோ அன்றி, அரசியல் நோக்கங்களுக்காவோ செய்யப்படவில்லை என்பதே கள யதார்த்தம்.

எனினும், அவர்களது நியாயமான போராட்டங்கள் கண்டுகொள்ளப்படாது, வெறுமனே பசப்பு வார்த்தைகளால் அமைதிப்படுத்தி விடலாம் என்ற அரசியல்வாதிகளின் சிந்தனைகள், இப்போராட்டத்தின் வடிவத்தை மாற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், வீதியோரத்தில் மழையிலும் வெயிலிலும் இத்தனை நாள்களாகத் தம்மைத் தினம்தினம் உருக்கி, போராட்டத்தில் ஈடுபடுகின்றார்களாயின் அவர்களது வைராக்கியமான மனத்தின் வெளிப்பாடுகளை அரசியல்வாதிகள் எதிர்கொண்டேயாக வேண்டும்.

தமது பிள்ளைகளும் கணவன்மாரும் அப்பாக்களும் அக்காக்களும் அண்ணாக்களும் தம்பிகளும் வரவேண்டும்; தம்முடன் வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே, உபாதைகளையும் தாங்கி நடத்திவரும் போராட்டத்தின் தாக்கம், வெறுமனே ஊர்வலங்களுடனும் ஆர்ப்பாட்டங்களுடனும் முடிந்துபோகப்போவதில்லை.அதற்கும் மேலாக, அரசியல்வாதிகளின் ஏமாற்று அரசியலின் இருப்புகளுக்கும் கூட, முடிவுகட்டும் மேடையாகவே இப்போராட்டங்களைப் பார்க்கவேண்டும்.

இரண்டு வருடங்களைக் கடந்தும் நடத்தப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின் வெளிப்படுத்துகையை, தமிழ் அரசியல்வாதிகள், தமது கைகளில் எடுத்துக்கொண்டு செயற்படுத்தியிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அதற்கான அழுத்தத்தை, ஒன்றுபட்டுப் பிரயோகித்திருக்க வேண்டும். எனினும் தமிழ் அரசியல் தலைமைகளே ஆளுக்கொரு பக்கமாக நிற்பதன் காரணமாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் மட்டுமல்ல, தமிழ் மக்களால் நடத்தப்படும் போராட்டங்கள் பலவும், கவனிக்கப்படாத விடயங்களாக இன்று மாறிவருகின்றமை வேதனைக்குரியதே.

இவ்வாறான காரணங்களாலேயே, வெறுமனே வாக்களித்தோம் தீர்வு வரும் என்று, காலாதிகாலமாக நம்பிய தலைமைகள் மீது, மீண்டும் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கையை மீள் பரிசீலனை செய்யவேண்டிய தேவை, தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னராவது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மனவலிமை, அனைத்துத் தமிழ் சமூகத்திடமும் வரவேண்டும்.

இந்நிலையில், காணி விடுவிப்புத் தொடர்பாகவும் அதனோடு இணைந்து நடத்தப்படும் கையெழுத்துப் போராட்டங்களும் இன்று வடக்கு, கிழக்கில் பரவலாக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஜெனீவாவில் கால அவகாசத்துக்கான முயற்சிகளும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டில் இருந்து ஜெனீவாவில் பல நாடுகளின் ஒன்றிணைவோடு, மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட இலங்கை மீதான பிரேரணையின் முன்னெடுப்புகள் இன்றுவரை முதல் கட்டத்தையே எட்டாத நிலையில், நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, அமைச்சுகளை அமைத்ததுவே சாத்தியமாகி உள்ளது.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பித்தவுடன் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறான கருத்தமர்வுகளும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதான செயற்பாடுகளும் கண்கட்டி வித்தைக்கு ஒப்பானதாகவே பார்க்கப்படும் நிலையில், எவ்விதத் தீர்வையும் அரசாங்கம் காலச்சூழலில் கொண்டு வந்து தந்துவிடப்போவதில்லை.

எனவே, கடந்து வந்த எட்டு வருடங்களில், ஜெனீவாவில் எவ்வாறு கால அவகாசத்துக்காக கங்கணங்கட்டி நின்று, இலங்கை அரசாங்கம் அதைப் பெற்றுக்கொண்டதோ, அதைப்போலவே இம்முறையும் அதன் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.

வடக்கு, கிழக்கில் வியாபித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டிய போராட்டங்களும் கேப்பாப்புலவு போன்ற இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நில விடுதலைப் போராட்டங்களும் தமிழர் பிரதேசத்தில் தொல்லியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் பௌத்த மேலாதிக்கத்தின் சித்தார்த்தமும் எப்போது தீரும் என்ற ஏக்கம் நிறைந்த வாழ்வில், முடிவின்றித் தொடர்வதானது ஏற்புடையதல்ல.

தமிழ்த் தலைமைகளும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளில், அண்மைக்காலமாக பின்னிற்பதும் அரசியல்வாதிகளால் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய போராட்டங்கள் ஸ்தம்பித்துள்ள நிலையில், மக்கள் போராட்டங்களின் பின்னால் செல்லும் நிலையில், அவர்கள் வந்து, தமது வாக்கு வங்கியை நிலை நிறுத்த முற்படுவதும் ஆரோக்கியமான அரசியல் போக்காகத் தென்படவில்லை.

தமிழர்கள், தமக்கான எழுச்சிமிக்க அரசியல் தளத்தை உருவாக்குவதன் ஊடாகவே, இதுவரை இழந்த இழப்புகளுக்கும் உரிமைகளுக்குமான ஆக்கபூர்வமான கோரிக்கைகளை முன்வைக்க முடியும். எனினும், அந்தத் தளம், அந்த ரீதியில் அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

எட்டாக் கனி புளிக்குமா?

யுத்தத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள், சந்தித்த இடர்பாடுகளும் அதன் தக்கங்களும் இன்றுவரை நீங்காத நிலையிலேயே, யுத்த நிறைவுக்குப் பின்னரான 10ஆவது ஆண்டுக்குள் நுழைந்துள்ளோம்.

பொருளாதார வளர்ச்சி என்பது, ஒரு நாட்டின் சகல பிரதேசங்களிலும் சரி சமமானதாக இருத்தலே, அந்நாட்டின் வளர்ச்சிக்குச் சிறப்பானதாகவும் முழுமையான தன்னிறைவுக்குமான வழிவகையாக இருக்கும்.

எனினும் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், பொருளாதார வளர்ச்சிக்கான பங்காளிகளாக இருக்கும் இளம் சமுதாயம், போதுமான வரையிலான கட்டுமானத்துக்குள் இதுவரை கொண்டுவரப்படாத நிலை காணப்படுகிறது.

அதற்குப் பாரிய சவாலாக இருப்பது, அனைத்ததையும் இழந்த சமூகமொன்றின், மீள்எழுச்சிக்கான தளங்களை, அதன் வளங்களைப் பிற பிரதேசங்களைச் சேர்ந்த பொருளாதார வளம் கொண்டவர்கள், ஆக்கிரமித்துள்ளமை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், யுத்தத்தின் போதும் அதன் பின்னராக காலத்திலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இளம் சமுதாயத்தினராகக் காணப்படுகின்றமையும் அவர்களால் ஈட்டப்படும் பொருளாதார பங்களிப்புகள் பின்தள்ளப்படுகின்றமையும் வடக்கி, கிழக்கின் வளர்ச்சிக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தச் சில காரணிகளாக அமைந்துள்ளன என்பது மறுப்பதற்கில்லை.

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் தொகை, எவராலும் பூரணமான தகவல்களாக பேணப்படாவிட்டாலும் பல்வேறு பதிவுகளின் அடிப்படையில், சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் என்பதாக உள்ளது.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், வடக்கு, கிழக்கு, தெற்கைச் சேர்த்து, இருபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் அதிகமானவர்கள் வட பகுதியை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் பல்வேறு விசாரணைகளில், கடற்படை, இராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் நிலை உள்ளது. இவர்கள், காணாமல்போகச் செய்தல்களில் முன்னின்றவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள்; அதனூடான கொலைகளுக்கு வழிசமைத்தார்கள் எனப் பல குற்றச்சாட்டுகள், இவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் விசாரணைகளுக்காக முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்களைக் காரணம் காட்டி, அவர்களோடு சேர்ந்தியங்கிய பல தமிழ் ஆயுதக் குழுக்களும் இளைஞர் யுவதிகள் பலரைக் காணாமல் போகச்செய்திருந்தமையும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள், மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சரும் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

பரணகம ஆணைக்குழுவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலர் வெளிப்படையாக, எப்போது யாரால் எங்கு வைத்துக் கடத்தினார்கள் என்ற விவரத்தைத் தெரிவித்திருந்தபோதிலும் அவை அனைத்தும் இன்று, கோவைகளுக்குள் பல பக்க அறிக்கைகளாக முடங்கியே போய் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 10 =

*