;
Athirady Tamil News

அதிகாரப் பரவலாக்கல்: 35 வருடங்களில் எத்தனை குழுக்கள்? (கட்டுரை)

0

பழைய முக்கிய இரண்டு விடயங்கள், மீண்டும் களத்துக்கு வந்துள்ளன. ஒன்று நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்தல்; மற்றையது அதிகாரப் பரவலாக்கல்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளமையால் அந்த விடயம், மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சித் தலைவர்களுடன் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகக் கலந்துரையாடி, அந்த விடயம் தொடர்பாக, மேலும் ஆராயக் குழுவொன்றை நியமித்துள்ளதை அடுத்து, அந்த விடயமும் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உத்தேச புதிய அரசமைப்பைப் பற்றியே, கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். அப்போது அதிகாரப் பரவலாக்கல், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல், புதிய தேர்தல் முறையொன்றை வகுத்தல் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பாகவும், மேலும் ஆராய வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மூன்று விடயங்களையும் ஒன்றாக ஆராய்வதா அல்லது வெவ்வேறாக ஆராய்வதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அதிகாரப் பரவலாக்கல் என்ற விடயம், தனியாக ஆராயப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அதைத் தனியாக ஆராய்வதற்காக, ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சரத் அமுனுகம, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களில் டிலான் பெரேரா, சரத் அமுனுகம, ராஜித்த சேனாரத்ன ஆகிய மூவரும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாயினும் கடும் போக்குச் சிங்களத் தீவிரவாதிகளல்லாத காரணத்தால், இது போன்றதொரு குழுவில், அங்கம் வகிக்கத் தகுதியானவர்கள்.

ஒரு வகையில் அவர்கள், அதிகாரப் பரவலாக்கலை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொள்கிறவர்கள். ஆனால், மறுபுறத்தில் அவர்கள் சிங்கள வாக்காளர்களை நம்பியே, அரசியலில் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, அவர்கள், அனேகமாகத் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பைக் கூடியவரை, நடுநிலையாக நிறைவேற்ற முயற்சிக்கலாம்.

ஆனால், இந்தக் குழுவால் சிறந்ததோர் அதிகாரப் பரவலாக்கல் முறையொன்று பிரேரிக்கப்பட்டு, நாட்டில் இனப்பிரச்சினை நிரந்தரமாகத் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை, நாட்டில் எவர் மனதிலாவது தோன்றியிருக்குமா? குறைந்தபட்சம், இந்தக் குழுவை நியமித்த ஜனாதிபதியாவது அவ்வாறு நம்புகிறாரா?
கடந்த 35 வருட கால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, எவர் மனதிலும் அவ்வாறானதொரு நம்பிக்கை தோன்றியிருக்கும் எனக் கூற முடியாது.

இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், கடந்த 35 ஆண்டுகளில் எத்தனை குழுக்கள், நியமிக்கப்பட்டன? எத்தனை கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன? எத்தனை ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன? அவற்றில் எதுவுமே பயனுள்ளதாக அமையவில்லை.

இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தை மிரட்டி, அதன் மீது பலாத்காரமாகத் திணித்த இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமே, ஒரு மாற்றம் இடம்பெற்றது. அதாவது, மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இனப்பிரச்சினை விடயத்தில், ஏதாவது செய்ய வேண்டும் என்று, ஆரம்பத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் நினைக்கவே இல்லை. ஆனால், “நான் பதவிக்கு வந்தால், வட்ட மேசை மாநாடொன்றைக் கூட்டி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன்” என, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர். ஜயவர்தன, 1977ஆம் ஆண்டு, பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தார்.

ஆனால், அவர் பதவிக்கு வந்ததன் பின்னர், அந்த வாக்குறுதியை மறந்துவிட்டார். அவர் பதவிக்கு வந்ததன் பின்னர், 1977ஆம் ஆண்டிலும் 1981ஆம் ஆண்டிலும், நாடு தழுவிய ரீதியிலும் மலையகத்தை மய்யமாகக் கொண்டும், இரண்டு இனக்கலவரங்கள் ஏற்பட்ட போதும், அவர் இவ்வாறானதொரு பிரச்சினை இருப்பதாகக் கருதியதாகத் தெரியவில்லை.

1983ஆம் ஆண்டு, புலிகள் அமைப்பினர், யாழ்ப்பாணத்தில் திண்ணைவேலியில் 13 இராணுவ வீரர்களைக் கொன்றதால், நாட்டில் ஏற்பட்ட தாக்கமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய இனக்கலவரமும் அதனால் இந்தியா, இலங்கை விவகாரங்களில் நேரடியாகவே தலையிட்டமையுமே ஜயவர்தனவைச் செயலாற்றத் துண்டியது.

அதையடுத்துப் பல கூட்டங்கள், மாநாடுகள், ஒப்பந்தங்கள் இடம்பெற்றாலும் அவை தோல்வியடைந்ததற்கு, ஒரு சாராரை மட்டும் குறை கூற முடியாது. மாறிமாறி பதவிக்கு வந்த அரசாங்கங்கள் போலவே, தமிழ்த் தரப்பினரும் இந்தப் பேச்சுவார்த்தைகள் போன்றவற்றின், தோல்விக்குக் காரணமாக இருந்துள்ளனர்.

தமிழ்த் தரப்பினரும் அரசாங்கமும் பூட்டான் தலைநகர் திம்புவிலேயே, இனப்பிரச்சினை விடயத்தில் முதன் முதலாகச் சந்தித்துப் பேசினர். அதில் அரசாங்கமோ, தமிழ் இயக்கங்களோ விரும்பிக் கலந்து கொள்ளவில்லை. இந்திய அரசாங்கமே, இரு சாராரையும் அங்கு இழுத்துக் கொண்டு சென்றது. எனவே, இரு சாராரும் தத்தமது நிலைப்பாட்டை கூறுவதையே, நோக்கமாகக் கொண்டார்களேயல்லாமல், எவருக்கும் இணக்கப்பாடொன்றை அடைய வேண்டும் என்ற தேவை இருக்கவில்லை.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கும் இந்தியாவே இரு சாராரையும் இணங்கச் செய்தது. எனவே, புலிகள் அந்த நேரத்துக்கு மட்டும் இணக்கம் தெரிவித்துவிட்டு, பின்னர் தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போதும், புலிகள் அப் பேச்சுவார்த்தைகளைத் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசமாகவே பாவித்தனர்.

அதேவேளை, அரசாங்கங்களிடம் ஒரு தீர்வுத் திட்டமும் இருக்கவில்லை. அதேபோல், அரசாங்கத்தின் தலைவர்களும் தாம், தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால், அடுத்த தேர்தலில் பெரும்பான்மையின வாக்காளர்கள், தம்மை எதிர்ப்பார்களோ என்ற பயத்திலேயே செயற்பட்டும் வந்துள்ளனர்.

தமிழ்த் தலைவர்கள், ஒரு போதும் தாமாக எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் முன்வைத்ததில்லை. அரசாங்கம் முன்வைக்கட்டும், அதை ஏற்க முடியுமா என்று, நாம் ஆராய்வோம் என்றே அவர்கள் கூறி வந்துள்ளனர். புலிகள் 2003ஆம் ஆண்டு, இடைக்கால நிர்வாகத்துக்கான திட்டத்தை முன்வைத்த போதிலும், அது இறுதித் தீர்வுத் திட்டமாகவில்லை.

எந்தக் கட்சி பதவியில் இருந்தாலும், அரசாங்கம் ஒரு போதும் விரும்பி அதிகாரப் பரவலாக்கலை வழங்க முன் வந்ததில்லை. நெருக்குதலின் காரணமாகவே, அரசாங்கம் அதனை ஓரளவுக்காவது ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையிலும் சமஷ்டி என்ற அடையாளத்துடன், அதிகாரப் பரவலாக்கலை அடைய, இரண்டு சந்தர்ப்பங்கள் கிடைத்தன; ஆயினும் புலிகள் அதைத் தவறவிட்டன.

முதலாதவது சந்தர்ப்பம், 1995ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அவரது ‘பக்கேஜ்’ என்ற திட்டத்தை முன்வைத்த வேளையாகும். அதன் கீழ், இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியம் என்றே அழைக்கப்பட்டது.

“அதை ஏற்றிருக்கலாம்” எனப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், 2003ஆம் ஆண்டு, கிளிநொச்சியில் புலிகளின் நீதிமன்றத் தொகுதியொன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போது, கூறியிருந்தார்.

அடுத்ததாக, 2002ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அரசாங்கமும் புலிகளும் சமஷ்டி முறையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்று முடிவு செய்தனர். ஆனால், புலிகளின் தலைவர் பிரபாகரன், அதை ஏற்கவில்லை எனப் பின்னர் தெரியவந்தது.

போர் முடிவுக்கு வந்ததன் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷ, சிங்கள மக்கள் மத்தியில் வெகுவாகப் பிரபல்யமடைந்தார். அந்த நிலையில், முறையான அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றின் மூலம், தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண அவருக்கு பொன்னான சந்தரப்பம் ஒன்று கிடைத்தது.

அவர், 2012ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தார். ஆனால், மஹிந்தவின் அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளாததால் அப் பேச்சுவார்த்தைகளும் முறிவடைந்தன.

அதேவேளை, தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தமிழ் தலைவர்கள் முறையாகப் பாவித்துள்ளார்களா என்பதும் கேள்விக்குறியே. வட மாகாண சபை, 415 பிரேரணைகளை நிறைவேற்றி இருந்ததாகவும் அவற்றில் பெரும்பாலானவை, மாகாண சபையின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டவை என்றும் ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை, கடந்த வருடம் ஜூலை மாதம் செய்தியொன்றை வெளியிட்டு இருந்தது.

எனவே, புதிதாகக் குழுக்களை நிமித்தாலும் அரசாங்கமும் தமிழ்த் தலைவர்களும் அடிப்படைப் பிரச்சினையைக் கருத்தில் கொள்ளாது செயற்படுவார்களாயின், அக்குழுக்கள் பயனற்றுப் போவதைத் தடுக்க முடியாது.

தீர்வு முயற்சிகளின் வரலாறு

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1984 ஆம் ஆண்டு, வட்டமேசை மாநாடொன்றைக் கூட்டினார். ஆனால், அது முன்நகரவில்லை. தமிழ்த் தலைவர்கள், இதில் கலந்து கொள்ளவில்லை.

அதையடுத்து, இந்தியா தலையிட்டு, அரசாங்கத்துக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தது. ஆனால் இரு சாராரினதும் நேர்மையற்ற தன்மை காரணமாக, அந்தப் பேச்சுவார்த்தைகளும் முறிவடைந்தன.

பின்னர், இந்தியா, மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு, அதிகாரப் பரவலாக்கலைப் பிரேரித்திருந்த நிலையில், ஜனாதிபதி ஜயவர்தன, 1986ஆம் ஆண்டு, சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டினார்.

அதுவும் தோல்வியில் முடிவடைந்த போதிலும், இலங்கையின் அரசியல்வாதிகள், மாகாண சபை முறையை, முதன் முறையாக அதிலேயே ஆராய்ந்தனர்.

அதற்கு அடுத்த ஆண்டில், இந்தியா, இலங்கை மீது பலாத்காரத்தைப் பிரயோகிக்க முற்பட்டது. அதன்படி, இலங்கை அரசாங்கம், இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட நிர்ப்பந்திக்கப்பட்டது. மாகாண சபை முறையின் தோற்றம், அதன் விளைவாகும்.

ஆரம்பத்தில், புலிகள் தவிர்ந்த ஏறத்தாழ சகல தமிழ்க் கட்சிகளும் ஆயுதக் குழுக்களும் மாகாண சபை முறையை ஏற்றுக் கொண்டன. ஆனால், புலிகள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவையும் பின்னர், புதிய தீர்வொன்றைத் தேட முற்பட்டன.

அதன்படி எம்.எச்.எம் அஷ்ரப் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் குமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கலந்துரையாடி, இன வாரியான மூன்று அதிகார அலகுகளைக் கொண்ட அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றைப் பிரேரித்தன.
அதனை, 1988ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கவும் சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணி இணங்கியது. ஆனால், பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அது நடைபெறவில்லை.

1988ஆம் ஆண்டு, ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாஸ புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். அத்தோடு, மீண்டும் 1989ஆம் ஆண்டு, சர்வகட்சி மாநாடொன்றையும் கூட்டினார்.

புலிகளும் அதில் கலந்து கொண்டனர். புலிகள் அவ்விரண்டு முயற்சிகளில் இருந்தும் விலகிக் கொண்டதை அடுத்து, அவ்விரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்தன.

பிரேமதாஸவின் காலத்தில் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்துடன் மங்கள முனசிங்கவின் தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதுவும் இடைக் கால அறிக்கையொன்றை மட்டும் முன்வைத்துவிட்டு, செயலிழந்துவிட்டது.

அதையடுத்து, ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்கவும் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். ஆனால், இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு, அரசாங்கத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த போதே, புலிகள் கொழும்பு, பாலத்துறையில் பாரிய குண்டொன்றை வெடிக்கச் செய்து, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸாநாயக்க உள்ளிட்ட 67 பேரைக் கொன்றனர். பின்னர் அப்பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன.

சந்திரிகா, ‘பக்கேஜ்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை முன்வைத்தார். அவர் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றையும் நியமித்தார்.

அதுவும் 73 முறை கூடிவிட்டு, செயலிழந்து விட்டது. 2000ஆம் ஆண்டு, புதிய அரசமைப்பு நகலொன்றையும் சந்திரிகா சந்திரிகா முன்வைத்தார். அதுவும் நிறைவேறவில்லை.

இந்த நிலையில் தான், 2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்ததைகள் ஆரம்பமாகின.

அவை முறிவடைந்த பின், 2012ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். அதுவும் இடையில் கைவிடப்பட்டது.

மஹிந்த, சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமித்தார். அது, மஹிந்தவிடம் சமர்ப்பித்த அறிக்கை, வெளியிடப்படவேயில்லை. இதுதான் குழுக்களினதும் கலந்துரையாடல்களினதும் வரலாறாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 3 =

*