;
Athirady Tamil News

இந்து சமயத்துக்கு புதிய சங்கரர்கள் தேவை!! ( கட்டுரை)

0

இந்து சமயத்துக்கு சனாதன தர்மம் என்றொரு பெயர் உண்டு. தர்மம் என்பதை நிலை நாட்டுவதே இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கை.

இதை நாம் கூறும்பேது ஒருக்கால் இந்து சமயம் என்பீர்கள், இன்னொருக்கால் சைவ சமயம் என்று கூறுவீர்கள். ஐயா! எதைத்தான் கூற வருகிறீர்கள் என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம்.

இந்து சமயம், சைவ சமயம் என்பதில் யாரும் குழப்பமடையும் அவசியமில்லை. இந்து சமயம் என்பது அறுவகைச் சமயங்களைத் தன்னகத்தே கொண்டது. அறுவகைச் சமயங்களில் ஒன்று சைவ சமயம்.

ஏனைய ஐந்து சமயப் பிரிவுகளும் சைவ சமயத்துக்குள் அடக்கம்.
ஆக, இந்து சமயம், சைவ சமயம் என்ற பெயர் வகைப் பேதமை அறியாமையின் பாற்பட்டதாகும்.

இதை நாம் கூறும்போது ஐயா! குழப்புகிறீர்கள் என்று நீங்கள் யாரேனும் கூறலாம்.
சிவன் சைவத்தின் முழுமுதற் கடவுள். சிவனின் சக்தி பார்வதி. விநாயகனும் முருகனும் சிவபுத்திரர்கள்.

திருமால் பார்வதியின் சோதரன். சூரியன் சிவனின் சேவகன். ஆக ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தின் தலைவன் சிவன்.

குடும்ப உறுப்பினர்கள் தத்தம் தலைமையில் சமயப் பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் சிவனின் தலைமைக்குட்பட்டவை. எனவே இந்து சமயம், சைவ சமயம் என்று பேதமைப்படுவதைத் தவிர்க்கலாம்.

இவை ஒருபுறமிருக்க, இந்து சமயக் கொள்கைகள், கேட்பாடுகள் தத்துவஞானிகள் சிலரால் காலத்துக்குக் காலம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதில் சங்கரர் தோற்றுவித்த அறுவகைச் சமயம் என்பது இந்து சமயச் சீராக்கலின் ஒருபெரும் நடவடிக்கையாகும்.

எனினும் சங்கரரின் சண்மதக் கேட்பாடுகளுக்குப் பின்பான; இந்துசமய மறுசீரமைப்புப் பணிகள் எதுவும் இதுவரை இடம்பெற வில்லை எனலாம்.

எனவே சமகாலத்து சூழ்நிலைகளுக்கு அமைவாகவும் தொழில் துறைகளைக் கருத்திற் கொண்டும் பூசை வழிபாடுகளைச் செய்கின்ற இந்து சமயச் சிவாச்சாரியர்களும் மனிதர்கள்.

அவர்களுக்கும் குடும்பங்கள், குழந்தைகள் உண்டு என்ற அடிப்படையிலும் இந்து சமய பூசை வழிபாட்டு நடைமுறைகளில் மறுசீரமைப்புகள் செய்தாக வேண்டும்.

இதை நாம் கூறும்போது இந்து சமயத்தின் மீது அதீத கருசனை கொண்டவர்கள் நம் மீது நிச்சயம் கோபம் கொள்ளவே செய்வர்.

ஆனால் இதை நாம் கூறுவதற்குக் காரணம் ஏலவே வகுக்கப்பட்ட கொள்கைகளும் கேட்பாடுகளும் நீண்ட நெடுங்காலத்தில், பல் வேறுவகையான விளக்கங்களுக்கு உட்பட்டு உண்மையானதும் அடிப்படையானதுமான தத்துவங்களை இழந்து விடுகின்றன.

இந்நிலையில் ஐயங்கள் நீக்கப்பட்டு உண்மையான தத்துவங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறானதொரு மறுசீரமைப்பில் இந்து சமயத்துறவிகளைக் கொண்ட தலைமைத்துவம் இந்து சமயத்துக்கென உருவாக்கப்படுவதும்.

அவர்களே இந்து சமயத்தின் பாதுகாவலர்களாக இருப்பதும் கட்டாயமானதாகும். இதைச் செய்யாதவரை, மருதனார்மடத்தில் இந்து அமைப்புகள் நடத்திய எதிர்ப்புப் போராட்டம் போலத்தான் எல்லாமும் போய்ச்சேரும்.

– வலம்புரி –

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 1 =

*