;
Athirady Tamil News

தனியாள் சட்டம்: முஸ்லிம்களின் திருமணமும் நடைமுறை யதார்த்தங்களும் !! (கட்டுரை)

0

முஸ்லிம்களின் தனியாள் சட்டத்தை, மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள், இன்னும் இழுபறியாகவே இருக்கின்றன.

இஸ்லாமிய ‘ஷரிஆ’ சட்டத்தின் அடிப்படையிலான, தனியாள் சட்டத்தைத் திருத்துவதில், பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்ற சூழலில், பொதுவாக உடன்பாடு காணப்பட்ட விடயங்களைக் கூட மாற்றியமைப்பதில், சர்ச்சைகள் தோன்றியுள்ளன.

முஸ்லிம்களுக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பட்ட நிலைப்பாடுகளுக்குள், உள்நோக்கம் கொண்ட அரச சார்பற்ற அமைப்புகளும் வெளிநாட்டுச் சக்திகளும் வழக்கம்போல மூக்கை நுழைத்துக் கொண்டு செயற்படுவதால், இவ்விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.

முன்னொரு காலத்தில், புனித காரியமாகப் பார்க்கப்பட்டு, நாகரிக மாற்றத்தின் காரணமாக, ஒரு சடங்கைப் போல மாறிக் கொண்டிருக்கும் திருமணத்தைப் போலவே, முஸ்லிம்களின் விவாகம், விவாகரத்து விதிமுறைகளை உள்ளடக்கிய, ஒரு கட்டுக்கோப்பான சட்ட ஏற்பாடாக உணரப்பட்டு வந்த முஸ்லிம் தனியாள் சட்டம், மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துகள் மேலெழுந்திருக்கின்றன.

இவற்றுள், முஸ்லிம்கள் ‘மாற்ற வேண்டும்’ என்று தாமாக உணர்ந்த உள்ளடக்கங்களும் உண்டு; வெளியிலிருந்து திணிக்கப்படுகின்ற விடயங்களும் உள்ளன.

இலங்கையில் பல பிரத்தியேக (தனியாள் அல்லது தனியார்) சட்ட ஏற்பாடுகள் நடைமுறையில் இருந்தன. தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், முஸ்லிம் தனியாள் சட்டம் என்பவையே அவையாகும்.

கண்டியச் சட்டம், கண்டிப் பகுதியில் வாழ்கின்ற மக்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகச் சட்டமாகும். இச்சட்டமானது மலைநாட்டுச் சிங்களவர் வழிவந்தவர்களுக்குப் பொருந்தும். அதேபோன்று, தேசவழமைச் சட்டம் எனப்படுவது வடபுலத்துத் தமிழ் மக்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது, ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்துக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே நடைமுறையிலிருந்த, வாடிக்கையான வழக்காறுகளை உள்ளடக்கியதாக தொகுக்கப்பட்ட ஒரு சட்டமாக காணப்பட்டது. சொத்துகள் தொடர்பான தீர்ப்புகள், இதன் அடிப்படையிலேயே இன்றும் வழங்கப்படுகின்றன.

முஸ்லிம்களின் திருமணம், விவகாரத்து மற்றும் அதனோடு தொடர்புபட்ட ஏனைய பல்வேறு வாழ்வியல் நடைமுறைகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை விதந்துரைப்பதாக, முஸ்லிம் தனியாள் சட்டம் நடைமுறையில் இருக்கின்றது.

1700களின் பிற்பகுதியிலேயே, முஸ்லிம்களுக்காக ஒரு பிரத்தியேக சட்ட ஏற்பாட்டை மேற்கொள்ள, ஒல்லாந்து கொலனித்துவ ஆட்சியாளர்கள் முன்னின்றனர். இதற்காக, இந்தோனேசியாவில் இருந்த சட்டத் தொகுப்பு தருவிக்கப்பட்டது.

பின்பு ஆங்கிலேயர், இதனை அடிப்படையாக வைத்து, ‘முஹம்மதியர் தொடர்பான விசேட சட்டங்கள்’ என்ற ஒன்றை அமுலாக்கினர். 1806இல் இருந்து தனியாள் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

அதன்பின்னர், நியாயம் தீர்ப்பதில் ஏற்பட்ட பல நடைமுறைச் சிக்கல்களைத் தொடர்ந்து, பல மீளாய்வுக் குழுக்களின் சிபாரிசுகளின் அடிப்படையில், அது மறுசீரமைக்கப்பட்டு, முஸ்லிம் தனியாள் சட்டம் என்ற பெயரில், 1954இல் அமுலாக்கப்பட்ட சட்டமே இன்றுவரை, நடைமுறையில் இருக்கின்றது.

இது இஸ்லாமிய ‘ஷரீஆ’ சட்டத்துக்கும் மார்க்க ஒழுக்க வரண்முறைகளுக்கும் அமைவான ஒரு சட்டமாக காணப்படுகின்றமையால், முஸ்லிம் விரோத சக்திகள், இதைக் காலகாலமாக, ஒரு பிற்போக்குத்தனமான சட்டமாக விமர்சித்து வருகின்றன.

அத்துடன், இதை வழக்கிழக்குச் செய்யப் பல்வேறு காய்நகர்த்தல்களையும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இலங்கையைப் பொறுத்தமட்டில், அவ்வப்போது காலத்துக்குப் பொருத்தமான மாற்றங்கள், மறுசீரமைப்புகள் இச்சட்டத்தில் கொண்டு வரப்பட்டதாயினும், அதை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கங்கள், இன்றுவரை வெற்றி அளிக்கவில்லை.

எல்லாக் காலத்தின் பிரச்சினைகளையும் சமாளிக்கும் சட்ட ஏற்பாடாக, முஸ்லிம் தனியாள் சட்டம் அமைய வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையின் அடிப்படையில், பல மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முஸ்லிம்கள் சம்மதித்தனர்.

அதன்படி,1973, 1990களில் பல மீளாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிபாரிசுகள் பெறப்பட்டன.
அதன்பின்னர், 2009ஆம் ஆண்டு, அப்போது நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொறகொடவால், முஸ்லிம் தனியாள் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு, சிபாரிசுகளை முன்வைப்பதற்காக, அப்போது உயர்நீதிமன்ற நீதியரசராகக் கடமைபுரிந்த சலீம் மர்சூப் தலைமையில், 17 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு, சுமார் ஒன்பது வருடங்களாகக் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடத்தியது. முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து நடைமுறைகள், முஸ்லிம் பெண்கள், ஆண்களின் திருமண வயது, பலதார மணம், தாபரிப்புக்கான கொடுப்பனவு, காழி நீதிபதிகளாகப் பெண்களை நியமித்தல், வலியுறுத்தல் கட்டளை உள்ளடக்கங்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயப்பரப்புகளில் கருத்துகளும் சிபாரிசுகளும் முன்வைக்கப்பட்டன.

இந்தக் குழுவில், அங்கம் வகித்த தரப்பினரிடையே, முஸ்லிம் பெண்களின் திருமண வயது உள்ளிட்ட ஓரிரு விடயங்களில், கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன.

சமகாலத்தில் வெளியில் இருந்து கொண்டு, “இச்சட்டத்தைத் திருத்த வேண்டும்” என்றும், “ஷரிஆ அடிப்படையிலான சட்டத்தில் கைவைக்கக் கூடாது” என்றும் ஏட்டிக்குப் போட்டியான வாதங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சட்டத்தைத் திருத்துவதில், அரசாங்கத்துக்குச் சர்வதேச நலனும் உள்ளது.

இதற்காக, சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, ஒன்பது வருடங்களாகக் கலந்துரையாடியும் ஒரு தீர்க்கமான இணக்கப்பாட்டுக்கு வராமையால், அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, இரண்டு அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.

சலீம் மர்சூப் தலைமையில் ஒரு குழுவும் உலமா சபை முக்கியஸ்தர் ஒருவர் தலைமையில் மற்றுமொரு குழுவுமாக, அப்போதைய நீதி அமைச்சர் தலதா அத்துக்கொரளவிடம் 2018 ஜனவரியில் இரு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், சட்டத்தில் இன்னும் திருத்தம்கொண்டு வரப்படவில்லை; இருந்தபோதிலும், அம்முயற்சி முற்றாகக் கைவிடப்படவும் இல்லை.

முஸ்லிம்களின் வாழ்வியல், கூர்ப்படைதல் சார்ந்த மாற்றங்களுக்கு (ஷரிஆவுக்கு உட்பட்டதாக) ஒத்திசையும் வண்ணம், ஓரிரு மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று பொதுவாக முஸ்லிம்களிடையே ஓர் அபிப்பிராயம் இருக்கின்றது. ஆனால், இச்சட்டத்தின் ஏற்பாடுகளைத் திருத்துமாறு, முஸ்லிம் அல்லாத அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் இஸ்லாமிய அடிப்படை அறியாத வெளிச்சக்திகளும் களத்தில் குதித்துள்ளமை, கவனிப்புக்குரியது. இதில் ஏதாவது ‘உள்நோக்கம்’ இருக்கின்றதோ என்ற பலமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் தனியாள் சட்ட மறுசீரமைப்புத் தொடர்பில், பொதுவான விடயங்களில் உடன்பாடு காணப்படுவதாகச் சொல்ல முடியும். இருப்பினும், முஸ்லிம் பெண்களின் திருமண வயது, காழி நீதிபதிகளாகப் பெண்களை நியமித்தல், பலதார திருமண ஏற்பாடுகள் போன்ற ஒருசில விடயங்களில்,முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அண்மையில் வெளியிட்ட கருத்துகளை, முஸ்லிம் சமூக அரசியல் ஆய்வாளரான வை.எல்.எஸ். ஹமீட் விமர்சித்து, சில விடயங்களைத் தெளிவுபடுத்தி இருப்பதையும் காண முடிகின்றது.

முஸ்லிம் பெண்களின், திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்ற அபிப்பிராயம், பரவலாக முன்வைக்கப்படுகின்றது. எல்லா இனங்களிலும் இன்றைய பெண் பிள்ளைகள், ‘சில விடயங்களை’ப் பொறுத்தமட்டில், முதிர்ச்சியான போக்குகளை ஆங்காங்கே காண முடிகின்ற போதிலும், கணிசமானோர் குடும்ப வாழ்வு விடயத்தில், ‘பக்குவப்படும்’ தன்மையைக் காண முடியாது.

எனவே, வயதை அதிகரிக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், தனியாள் சட்டத்தின்படி, முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை, குறைவாகக் காணப்படுகின்ற போதும், அவ்வாறு எத்தனை திருமணங்கள் இடம்பெற்றுள்ளன? ஆனால் பிரச்சினை, விரிவான புள்ளி விவரங்களை, இந்த அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வைத்ததாக அறியக் கிடைக்கவில்லை.

உண்மையில், இளவயதுத் திருமணங்கள் மிகக் குறைவாகவே இடம்பெறுகின்றன. குறைந்த வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும், முஸ்லிம் பெண்களுக்குக் கிடையாது.

அதுமட்டுமன்றி, இளவயதுத் திருமணத்தால் கல்வி, பதின்ம வயது வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் கூறுகின்ற, வெளிச் சக்திகளும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களும் முஸ்லிம் சமூகத்திலோ ஏனைய சமூகங்களிலோ இளவயதுத் திருமணங்கள் இடம்பெறுகின்றன என்பதை ஏன் ஆய்வு செய்யவில்லை?

தனியாள் சட்டத்தைத் திருத்தப் பிரயத்தனப்படும் அரசாங்கம், இளவயதுத் திருமணத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து, தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்ததுண்டா? என்று கேட்கத் தோன்றுகின்றது.

முஸ்லிம்களின் பலதாரத் திருமணம் பற்றி விமர்சிக்கப்படுகின்றது. ஆனால், பலதாரத் திருமணத்துக்கு அனுமதியுண்டு என்ற போதும், அதற்குப் பல முன்நிபந்தனைகள் உள்ளன. யாரையும் வலுக்கட்டாயமாகப் பல திருமணங்கள் முடித்து வைப்பதில்லை. அதேபோல், பலதாரத் திருமண அனுமதி இல்லாத சட்டங்களால், ஆளப்படுகின்ற சமூகங்களில் பலரும், பல திருமணங்களை முடித்துள்ளதுடன் திருமணத்துக்கு அப்பாலான பல ‘உறவு’களையும் சட்ட விரோதமாகப் பேணி வருகின்றமையையும் இவ்விடத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

அதேவேளை, முஸ்லிம்களின் விவாகம், விவாக இரத்து உள்ளிட்ட சட்ட விடயங்களுக்கு, நீதி தீர்ப்பதற்காக காழி (குவாஸி) நீதிபதிகளாகப் பெண்களை நியமிப்பது குறித்தும் மாறுப்பட்ட கருத்துகள் உள்ளன. இதிலும் ஷரிஆ சட்டத்தையும் வாழ்வியல் நடைமுறை யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டு முன்மொழிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மிக முக்கியமாக, முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஜம்மியத்துல் உலமா போன்ற முஸ்லிம் அமைப்புகளும் ஏனைய தரப்பினரும் இது விடயத்தில் பேசிய விடயங்கள் என்ன, நிலைப்பாடுகள் என்ன என்பதைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூற வேண்டும்.

பல்லின சமூகங்கள் வாழும் நாடான இலங்கையில், தற்போது நடைமுறையில் இருக்கின்ற முஸ்லிம் தனியாள் சட்டத்தை, பல காரண காரியங்களின் அடிப்படையில் மறுசீரமைப்பதில் பிரச்சினையில்லை. ஆனால், ஷரிஆ சட்டத்துக்கு அப்பால், முஸ்லிம்கள் பயணிக்க முடியாது என்பதும், யாருடைய தேவைக்காகவும் முஸ்லிம்களுக்கான சட்டத்தின் உள்ளடக்கங்களை மாற்ற முடியாது என்பதும் எல்லாவற்றையும் விட முக்கியமான விடயமாகும்.

இஸ்லாம் தடை செய்யாததை தடை செய்யலாமா?

அண்மைய நிகழ்வு ஒன்றில், அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகின்றபோது, சமகால முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை தொடர்பாகத் தெரிவித்த சில கருத்துகள் தொடர்பில், முஸ்லிம் சமூக அரசியல் ஆய்வாளரான சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட், முக்கியமான சில விடயங்களைச் சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

அமைச்சர் ஹக்கீம் தெரிவித்த முதலாவது கூற்று, “ திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் பெண்களுக்கு திருமண வயதெல்லை குறிப்பிடப்படவில்லை. எனவே, நாம் ஒரு திருமண வயதெல்லையைக் குறிப்பிடுவதில் தவறில்லை” என்பதாகும்.

படைத்தவன் குறிப்பிடாத ஒன்றைக் குறிப்பிடுவதற்கு நாம் யார்? அவன் அறியாதவற்றை நாம் அறிந்திருக்கிறோமா? எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானதாகத் தானே, அல்லாஹ் குர்ஆனை இறக்கி வைத்திருக்கின்றான். பிற்காலத்தில் வயதெல்லை அவசியம் என்றிருந்தால், அதை அவனோ, அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களோ, குறிப்பிட்டிருக்க மாட்டார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இஸ்லாத்தில் தடைசெய்யப்படாத ஒன்று, நமக்கு அனுமதியாகும். எனவே, இன்றைய காலசூழ்நிலை மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, நாம் வயதெல்லை குறிப்பிடுவதை, இஸ்லாம் தடுக்கவில்லை என்பது, அவரது உள்ளார்ந்த வாதம் என்பது, அவரது பேச்சில் இருந்து புரிந்தது. இந்தச் சிந்தனைதான் அவரது குழப்பத்தின் அடிப்படையாகும். தடைசெய்யாதது, ஆகுமானதாகுமே தவிர, இஸ்லாம் என்பது, தடைசெய்யாததைத் தடைசெய்வதல்ல.

பருவ வயதை அடைந்த ஓர் ஆணுக்கோ, பெண்ணுக்கோ படைத்தவன், ஹலாலாக்கிய ஒன்றை, குறிப்பிட்ட காலம்வரை ஹறாமாக்க முனைகின்றார்கள். ஆனால், அவ்வாறு ஹறாமாக்காமல், ஹலாலாக்குவதற்காகத்தான் அல்லாஹ் வயதெல்லை குறிப்பிடவில்லை. சரி, நடைமுறைப் பிரச்சினைக்கு வருவோம். சிறுவயதில் திருமணம் முடித்துக் கொடுப்பதால், பல பிரச்சினைகள் எழுகின்றன என்று சிலர் கூறும் கருத்தை ஹக்கீமும் முன்வைக்கின்றார். எத்தனை சதவீதமான இளவயதுத் திருமணம் நடைபெறுகின்றன என்பதற்கு ஏதாவது புள்ளிவிவரம் ஹக்கீமிடமோ, அரச சார்பற்ற நிறுவனங்களிடமோ இருக்கின்றனவா? அது மிகச்சிறிய சதவீதம் என்று மு.கா தலைவரே குறிப்பிடுகின்றார்.

இலங்கையில், இளவயதுத் திருமணம் என்பது, விதிவிலக்காக எங்காவது நடைபெறுகின்றதே தவிர, விதியாக நடைபெறுவதில்லை என்பதுதானே, அதன் பொருள். அப்படியென்றால், அதற்கு ஏதாவது விசேட விதிவிலக்கான காரணம் இருக்கவேண்டும்.

வசதியுள்ள எந்தவொரு தந்தையோ, தாயோ தன்பிள்ளையின் கல்வியைப் பாதியில் நிறுத்திவிட்டு, திருமணம் முடித்துக் கொடுக்கமாட்டார்கள்; அதைவிட, வேறு முக்கிய காரணிகள் இருந்தாலே ஒழிய.
எனவே, இங்கு கல்வி பாதிக்கப்படுவது, இளவயதுத் திருமணத்துக்கு ஒரு காரணம் என்றால், அங்கு ஆராயவேண்டியது, ‘ஏன் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது’ என்பதாகும். ஒரு சமூகத்தின் தலைவர் என்ற வகையில், இந்த விதிவிலக்குக்கான விசேட காரணத்தை, எப்பொழுதாவது ஆராய்ந்திருக்கின்றீர்களா? என்று கேட்கத் தோன்றுகின்றது.

எனவே, மக்களின் வாக்குகளைப்பெற்ற ஒரு சமூகத் தலைவர் என்ற வகையில் அம்மக்களின் மார்க்க, சமூக, கலாசார பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்பதும் அதைப் புரியாத மேற்கத்தைய முகவர்கள் செய்யும் விமர்சனங்களுக்குக் காத்திரமான பதில் கொடுப்பதும்தான் ரவூப் ஹக்கீம் போன்றவர்களின் கடமையே தவிர, “அவர்கள் விமர்சிக்கிறார்கள், எனவே சட்டத்தை மாற்றுவோம்” என்று கூறுவதல்ல.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*