;
Athirady Tamil News

வடகொரிய – அமெரிக்க மாநாடு – 2 !! (கட்டுரை)

0

வியட்நாமின் தலைநகர் ஹனோயில் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வடகொரிய – ஐக்கிய அமெரிக்க சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் ஐ. அமெரிக்கா, வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணைத் தொடர்பாடல்கள், துல்லியமான அணுசக்தி, அதேபோல் வடகொரியா தம்வசம் கொண்டுள்ளது என ஊகிக்கப்படும் இரசாயன ஆயுதங்களை முற்றாக அகற்றுவதற்கான முறைமையை ஐ. அமெரிக்கா வடகொரியாவிடம் இருந்து எதிர்பார்த்தது எனவும், அதுவரை கொண்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கமுடியாது என கூறியதிலிருந்தே இரண்டு நாடுகளும் எந்த ஒரு உடன்படிக்கைக்கு வரமுடியாமல் போனது என கடந்த மாத இறுதியில், ஐ. அமெரிக்கா வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையானது தெரிவிக்கின்றது.

குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த ஐ. அமெரிக்க இராஜதந்திரிகள் தமது நிலையை விட்டுக்கொடுக்காமை, இவ்விவகாரங்களை முழுமையாகக் கையாள வடகொரியா இராஜதந்திரிகளுக்கு வடகொரியா அரசாங்கம் திறந்த அதிகாரம் வழங்காமையின் அடிப்படையிலேயே இப்பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது என அரசியல் மட்டத்தில் கூறப்பட்டாலும், ஐ. அமெரிக்காவின் சமரசம் செய்யாத முடிவுக்கு வருவதற்கு, உள்நாட்டு அரசியல் – குறிப்பாக குடியரசுக்கட்சியின் தொடர்ச்சியான வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாடே காரணம் என கூறப்படுகின்றது.

மறுபுறம், வட கொரியா ஏற்கெனவே தமது ஏவுகணை, அணுசக்தி பரிசோதனையின் மீது தடை விதித்துள்ளது. அதன் அணுசக்தித் தளங்களையும் மூடியுள்ளதுடன், அதன் ஏவுகணை சோதனைத் தளங்களை அழிக்கத் தொடங்கியுள்ளது. வட கொரியா அணுசக்தி இணக்கத்தின் அடிப்படையில் தமக்கெதிரான பொருளாதாரத் தடைகள் மெதுவாகவும் முற்போக்கானதாகவும் தளர்த்துவதை வரவேற்றும் உள்ளது. இக்கண்ணோட்டத்திலிருந்து, ஐ. அமெரிக்கா தமது பொருளாதாரத் தடைகளை உண்மையில் வடகொரியாவின் நிகழ்ச்சிநிரலில் பயன்படுத்தியது என்று கருதப்படுமானால், அது 100 சதவீதம் உண்மையான நிலை அல்ல. மாறாக, ஐ. அமெரிக்கா, இன்னும் அதிகமான பொருளாதாரத் தடைகள் விதிக்க முற்படுமாயின், அந்நிலையும் எவ்வளவு தூரம் வட கொரியாவை பேச்சுவார்த்தை மேசைக்கு அமெரிக்காவின் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்றும் வகையில் தள்ளும் என்பதும் கேள்விக்குறியே ஆகும்.

ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுக்கு இடையிலான முதலாவது ச மாநாடு பலதரப்பினரின் கவனத்தை அக்காலப்பகுதியில் ஈர்த்திருந்தது. இப்பேச்சுவார்த்தை ஐ. அமெரிக்க-வட கொரிய உறவுகளை மீளப்புதுப்பிக்கும் ஒரு குறிப்புடனேயே மேற்கொள்ளப்பட்ட போதிலும், மாநாட்டில் முழுமையாக உடன்பாடு எட்டப்பட்டது என சொல்லுமளவுக்கு எதுவுமே இருந்திருக்கவில்லை. அணுஆயுத உற்பத்தி, பயன்பாட்டை வடகொரியா கைவிடும் என குறித்த மாநாட்டின் முடிவில் உறுதிசெய்திருந்த போதிலும், அவ்விடயத்திலும் எவ்வளவு தூரம் முழுமையான உடன்படிக்கை எட்டப்பட்டது தொடர்பில் ஆக்கபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

மறுபுறம், வடகொரியா இந்நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சாதித்தது என்னவெனில், முதலும் முக்கியமானதுமான அமெரிக்க விரோதக் கொள்கையின் நிறுத்தம் இப்பேச்சுவார்ததை மூலம் சாத்தியமானது இது வட கொரியாவுக்கு எதிரான அரசியல், பொருளாதார, இராணுவ பதற்றத்தை தவிர்க்கும் ஒரு நிலைப்பாடாகும் என்பதுடன், வட கொரியா அதன் பிராந்தியத்தில் இறையாண்மை மீதான முழு அதிகாரப்பூர்வ அங்கிகாரத்தையும், 1953ஆம் ஆண்டு யுத்த நிறுத்தத்தை ஒரு சமாதான உடன்படிக்கைக்கு மாற்றாகவும் பெற முயற்சிப்பதற்கு இந்நிலை வெகுவாகவே உதவும் என வடகொரியா கணக்கிடுகின்றது. மேலும் இது இறுதியாக அனைத்து பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என வடகொரியா நம்புகின்றது. இவ் எதிர்பார்ப்பை தகர்க்கக்கூடிய வகையிலான அமெரிக்காவின் அண்மைய போக்கே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலைக்கு காரணமானது எனலாம்.

அமெரிக்காவை பொறுத்தவரை வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையேயான பாரம்பரிய பதட்டம் குறைக்கப்படுவது, பசிபிக்கில் இருந்து மத்தியதரைக்கடலின் எல்லைகள் தொடங்கி, தெற்கு பசிபிக், இந்திய பெருங்கடல், பாரசீக வளைகுடாவின் முழுப் பகுதியிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய அமெரிக்க இராணுவ தளங்களை நிறுவுவதில் அவசியமானதாகும். இது அமெரிக்கா, மத்திய ஆசிய பிராந்தியத்தில் மூலோபாய பங்காளராக உருவாக்கக்கூடிய நிலையை உருவாகும் என அமெரிக்கா நம்புகின்றது. இச்செயல்பாடு மத்திய ஆசிய பிராந்தியத்தின் தெற்கில் – அதன் கடல் எல்லையில் சீனாவை பலவீனப்படுத்தக்கூடும் செயல்பாடாக அமையும் எனவும் அமெரிக்கா நம்புகின்றது. ரஷ்ய கூட்டமைப்பை பொறுத்தவரை, இது ரஷ்யாவின் கடல் எல்லைகளை வெகுவாக குறைக்கும் எனினும், ரஷ்யா இப்போதுள்ள நிலையில் அமெரிக்காவை நேரடியாக ஆசிய பிராந்தியத்தில் எதிர்ப்பதற்கு விரும்பவில்லை என்பதையும் அமெரிக்கா உணர்ந்ததாகவே உள்ளது.

இவ்வாறான பூகோள-அரசியல், மூலோபாய நகர்வுகளின் மத்தியிலேயே குறித்த இரண்டாவது உச்சி மாநாடு ஒரு வெற்றியளிக்காத ஆனால், தொடர்ச்சியாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் நிலைத்து நிற்கக்கூடிய வகையில் அமைந்திருந்தமை இன்னும் கூர்மையாக கவனிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*