;
Athirady Tamil News

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் – முகநூலும் இலங்கைத்தீவும்!! (கட்டுரை)

0

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் – முகநூலும் இலங்கைத்தீவும் -நிலாந்தன்
சமூக வலைத்தளங்களை ‘பலவீனமானவர்களின் ஆயுதம்’ என்று மானுடவியலாளர் ஜேம்ஸ் ஸ்கொட்(James Scott ) கூறியிருக்கிறார். 1985இல் மலேசிய கிராமங்களில் ஏற்பட்ட விவசாயிகளின் பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலில் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்

இந்து மகா சமுத்திரத்தில் தமிழ் நாட்டை வர்தா புயல் தாக்கிய போதும் இலங்கையை கஜா புயல் தாக்கிய போதும் முகநூலும் ஏனைய சமூக வலைத் தளங்களும்; கைபேசிச் செயலிகளும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கின. தேவைகளையும் உதவிகளையும் இணைப்பதில் பாரம்பரிய தொடர்பு சாதனங்களை விடவும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு சாதனங்களை விடவும் சமூக வலைத்தளங்களும் கைபேசிச் செயலிகளும் மிகத் துரிதமான மிகப் பரவலான ஒரு வலையமைப்பை கட்டி எழுப்பின.

ஆனால் இயற்கை அனர்த்தங்களின் போது ஆக்கபூர்வமாக உதவிய சமூக வலைத்தளங்களும் கைபேசிச் செயலிகளும் சமூகங்களுக்கிடையிலான மோதல்களின் போதும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் போதும் அவ்வாறு ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்வதில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

சமூகவலைத்தளங்கள் மற்றும் கைபேசி செயலிகளின் முக்கியத்துவம் என்னவென்றால் அவை சாமானியர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றன என்பது தான். சாமானியர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் கவலைகளையும் துன்பங்களையும் அவை வெளிக்கொண்டு வருகின்றன. அதேசமயம் இன்னொரு பக்கம் அவை சாமானியர்களின் இன உணர்வுகளையும் குழு உணர்வுகளையும் இன முரண்பாடுகளையும் குரோதங்களையும் வெளிக் கொண்டு வருகின்றன. சாமானியர்கள் எப்பொழுதும் ஒரு புறம் அப்பாவிகளாக இருப்பார்கள். இன்னொரு புறம் அறிவு பூர்வமாக பொது விவகாரங்களை அணுக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அப்பாவிகளாகவும் உணர்ச்சிகரமாகவும் இருப்பது அவர்களுடைய பலம். ஆனால் முரண்பாடுகள் மோதல்களின் போது அந்த அப்பாவித்தனமும் குழு மனோபாவமும் முரண்பாடுகளை ஊக்குவிக்கின்றன. பரப்புகின்றன.

சாமானியர்களின் அரங்கம் என்ற அடிப்படையில் சமூக வலைத் தளங்களும் கைபேசிச் செயலிகளும் சாமானியர்களின் பலங்களையும் பலவீனங்களையும் வெளிக் கொண்டு வருகின்றன. இங்கு பிரச்சினையாக இருப்பது பலவீனங்கள் தான். பலவீனங்கள் சமூக வலைத்தளங்கள் கைபேசிச் செயலிகள் ஆகியவற்றிடக்கூடாக பரவுகின்றன. இதனால் சமூக முரண்பாடுகளின் போதும் கலவரங்களின் போதும் மோதல்களின் போது சமூக வலைத் தளங்களும் கைபேசிச் செயலிகளும் முரண்பாடுகளை ஊக்குவித்து விடுகின்றன.

சமூக வலைத் தளமாகிய டுவிட்டர் அதிகளவு தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுவது குறித்து அதை ஸ்தாபித்தவரான சிலிக்கன்வலி தொழில் முனைவர் ஈவான்ஸ் வில்லியம்ஸ் பெரிதும் கவலைப்பட்டிருக்கிறார். ஒவ்வொருவரும் சுதந்திரமாகப் பேசவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் ஒரு தளம் இருந்தால் உலகம் சிறப்பானதாக இருக்கும் என்று தான் நினைத்தது தவறாகப் போய்விட்டது என்று டுவிட்டர் சமூக வலைத் தளத்தை வேறு மூன்று பேருடன் சேர்ந்து ஸ்தாபித்தவரான ஈவான்ஸ் வில்லியம்ஸ்; கூறியிருக்கிறார்.

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூல் ஒரு கருவியாக பயன்படுத்தப் படுவதாக கடந்த ஆண்டு ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் போல் மோசூர் ( Paul Mozur ) இதுதொடர்பாக நியூயோர்க் டைம்ஸில் எழுதி இருக்கிறார். அதில் அவர் பர்மாவின் ராணுவம் ஏவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு முகநூலை பயன்படுத்துகிறது என்றும் பொய்யான படங்கள். தகவல்கள், ஆத்திரமூட்டும் பதிவுகள் போன்றவற்றினூடாக அங்கு ஏவ்வாறு இனஅழிப்பு தூண்டப்படுகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த கடந்த ஆண்டு ஜெர்மனிம் முகநூலுக்கு எதிராகக் கட்டுப்பாடுகளை அறிவித்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி அகதிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அதிகரித்த முகநூல் பாவனையும் ஒரு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இதே காரணங்களை கூறித்தான் இந்தியாவில் 2012 இல் முகநூல் தடை செய்யப்பட்டது. அதைப் பின்பற்றி கடந்த ஆண்டு கண்டி வன்முறைகளின் போது சிறீலங்கா சமூக வலைத் தளங்களை முடக்கியது. கடந்த கிழமை இரண்டாவது தடவையாக முடக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு முகநூல் முடக்கப்பட்டதால் அதைப் பாவிப்பவர்களின் தொகை அக்காலகட்டத்தில் அரைவாசி அளவுக்கே குறைந்தது என்று அது தொடர்பாக ஆய்வு செய்த யுதாஞ்சய விஜேரட்ன ( Yudhanjaya Wijeratne ), என்பவருடைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அரைவாசிப் பேர் விபிஏன் ( VPN ) என்றழைக்கப்படும் வலையமைப்பை பயன்படுத்தி சமூக வலைத் தளங்களை நுகர்வதாக தெரியவந்தது.

இம்முறையும் பெரும்பாலான இளையவர்கள் VPN ஜ பயன்படுத்தி சமூக வலைத் தளங்களில் உலாவினார்கள். அதாவது VPN வலையமைப்பை பயன்படுத்த விரும்பாத அல்லது பயன்படுத்தத் தெரியாத தொழில்நுட்ப ஏழைகளுக்கு மட்டுமே முகநூல் முடக்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் பலர் தடைகளை மீறி முகநூலை நுகர்ந்ததாக ஓர் அரசியல் பிரமுகர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்

அது மட்டுமல்ல தாமரை மொட்டு அணி VPN பயன்படுத்தி முகநூல் மூலம் முரண்பாடுகளை ஊக்குவிக்கும் கருத்துக்களைப் பரப்பியதாக சிங்களம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். எனவே முகநூலை முடக்குவது என்பது எவ்வளவு தூரத்திற்கு வெறுப்புப் பரவுவதை தடுக்கும்? என்ற கேள்வியும் உண்டு.

உலகின் பிரபலமான இணைய வெளியீட்டாளர் நெற்ஸ் புளொக்ஸ் (Netz Blocks ) சமூக வலைத்தளங்களை தடுப்பதன் காரணமாக இலங்கை ஒரு நாளைக்கு சுமார் ஏழு மில்லியன் ரூபாயை இழந்தது என்று கூறுகிறது.
முகநூல் நிறுவனத்தின் உதவித் தலைவரான ரிச்சர்ட் ஆலன் ( Richard Alan ) கூறுகிறார் ‘முகநூல் சிறீலங்கா போன்ற சிறிய நாடுகளைப் பொறுத்தவரை பிரமாண்டமானதாக தெரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்களிடம் இறுதியிலும் இறுதியான ஓர் ஆயுதம் உண்டு அதுதான் சுவிட்சை நிறுத்துவது’ என்று.

உண்மைதான் அதைத்தான் இலங்கை அரசாங்கம் செய்தது. ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு செய்தி தடுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வதந்தியே செய்தியாகிறது. இலங்கைத்தீவில் ஏன் வதந்தி செய்தியாகிறது? கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு நாடுகளும் ஐ.நா.வும் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகளின் தோல்வியை இது காட்டவில்லையா? குறிப்பாக நிலை மாறு கால நீதி நீதியை அவர்கள் திட்டமிட்டபடி ஸ்தாபிக்க முடியவில்லை என்பதனை இது காட்டவில்லையா? இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஆழமான அர்த்தத்தில் உரையாடல் நிகழவில்லை என்பதை இது காட்டவில்லையா?

சில ஆண்டுகளுக்கு முன் கொழும்பிலுள்ள நோர்வே தூதுவரை சந்தித்தபோது அவர் ஒரு விடயத்தை பகிடியாகச் சுட்டிக் காட்டினார். யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்களப் பயணிகள் நல்லூர் முருகன் கோவிலில் வணங்கியபின் அருகே இருக்கும் றியோ கிறீம் ஹவுஸ் இற்;குப் போய் அங்கு றோல்ஸ் சாப்பிடுகிறார்கள் என்பதை அவர் சிரித்துக் கொண்டு சொன்னார். நான் அவருக்குச் சொன்னேன் உண்மை ஆனால் அந்த றோல்ஸ்களில் இருந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. ஏனெனில் அது ஒரு வர்த்தக உறவு. நல்லிணக்க உறவு அல்ல என்று

கடந்த பத்தாண்டுகளாக கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்யாமல் மேலோட்டமாக NGO க்களின் வேலைத்திட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான உரையாடலும் மதங்களுக்கு இடையிலான உரையாடலும் தோற்றுப் போய்விட்டன. என்பதால்தான் சமூக வலைத் தளங்களை முடக்க வேண்டிய ஒரு தேவை இலங்கை அரசுக்கு ஏற்படுகிறது.

முகநூலை அல்ல பொது பல சேனா போன்ற அமைப்புகள் உருவாகப் காரணமான அரசியல் அடித்தளத்தையும் சமூக அடித்தளத்தையும் தான் தடை செய்ய வேண்டும். இலங்கை தீவில் ஜிகாத் அமைப்புகளுக்கான உணர்ச்சிகரமான அடிப்படைகளை உருவாக்கியது பொது பல சேனா போன்ற சிங்கள பௌத்த கடும் போக்கு அமைப்புக்கள்தான.; பொது பல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் இப்போது சிறையில் இருக்கிறார். மதங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கியதற்காக அவர் சிறை வைக்கப்படவில்லை.

மாறாக நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில்தான் அவர் சிறையில் வைக்கப்பட்டுளார். ஆனால் பிக்குகளுக்கு எதிரான ஒரு சிறு கதையை எழுதிய சக்திக சத்குமார மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்பட்டமை அல்லது மதங்களுக்கிடையே வெறுப்பை உருவாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே தடை செய்ய வேண்டியது முகநூலை அல்ல. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் தேரவாத சிங்கள பௌத்த மேலாண்மை வாத அரசியலைத்தான் .

ஈஸ்டர் தாக்குதலின் பின் கோட்டை சிறீ ஜெயவர்த்தனபுரவின் மேயர் ஆகிய மதுர விதானகே முகநூலில் பின்வருமாறு கூறியிருக்கிறார் ‘காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு ராஜகிரியில் வீட்டைக் கட்டி வாழ முடிகிறது. ஆனால் ராஜகிரியைச் சேர்ந்த ஒரு சிங்களவருக்கு ஒரு வெற்றிலைக் கடையைக் காத்தான்குடியில் போட முடியாது.’ என்று. மதுரை விதானகே தாமரை மொட்டு கட்சியைச் சேர்ந்தவர.; தாமரை மொட்டின் எழுச்சியால்தான் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆட்சி குழப்பம் ஏற்பட்டது. ஆட்சி குழப்பத்தின் விளைவாகத்தான் நாட்டின் தலைமை இரண்டாகப் பிளவுண்டது. இவ்வாறு தலைமை பலவீனமாகக் காணப்பட்டதும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கு ஒரு காரணம்.

இரண்டு தலைவர்களும் தாக்குதல்களுக்கான பழியை எதிரணி மீது சுமத்தி அதில் யாரையாவது பலியாடுகளாக்கிவிடப் பார்கிறார்கள். இப்பலியாட்டு அரசியலில் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் பலியாகி விட்டார்கள். இப்பொழுது முஸ்லிம்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இத்தாக்குதல்களின் விளைவுகளை அறுவடை செய்து அதன் மூலம் யாராவது ஒரு ராஜபக்ச அரசுத்தலைவராக வர எத்தனிப்பது தெரிகிறது. ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தால் வெள்ளை வான் வரும் என்று தமிழர்கள் பயப்படுகிறார்கள். பொது பலசேனா வந்துவிடும் என்று முஸ்லிம்கள் பயப்படுகிறார்கள். பொது பலசேனாக்கள் அவற்றின் தர்கபூர்வ விளைவாக ஜிகாத் அமைப்புகளையே ஊக்குவிக்கும். அப்படி என்றால் இலங்கைத்தீவின் எதிர்காலம்? முஸ்லிம்களின் எதிர்காலம்?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 12 =

*