;
Athirady Tamil News

அவலங்களைக் காட்சிப்படுத்தல்: சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது பற்றி… !!(கட்டுரை)

0

அண்மைய குண்டுவெடிப்புகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இலங்கையர் ஒவ்வொருவரது மனத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர காலமெடுக்கும்.

அந்த அவலங்கள் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை ஒருபுறம் பிரசாரக் கருவிகளாகின்றன. இன்னொருபுறம், உணர்ச்சிகளைக் கிளறுவதற்கான வாய்ப்பாகின்றன. இலங்கை அரசியலின் கேடுகெட்ட பக்கங்கள், இப்போது இந்த அவலங்களை அறிக்கைப்படுத்துவதன் ஊடாகத் தொடர்கின்றன.

கடந்த மூன்று வாரங்களில் அறிக்கையிடப்பட்ட படங்கள், காணொளிகள் பற்றி ஒருகணம் எண்ணிப் பாருங்கள். நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியை இக்காணொளிகள் தக்கவைக்கின்றன. இன்னொரு வகையில் இதில் இருந்து மீண்டெழுவதற்கு, இவை தடையாக உள்ளன. இதன் பின்னால், ஒரு நுண்ணரசியல் அரங்கேறுகிறது.

மக்கள் இணைவதை சிலர் விரும்பவில்லை. மக்கள் இணைவது இனம், மதம், தேசியம் ஆகியவற்றின் பெயரால் அரசியல் செய்வோருக்கு வாய்ப்பானதல்ல.

சில விடயங்கள் அந்தரங்கமானவை. குடும்பங்களில் நிகழும் சில மங்கல நிகழ்வுகள் போல, அமங்கல நிகழ்வுகளும் அந்தரங்கமானவை. அவ்வாறான நிகழ்வுகள் பொதுவான காட்சிக்காக நிகழ்த்தப்படுவனவல்ல.

மங்கலமான நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் வாழ்த்துவதற்கென்று போகலாம். வாழ்த்துக்குரிய நிகழ்வுகளை அவர்கள் கண்டு களிக்கலாம்.

அமங்கல நிகழ்வில் தங்களது அனுதாபங்களைத் தெரிவிக்கப் போவோரும் துக்கத்தில் பங்கெடுப்போரும் தாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வை ஒரு கேளிக்கை நிகழ்ச்சியாகக் கருதுவதில்லை.

மரண நிகழ்வுகள் காட்சிக்குரியனவல்ல. இறந்தவரோ அல்லது அவரின் உறவினர்களோ, நண்பர்களோ தாங்கள் காட்சிப்பொருளாவதை விரும்புவதில்லை. ஆனால், அவர்களது அனுமதியின்றியும் அறியாமலும் அவை காட்சிப்படுத்தப்படுகின்றன.

ஊடகத்துறையின் வக்கிரமான வளர்ச்சி காரணமாகவும் ஊடக நிறுவனங்களிடையிலான வணிகப் போட்டி காரணமாகவும் இவை அதிகளவில் நடைபெறுகின்றன. அவலத்தைக் காட்சிப்படுத்துவதிலும் யார் முதலில் காட்சிப்படுத்துவது, யார் முதன்மையாகக் காட்சிப்படுத்துவது என்ற போட்டி உள்ளது. இந்த நோய் இப்போது சமூக வலைத்தளங்களுக்கும் பரவிவிட்டது.

தனது தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்கமான பக்கங்கள் என்று எவரும் கருதுகின்றவற்றை அந்தரங்கமாக வைத்திருக்க அவருக்கு உரிமையுண்டு. அவற்றைப் பகிரங்கப்படுத்துகின்ற முயற்சிகள் மட்டுமன்றி அவற்றை அறிய எடுக்கிற முயற்சிகளும் அத்துமீறல்களாகவே கொள்ளப்படுகின்றன.

பல நாடுகளில் இவை சட்ட விரோதமானவையாகவும் குற்றச் செயல்களாகவும் கருதப்படுகின்றன. இது குறித்து, பொதுவெளியில் இயங்குவோரும் ஊடகத்துறையினரும் அறிந்திருப்பதும் கவனமாயிருப்பதும் முக்கியமானது.

இவை, ஏன் ஊடகவெளியை நிரப்புகின்றன. ஊடகங்கள் அவலத்தை விற்க ஏன் போட்டி போடுகின்றன என்பவை, நியாயமான வினாக்களாகும். இவை, தனிமனிதரது அந்தரங்க வாழ்க்கை பற்றிய தகவல்களுக்கான ஒரு ‘சந்தையை’, ஊடகங்கள் உருவாக்கியதன் பின் விளைவுகள்.

அரசியல்வாதிகள் தொட்டு சினிமாப் பிரபலங்கள் வரை, அனைவரது அந்தரங்கங்கள் பற்றி அறியும் ஆவல், மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சினிமாப் பக்கங்களும் அரசியல் மஞ்சள் பெட்டிச் செய்திகளும் களம் அமைக்கின்றன. ஊடகங்களின் சினிமா பக்கங்கள், இந்த விதமான இரசனையை வளர்த்தே, தமது இருப்பை இயலுமாக்குகின்றன. எனினும், இவ்வாறான தகவல் அறிகிற ஆர்வத்துக்கும், மனிதரது அவலத்தை ஒரு பொழுது போக்காக்குவதற்கும் இடையே உள்ள வேறுபாடு பெரிது.

அவலங்களைக் காட்சிப்பொருளாக்குவது எவ்வளவு அபத்தமானதோ அதைவிட அபத்தமானது, அதைத் தொடர்ந்து பார்க்கும் மனநிலைக்கு நாம் பழக்கப்பட்டிருப்பது. இது ஆபத்தானதும் கூட.

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் அவலங்களைப் பார்த்துப் பழகிப்போதல் என்பது எவ்வளவு மோசமானதும் ஆபத்தானதும் என்பதை நாம் விளங்கியிருக்கிறோமா? இது மனித மாண்பையே கேள்விக்கு உட்படுத்துகிறது.

மற்றவர்கள் கதறி அழுவதைத் தொடர்ந்து பல நிமிடங்களுக்குக் காட்டுகிற தொலைக்காட்சி நிறுவனங்களும் அதைப் பல கோணங்களில் புகைப்படங்களாக வெளியிடும் ஊடகங்களும் அந்த ஒளி, ஒலிப் பதிவுகளைப் பார்ப்போர் பற்றி எத்தகைய மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றன? கதறி அழுகிறவர்கள் தங்களை அந்தக் கோலத்தில் பிறர் பார்ப்பதை விரும்புவார்களா என்று அவை சற்றேனும் சிந்திக்கின்றவா?

மனிதர் காட்சிப் பொருள்களல்ல. அவர்களுக்கான அந்தரங்க வாழ்க்கை உண்டு. அவர்களுக்குப் பிரத்தியேகமான வேலைகள் உள்ளன. எல்லாரோடும் பகிர இயலாத செயல்களும் உணர்வுகளும் எண்ணங்களும் உள்ளன. அவற்றில் எவையும் ஒரு சமூகத்துக்குக் கேடாக அமையாத வரை, மனிதரது அந்தரங்கம் மதிக்கப்படவேண்டும். அது மீறப்படுவது தவறானது. அம் மீறலை ஒரு சமூகம் ஏற்பது அதிலுந் தவறானது.

சில விடயங்கள் சொல்லப்படவேண்டியவை. அவை எவ்வளவு நுட்பமாகவும் மனித உணர்வுகளை மதிக்கிற முறையிலும் சொல்லப்படுகின்றன? அவற்றை ஒரு சமூகம் எவ்வளவு நுண்ணிய உணர்வுடன் உள்வாங்கிக் கொள்கிறது என்பன, அச் சமூகத்தின் பண்பாட்டின் மேன்மையின் அடையாளங்கள் ஆகும்.
பண்பாட்டின் மேன்மைகளைப் பழங்கதைகளில் சொல்லிப் பயனில்லை. அதைச் செயலில் காட்ட வேண்டும். சொல்லும் செயலும் ஒருங்கே வாய்ப்ப்பதென்னமோ சிலருக்குத்தான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − three =

*