ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா!! (கட்டுரை)

உங்களை எனக்கு உங்கள் இணையதளம் வாயிலாகவே தெரியும். பின்பு உங்கள் பதிவுகள் , நாவல்கள், சிறுகதைகள் என்று உங்களின் தாக்கம் தொடர்கிறது. சமீபகாலமாக உங்கள் மேடை பேச்சும் என்னை மிகவும் ஈர்க்கிறது. எது எப்படி இருந்தாலும் என்னை உங்களை பின்தொடர வைப்பது உங்களின் தத்துவம் சார்ந்த பார்வையும் அதை எளியோனும் புரிந்துகொள்ளும் வகையில் தக்க இடத்தில் பொருத்தி கூறுவதும் தான். மதங்கள் பற்றிய புரிதலை உங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” வாயிலாகவே நான் பெற்றேன்.
சமீபத்தில் நான் அடைந்த குழப்பத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் “இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பலகையை ஒவ்வொரு முறை கோவிலுக்குச் செல்லும் போதும் பார்த்துக் குழப்பிப் போவேன். சிலசமயமங்களில் சிரிப்பும், பல சமயங்களில் எரிச்சலும் உண்டாகும்.
ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது?
இந்துக்கள் மட்டும் கோவிலுக்குள் நுழைய என்ன தனிப்பட்ட தகுதிகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்?
முதலில் யாரை கோவில் நிர்வாகம் இந்துக்கள் என்று கூறிப்பிடுகின்றது?
முதலில் இந்து மதமென்பது ஒற்றைத் தலைமை, ஏக இறைவன், தொகுக்கப்பட்ட பிரத்யேக புனித நூல் என்று ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படும் மஷினரி வகை மதம் கிடையாது. அஃது இந்திய நிலப்பரப்பில் தோன்றியக் குழு வழிபட்டு முறைகள், தத்துவங்கள், தரிசனங்கள், ஞான மரபுகளின் தொகுப்பு. அவ்வளவு ஏன் இந்து மதமே சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம் என்கிற ஆறு மதங்களின் கூட்டுதான். அதில் பல நாட்டார் தெய்வ மற்றும் பழங்குடி இறை வழிபாட்டு முறைகளும் அடக்கம்.
இதில் யாரை இந்து என்று வகைப்படுத்துவது?
சட்ட ரீதியாக யார் இந்துக்களோஅவர்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதியென்றால், நமது இந்து குடும்பச் சட்டமே இந்து என்பதற்குச் சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. சட்டம் யார் யாரெல்லாம் இசுலாமியர் இல்லையோ, கிறித்துவர் இல்லையோ, பார்சிகள் இல்லையோ அவர்கள் இந்துக்கள் என்று குழப்பியடிக்கிறது.
இன்றைய நவீன இந்து மதத்தின் ஆறு அடிப்படை தரிசனங்ககளான சாங்கியம், யோகம், நியாயம் ,வைசேடிகம், மீமாம்சம், வேதாந்தம் முதலியவற்றில் பெருபாலானவை கடவுள் என்ற கோட்பாட்டை மறுப்பவை. கடவுள் இருப்பினையே ஏற்றுக் கொள்ளாத சாங்கிய தத்துவத்தை நிறுவியவரான கபிலரை விஷ்ணுவின் அம்சமாகப் போற்றுவதும் இந்து மதத்தில் தான். இந்து மத அல்லது இந்திய மெய்யியலில் கடவுளை மறுப்பதும் ஒரு வகை.
நவீன இந்து மதம் கடவுள் மறுப்பு தத்துவங்களையும் இனணத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் கடவுள் மறுப்புக் கொண்ட , கடவுளை புனிதமாகக் கருதாத ஒரு நபர் இந்திய மெய்யியலின்படியும், சட்டத்தின்படியும் தன்னை இந்து என்று அறிவிக்கலாம். அவரும் இந்து என்றே வகைப்படுத்தப்படுவார். அவரைக் கோவில் நிர்வாகம் அனுமதிக்கும். அனால் இந்தத் தேசத்தில் பிறந்து இங்கு வாழும்பிற மதத்தவரோ அல்லது இந்திய கலாசாரத்தின் பால் அன்பும் , ஆர்வமும் கொண்டு இங்கு வரும் வெளிநாட்டாரோ இந்த இறைவனைத் தரிசிக்க வந்தால் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதிக்கும். இதில் எந்தத் தர்க்கமும் இல்லை
காந்தியடிகள் மிகச் சரியாகச் சொன்னார் ” இந்து மதம் ஒரு பிரத்யேக மதம் அல்ல உலகில் உள்ள அத்துணை தீர்க்கதரிசிகளையும் அவர்களின் தத்துவங்களையும் வழிபடுவதற்கு அதில் இடம் உள்ளது” என்று.
தேச பிதாவை விடுங்கள் , தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்று கோவில் நிர்வாகமும் , பக்தர்களும் போற்றும் எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருப்பவரை லோக்கல் இறைவனாக மாற்றி எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல் அனைவரும் தரிசிக்க விடாமல் தடுப்பது கோவில் நிர்வாகத்தின் அறியாமை அன்றி வேறில்லை!