;
Athirady Tamil News

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் !! (கட்டுரை)

0

மிகக்கோரமான உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, அச்சமும் துயரமும் பயங்கரமும் இலங்கை மக்களின் மனதை, மீண்டும் ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ள வேளையில், அரசியல் பரப்பில், முக்கியமான சில காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்தக் காய் நகர்த்தல்கள் எல்லாம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, இடம்பெற்று வருவதையும் உணரக் கூடியதாக உள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி, நடைபெற்ற ‘வரலாற்று முக்கியத்துவம் மிக்க’ ஜனாதிபதித் தேர்தலின் ஞாபகங்கள் கூட, இன்னும் இலங்கையர்களின் மனதிலிருந்து நீங்கியிருக்காது.

2009இல் யுத்தத்தை வென்ற வீரத் தலைவனாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ, தனக்கிருக்கும் பெரும்பான்மை மக்கள் செல்வாக்கின் உச்சத்தில், ஜனநாயக விழுமியங்களிலிருந்து நீங்கி, எதேச்சதிகாரம், வல்லாட்சி, குடும்ப ஆட்சி என்ற வழியில், அரசமைப்பு ரீதியில் நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதிக்கு இருந்த, குறைந்தபட்ச மட்டுப்பாடுகளைக் கூட இல்லாதொழித்து, ஒரு சர்வாதிகாரியாகும் பாதையின் உச்சத்தில் நின்றிருந்த பொழுதில், ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் வேண்டிய பல்வேறு அமைப்புகளும் ஒன்றிணைந்து, பொது வேட்பாளராக, அதுவரை மஹிந்தவின் அமைச்சரவையில் முக்கிய அங்கத்தவராக இருந்த மைத்திரிபால சிறிசேனவைக் களமிறக்கின.

2015 ஜனாதிபதித் தேர்தல் என்பது, மஹிந்த எதிர் மைத்திரி அல்ல; அது மஹிந்தவா, இல்லையா என்ற கேள்வியையே, இலங்கை மக்களுக்கு முன்பாக வைத்தது. தான் எப்படியும் வென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையில், தனது பதவிக்காலம் முடிவதற்குச் சிலகாலமிருந்தும் கூட, முன்னதாகவே மஹிந்த தேர்தலுக்குச் சென்றிருந்தார்.

தேர்தல் பிரசாரக் காலம் முழுவதும், அரச இயந்திரம் முழு மூச்சுடன் மஹிந்தவின் வெற்றிக்காக உழைத்தது என்றால் அது மிகையல்ல. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க, அவருடைய வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருவதை அவரே உணர்ந்திருப்பார். 2015 ஜனவரி ஒன்பதாம் திகதி அதிகாலை, தன்னுடைய தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய அரண்மனையாகவே அவர் மாற்றியிருந்த அலரி மாளிகையில் இருந்து, மஹிந்த வௌியேறினார்.

நல்லாட்சி தருவதாக வாக்களித்து, தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால ஜனாதிபதியானார்.
தொடர்ந்து, ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ‘நல்லாட்சி’ வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருந்தார்கள். ஆனால், மஹிந்தவை எதிர்க்க ஒன்றிணைந்தவர்களால், அந்த ஒற்றுமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

விளைவு, மைத்திரி நல்லாட்சியை மறந்துவிட்டுத் தன்னையும் தன் கட்சியையும் பலப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். நல்லாட்சிக்காக ஒன்றிணைந்தவர்களின் ஒற்றுமை, அடுத்த சில மாதங்களிலேயே அர்த்தமற்றதாகிப் போனது. அடுத்த சிலமாதங்களில், இடம்பெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரை கூட, அவர்களால் அந்த ஒற்றுமையைப் பேணிப்பாதுகாக்க முடியவில்லை.

அதன் பின்னர், தற்காலிக மற்றும் சந்தர்ப்பவாத ஒற்றுமையாகவே, இன்றுவரை நல்லாட்சி அரசாங்கம் கொண்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இடைநடுவே உருவான ஊழல் குற்றச்சாட்டுக்கள், குறிப்பாக மத்தியவங்கி முறிகளில் இடம்பெற்ற ஊழல், நல்லாட்சி மீது மட்டுமல்ல, இதுவரை காலமும் ‘கனவான்’ பிம்பத்தைக் கொண்டிருந்த பல தலைவர்களின் மீது அழியாக் கறையை ஏற்படுத்திவிட்டது.

ஏனோ தானோவென்றே, நிலையுறுதியில்லாது நல்லாட்சி அரசாங்கம் சென்று கொண்டிருந்த வேளையில்தான், 2018 பெப்ரவரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன. அதுவரை மஹிந்த ராஜபக்‌ஷ நேரடியாகத் தலைமையேற்காவிட்டாலும், அவரது தலைமையில் புதிதாக உருவான ‘மொட்டு’ (சிங்களத்தில் பொஹொட்டுவ) என்று அவர்களது சின்னத்தைச் சுட்டி, பொதுவாக விளிக்கப்படும் ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ (இலங்கை பொதுமக்கள் முன்னணி) போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளோடும் ஒப்பிடுகையில், அதிகபட்ச வாக்கு சதவீதத்தைப் (40.47%) பெற்றிருந்தது. இது ராஜபக்‌ஷ குழுமத்துக்குப் புது நம்பிக்கையை அளித்தது.

ஒரு புதிய கட்சி, அது தொடங்கிய மாத்திரத்திலேயே இத்தகைய மக்களாதரவைப் பெறுவதானது, நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதொன்று. இதில் மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிநபரின் செல்வாக்கு முக்கியமானது என்றாலும், மறுபுறத்தில், நல்லாட்சி அரசாங்கத்தின் சொதப்பல்களும் மஹிந்தவின் இந்த மறு பிரவேசத்துக்குப் பெரும்பங்களித்தன என்பதை மறுக்க முடியாது.

இந்தச் சூழலில் தான், 2018இல், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் குறிப்பாக, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடைந்தது. ‘ரணிலோடு வேலை செய்ய முடியாது’ என்ற நிலை உருவானதாக, 2018இல் மைத்திரி குறிப்பிட்டிருந்தது, நாம் இங்கு கருத்திற்கொள்ளலாம்.

ஆனால், இது வெறும் இணைந்து இயங்க முடியாத பிரச்சினை என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. இதற்குள் நிச்சயமாக வேறு பிரச்சினையொன்று இருக்க வேண்டும். அந்தப் பிரச்சினை அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றியது என்பதுதான் இங்கு பொதுவான ஊகம்.

2015 ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரி பொது வேட்பாளராகக் களமிறங்கியபோது, தன்னுடைய பேச்சுகளில், தான் ஒரு முறை மட்டும்தான் ஜனாதிபதி பதிவியிலிருப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் அன்று மைத்திரியை ஆதரித்த ஒன்றிணைந்த கட்சிகளினதும், ஏனைய அமைப்புகளினதும் நிலைப்பாடாகவும் இருந்தது.

மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதும், ஒருவர் இருமுறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்ற மட்டுப்பாட்டை மீளக் கொண்டுவருவதும் எல்லாம் மைத்திரியின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன.

அரசமைப்புக்கான 19ஆம் திருத்தத்தினூடாக, 18ஆம் திருத்தத்தினூடாக மஹிந்த தகர்த்தெறிந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி மீதான பல மட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், சில மட்டுப்பாடுகளிலிருந்து, தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிக்கு மட்டும் விதிவிலக்களிக்கப்பட்டது. அந்த மட்டுப்பாடு, எதிர்கால ஜனாதிபதிகளுக்கு மட்டுமே வலுவுள்ளதாக அமையும். குறிப்பாக, ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொள்வது அவ்வாறு விதிவிலக்களிக்கப்பட்ட மட்டுப்பாடுகளில் ஒன்று.

ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது? தான் முன்னர் அளித்த வாக்குறுதிகளை மீறி, இரண்டாவது முறையும் ஜனாதிபதியாகும் முயற்சியில் மைத்திரி செயற்படத் தொடங்கியமை அனைவருக்கும் வெட்டவௌிச்சமாகவே தெரிந்தது. ஆனால், மஹிந்த தரப்பு மீண்டும் பலமடையத் தொடங்கியிருந்த வேளையில், தான் மீண்டும் பொது வேட்பாளராகக் களமிறங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியும் நிச்சயம் தயாராக இருந்திருக்க மாட்டார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பிட்டுச் சொல்வதானால், சுதந்திர இலங்கையின் பழம்பெரும் தேசியக் கட்சியாக, ஐக்கிய தேசியக் கட்சி இருந்தும், கடந்த 25 வருடங்களாக, அவர்களால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இதில், கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில், ஐக்கிய தேசியக் கட்சி நேரடியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேயில்லை. மாறாகப் பொதுச் சின்னமொன்றில், பொது வேட்பாளரொருவரைக் களமிறக்கி அவரை ஆதரித்திருந்தது.

அதிலும் 2015இல், தமது பிரதான வைரியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கும் நிலைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியினர் தள்ளப்பட்டிருந்தனர். அரசியல் ரீதியான காய்நகர்த்தல்களைப் பொறுத்தவரையில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையின் இந்த முடிவுகள் சரியானதெனக் கருத முடியும். என்றாலும், கட்சித் தொண்டனுக்கு, இது தொடர்ந்தும் பலத்த ஏமாற்றத்தைத் தந்துகொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஆகவே, அடுத்த முறையேனும், ஐக்கிய தேசியக் கட்சி, தன்னுடைய தலைவரை அல்லது தன்னுடைய சொந்தக் கட்சி முக்கியஸ்தரை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டிய சூழ்நிலைக் கட்டாயம், கட்சிக்குள் இருக்கவே செய்கிறது. மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதிக் கனவு நிறைவேற வேண்டுமானால், 2020ஐத் தாண்டி, வேறொரு சந்தர்ப்பம் அவருக்கு அமையாது. ஆனால், ரணிலுக்கு இன்னோர் எண்ணமும் இருக்கக்கூடிய வாய்ப்புள்ளதையும் இங்கு கூர்மையாக அவதானிக்க வேண்டும்.

19ஆம் திருத்தத்தினூடாக, நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீதான மட்டுப்பாடுகள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடுத்து இன்னொரு திருத்தத்தினூடாகவோ அல்லது புதிய அரசமைப்பினூடாகவோ நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை மாற்றியமைக்கும் திட்டம் ரணிலிடம் நீண்ட காலமாகவே இருப்பதையும் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். அதற்கான முஸ்தீபுகளையும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்திருக்கிறார்.

ஆகவே, ஜனாதிபதியாகும் தனது நிறைவேறாத கனவை அவ்வாறு விட்டுவிட்டு, அதிகாரம் மிக்க பிரதமராகத் தன்னை உருவாக்கிக்கொள்ளும் எண்ணத்தில் ரணில் இருக்கலாம். எது எவ்வாறெனினும், ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரியை மீண்டும் ஆதரிக்காது என்ற நிலைப்பாடு, வெட்டவௌிச்சமாக மக்களுக்கும் மைத்திரிக்கும் புரிந்த நிலையில்தான், தன்னுடைய அடுத்த காய்நகர்த்தலை, மைத்திரி மேற்கொண்டார். அதுதான் மைத்திரி, 2018 ஒக்டோபர் 26 அன்று, ரணிலைப் பிரதமர் பதிவியலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததனூடாக ஏற்படுத்திய அரசமைப்புச் சிக்கல்.

‘மஹிந்த மீண்டும் ஜனாதிபதியானால், தானும் தன்னுடைய குடும்பமும் மண்ணில் புதைக்கப்படுவோம்’ என்ற தொனியில், 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் முழங்கிய மைத்திரி, 2018 ஒக்டோபரில், அதே மஹிந்தவை அழைத்துப் பிரதமராக, அதுவும் அரசமைப்புக்கு முரணான வகையில், நியமித்தார்.

அடுத்த 52 நாள்கள், இலங்கை பெரும் அரசமைப்பு நெருக்கடிக்குள் சிக்கித் தவித்தது. நாடாளுமன்றம், மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களால் வன்முறைகொண்டு முடக்கப்பட்டது. மைத்திரி-மஹிந்தவின் அரசமைப்புக்கு எதிரான சதிப்புரட்சியை, பொதுமக்கள் வீதிக்கு இறங்கி எதிர்த்தார்கள். மேன்முறையீட்டு நீதிமன்றில், மஹிந்த தலைமையிலான சட்டவிரோத அமைச்சரவைக்கு எதிராகவும் மீயுயர் நீதிமன்றில், நாடாளுமன்றம் சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்டதுக்கு எதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

மேன்முறையீட்டு நீதிமன்றம், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அமைச்சரவை இயங்குவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. மீயுயர் நீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது அரசமைப்புக்கு முரணாணது என்று தீர்ப்பளித்து, குறித்த கலைப்பை இரத்துச் செய்தது. இத்தோடு 52 நாள் கூத்து முடிவுக்கு வந்தது.

ஆனால், 2018இல் ஏறிக்கொண்டு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் செல்வாக்கையும் ஆதரவையும் இந்த 52 நாள் கூத்து, பொதுமக்களிடையே பெரிதும் சிதைத்தது என்றால் அது மிகையல்ல. ஏற்கெனவே செல்வாக்கின்றி, பிரபல்யம் இழந்துபோயிருந்த மைத்திரி, மேலும் பிரபல்யம் இழந்தார். இப்படி ஓர் ஆபத்தான செயலை, ஏன் மைத்திரியும் மஹிந்தவும் செய்ய வேண்டும்? இதனால் யாருக்கு என்ன இலாபம்?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*