நம்பிக்கையில்லாப் பிரேரணையும் அரசியல் பின்னணியும்!! (கட்டுரை)

இலங்கையின் பேரினவாத அரசியல் கட்சிகளும், தலைவர்களும், பௌத்த கடும்போக்குவாதிகளும் இலங்கை ஒரு பௌத்த நாடு இதனை இங்குள்ள சிறுபான்மையினர் ஏற்றுக் கொண்டு நாட்டுக்கு விசுவாசமாக நடக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டே சிறுபான்மையினரை அடிமைகள் போன்று நடத்துவதற்கு துணிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இனங்களுக்கு இடையே சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், சமவாய்ப்பையும் வழங்குவதற்கு மறுதலித்துக் கொண்டிருப்பவர்களிடம் நாட்டின் மீதான பற்றை எதிர் பார்க்க முடியாது. அவர்கள் நாட்டுப்பற்று என்ற போர்வைக்குள் சிறுபான்மையினருக்கு எதிரான போர்க்களத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும் இனவாத கருத்துக்களே தடைகளாக இருந்து வருகின்றன. சிறுபான்மையினருக்கு சிங்கள பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் உரிமைகளையும், சுதந்திரத்தையும் முறையாக வழங்கி இருந்தால், இந்த நாட்டில் யுத்தமும், மனித அழிவுகளும் ஏற்பட்டிருக்காது. ஆனால், ஒரு இனம் மட்டும் ஆள வேண்டும். உரிமைகளை அனுபவிக்க வேண்டுமென்ற கொள்கையே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழர்களின் அரசியல் போராட்டத்தையும், உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தையும் ஒடுக்கிய ஆணவத்தில் உள்ள சிங்கள பேரினவாதம் மற்றுமொரு சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களையும் அடக்குவதற்கு சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், பள்ளிவாசல்களையும் தாக்கும் இவர்களின் நடவடிக்கை தற்போது குருநாகல், கம்பஹா மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் கோரத்தாண்டவம் ஆடி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றது. அடுத்து முஸ்லிம்கள் வாழும் எந்தப் பிரதேசங்களில் இவர்களின் கோரத்தாண்டவம் அரங்கேற்றப்படும் என்று தெரியாது.
தமிழ் ஆயுதக் குழுக்களுடன் நடைபெற்ற 30 வருட கால யுத்தமாக இருந்தாலும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களாக இருந்தாலும் அவற்றின் மூலமாக அரசியல் அதிகாரத்தை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம். எவ்வாறு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற நோக்கத்தையே காணக் கூடியதாக இருக்கின்றது.
ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களின் மூலமாகவும் அரசியல் இலாபத்தை அடைவதற்கே பேரினவாதக் கட்சிகள் நகர்வுகளை மேற்கொண்டுள்ளன. தற்கொலை பயங்கரவாதிகளுக்கும், முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக காட்டுவதற்குரிய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்கொலை தாக்குதல்களுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் தொடர்புகள் இருக்குமாயின் அதனை சட்ட ரீதியாக விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள். இதனை தமது செயலின் மூலமாக நிரூபித்துள்ளார்கள். ஆனால், தங்களது அரசியல் இலாபத்திற்காக கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
தற்கொலை தாக்குதல்தாரிகளுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் தொடர்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இவருடன் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல்மாகாண ஆளுநர் அஸாத்சாலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்களுக்கும் தொடர்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக எதிர்க்கட்சியிலுள்ள மஹிந்த ராஜபக் ஷ சார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 64 பேர் கையொப்பமிட்டுள்ளார்கள்.
1983 ஜுலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் புலிகள் நடத்திய முதலாவது கண்ணி வெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் முன் வைக்கப்படும் இனவாத கருத்துக்களும், சொத்து அழிப்புக்களும் அன்று தமிழர்களுக்கும், தமிழ் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டன.
அரசாங்கத்தை மாற்ற வேண்டுமென்பதில் மஹிந்த ராஜபக் ஷ அணியினர் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணா நாயக்கா ஆகியோர்களுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. ஆனால், அதில் மஹிந்த ராஜபக் ஷ அணியினர் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பகை மறந்து உறவு கொண்டாடி ஆட்சி கவிழ்ப்பை மேற்கொண்டார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவையும், அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்தார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக் ஷ நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆனாலும், இந்த திடீர் ஆட்சி 52 நாட்களைக்கூட கடக்க முடியவில்லை.
ஆகவே, ஆட்சியை மாற்ற வேண்டுமென்ற எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில்தான் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இது கூட அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுப்பதற்காகவேயாகும். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா அல்லது தோல்வி அடையுமா என்பதற்கு அப்பால் இதன் மூலமாக சிங்கள மக்கள் மத்தியிலேயே பெரியதோர் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கு எதிர்க் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர் என்பதுதான் உண்மையாகும்.
நாங்கள் புலிப் பயங்கவாதத்தை ஒழித்தோம். ஆனால், இன்றைய அரசாங்கம் நாட்டில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதம் பரவுவதற்கு வழி அமைத்து விட்டது. ஆதலால், அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்ற பிரசாரத்தை மேற்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இப்போதே இத்தகைய பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்கள். மறு புறத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துகளை சிங்கள மக்களிடையே பரப்புரை செய்யவும் வழி ஏற்பட்டுள்ளது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக் ஷ போட்டியிட உள்ளார் என்பது முடிவாகியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்குரிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. இதனால், தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பெரும்பான்மையான வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்லும் என்பதனால், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தோற்கடிக்க வேண்டுமாயின் சிங்கள மக்களின் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க் கட்சியினர் பயன்படுத்தவுள்ளனர் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்படுமாயின், அதனை ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கியத் தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக திசை திருப்பவும் எண்ணியுள்ளார்கள். அதாவது, ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கியத் தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணையாகச் செயற்பட்ட ரிஷாத் பதியுதீனை பாதுகாத்துள்ளனர் என்று பிரசாரம் செய்வார்கள். இதே வேளை, தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பேன் என்று கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதே வேளை, ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இருப்பதற்கு இடமில்லாது உள்ளார்கள். பலர் தொழில்களை இழந்துள்ளார்கள். தமது வாழ்வினை எவ்வாறு கொண்டு செல்வதென்று தெரியாத அவலத்தில் உள்ளார்கள். ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதில் அக்கறை காட்டவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களை மாத்திரம் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றார்கள். ஊடகங்களுக்கு கருத்துச் சொல்லும் போது எதிலும் ஒட்டிக் கொள்ளாத பதிலையே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
அளுத்கம, தர்காநகர், பேருவளை, கிந்தோட்டை, அம்பாறை, திகன, கண்டி ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது அரசியல் தலைவர்கள் பார்வையிட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். நஷ்டஈடு வழங்கப்படுமென்றார்கள். இத்துடன் எல்லாம் முடிந்து விட்டது. மேற்படி இடங்களில் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இது வரைக்கும் முறையாக நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இது போன்ற நிலையே குளியாப்பிட்டி, மினுவாங்கொடை மற்றும் பல இடங்களில் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்படும்.
முஸ்லிம்களின் கடைகளையும், சொத்துக்களையும் தாக்கி அழித்த சந்தேக நபர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் அனைவரையும் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழோ, அவசரகால தடைச் சட்டத்தின் கீழோ வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. அதனால்தான் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் நீண்ட காலமாக மேற்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்திய விடயங்கள் வெற்றிகரமாக கையாளப்படுவதற்கு துணை புரிந்துள்ளன. முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்காவை அணிய முடியாது. இதற்கு முஸ்லிம் மதத் தலைவர்களே சம்மதம் தெரிவித்துள்ளார்கள். பாடசாலைகள், அலுவலங்களில் முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவதற்கு பல இடங்களில் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை தட்டிக் கேட்பதற்கும், தடை செய்யாத ஒன்றை தடை செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் முஸ்லிம் தலைவர்கள் தவறியுள்ளார்கள். முஸ்லிம்கள் வீடுகளில் பாவனைக்கு கூட ஒரு கத்தியை வைத்துக் கொள்வதற்கு அச்சமடைந்துள்ளார்கள். இந்த அச்சத்தை போக்குவதற்குரிய நடவடிக்கைளை தலைமைகள் எடுக்கவில்லை.
இவ்வாறு முஸ்லிம் தலைவர்கள் இருப்பதற்கு காரணம் எல்லோரையும் பயம் தொற்றிக் கொண்டுள்ளது. அரசியல் இலாபம் கருதிய செயற்பாடுகள் கோழையாக்கியுள்ளது. இவை பற்றி நான் பேசினால் எனக்கு சிங்களவர்கள் வாக்குப் போட மாட்டார்கள். தேர்தலில் நான் தோல்வி அடைந்துவிடுவேன். இவை பற்றி பேசினால் என்னையும் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர் என்று சொல்லிவிடுவார்கள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை மையப்படுத்தி பேசாதுள்ளார்கள். ஆனால், முஸ்லிம் சமூகம் நிர்க்கதி நிலையில் உள்ளது. யார் எங்களை தேற்றுவார்? யார் எங்களுக்கு கைகொடுப்பார் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றது.
தலைவர்களுக்கு நிச்சயமாக பயம் இருக்க வேண்டும். ஆனால், அந்தப் பயம் அடிமைத்தனத்தை வளர்ப்பதாக இருக்கக் கூடாது. பயமில்லாத தைரியம் வெற்றியை கொடுக்காது. முஸ்லிம் சமூகம் அடைந்து கொண்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை பாதுகாப்பு தரப்பினரிடம் சொல்வதில் என்ன தயக்கம் இருக்கின்றது . பாதுகாப்பு தரப்பினர் முஸ்லிம்கள் படையினருக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஒத்துழைப்பை பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் அசௌகரியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு எடுத்துச் சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர்கள் உள்ளார்கள்.