இந்தியாவின் வழியில் கால் பதிக்கும் சீனா!! (கட்டுரை)

விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் வடிவத்தை அடுத்த கட்டத்துக்கு மாற்றியபோது, கெரில்லா தாக்குதல்களில் இருந்து கரும்புலித் தாக்குதல்களுக்கு (தற்கொலைத் தாக்குதல்) மாறியபோது, இந்தியாவுக்கு அச்சம் வந்தது.
இலங்கையில் சீனாவுக்கென்று தனியான நலன்கள் உள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என்பன அதன் முக்கியமான கேந்திர நிலையங்களாக இருக்கின்றன.
குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தான் முதலில் உதவ முன்வந்தன. அப்போது, சீனா பதுங்கிக் கொண்டது. இலங்கையில் அமெரிக்க, பிரித்தானிய புலனாய்வாளர்கள் குவியத் தொடங்கிய பின்னரே, சீனா விழித்துக்கொண்டது.
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்று விடுவார்களோ என்ற நிலையில் தான், அவர்களையும் அடக்கி, இலங்கை அரசாங்கத்தையும் வழிக்குக் கொண்டு வந்து, தனது பாதுகாப்பு நலன்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றது இந்தியா
1987ஆம் ஆண்டு இலங்கையுடன் இந்தியா அமைதி உடன்பாட்டைச் செய்து சூழலுடன் கிட்டத்தட்ட ஒத்துப் போகக் கூடியதொரு வகையில் தான், இலங்கையுடன் சீனா அண்மையில் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது.
1987ஆம் ஆண்டு ஜூலை 05ஆம் திகதி, இரவு நெல்லியடி இராணுவ முகாமின் தடைகளை உடைத்துக் கொண்டு நுழைந்த கரும்புலி ெகப்டன் மில்லரின் குண்டு லொறி, முகாமுக்கு மத்தியில் வெடித்துச் சிதறியது.
பெருமளவு இராணுவத்தினர் கொல்லப்பட்ட அந்த தாக்குதலுடன், 1987 மே 26ஆம் திகதி தொடங்கப்பட்ட ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையின் மூலம், இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்ட இராணுவ வெற்றி அடியோடு பெயர்ந்து போனது.
அந்த தாக்குதல், இராணுவத் தீர்வு முயற்சிக்குச் சவாலாக மாறியது.
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியா காய்களை நகர்த்தியது. இந்தியாவின் காய்நகர்த்தல்களைப் புரிந்து கொண்டு, அப்போதைய ஜனாதிபதி ஜேஆர். ஜெயவர்த்தனவும் தனது நரித்தந்திரத்தைப் பயன்படுத்தி காய்நகர்த்தல்களில் ஈடுபட்டார்.
கொழும்புக்கும், புதுடெல்லிக்கும் இடையில் பறந்து திரிந்த இராஜதந்திரிகள், கடைசியாக ஒரு உடன்பாட்டுக்கு வடிவம் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில், கொழும்பில் பதற்றம் மிகுந்திருந்த ஒரு சூழலில், 1989 ஜூலை 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, வந்திறங்கினார். ஜே.ஆருடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, இருவரும் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக என்ற பெயரில், கையெழுத்திடப்பட்ட அந்த உடன்பாட்டுக்கு அமைய அடுத்த சில மணி நேரங்களிலேயே அமைதிப்படை என்ற போர்வையில், இந்தியப்படையினர் பலாலியிலும், திருகோணமலையிலும் வந்திறங்கத் தொடங்கினர்.
நெல்லியடி குண்டுத் தாக்குதலையடுத்து, இராணுவம் சுதாகரித்துக் கொண்டு யாழ்ப்பாணத்தின் மீது இன்னொரு தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், இந்தியா தலையிட்டு காரியத்தைக் கெடுத்து விட்டது என்றே- புலிகளைப் போரில் வென்ற பின்னர், எழுதிய வரலாற்று நூல்களில் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன போன்ற படை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இல்லையேல், அப்போதே யாழ்ப்பாணத்தைப் பிடித்து புலிகளை அழித்திருப்போம் என்று அவர்கள் இப்போது கூறுகின்றனர்.
புலிகளை அழிக்கவும் முடியாமல் ஜே.வி.பி கிளர்ச்சியையும் எதிர்கொள்ள முடியாத நிலையில் தான், இந்தியாவிடம் ஜே.ஆர் தந்திரமாக புலிகளை அழிக்கும் பணியை ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார் என்ற வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.
இலங்கையில் ஏற்பட்டு வந்த பதற்றநிலையும் , போரும் இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே, அந்த உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு இந்தியா முற்பட்டது.
அந்த உடன்பாட்டின் மூலம், இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முடிய வில்லை. ஜனாதிபதி பிரேமதாசவின் தலைமையிலான இலங்கை அரசே, இந்தியப்படையினரை வெளியேறக் கோரியது. புலிகளை அழிக்காமலேயே அது வெளியேறியது.
விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் வடிவத்தை அடுத்த கட்டத்துக்கு மாற்றியபோது, கெரில்லாத் தாக்குதல்களில் இருந்து கரும்புலித் தாக்குதல்களுக்கு (தற்கொலைத் தாக்குதல்) மாறியபோது, இந்தியாவுக்கு அச்சம் வந்தது.
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்று விடுவார்களோ
என்ற நிலையில் தான், அவர்களையும் அடக்கி இலங்கை அரசாங்கத்தையும் வழிக்குக் கொண்டு வந்து, தனது பாதுகாப்பு நலன்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றது இந்தியா.
அந்த உடன்பாட்டைச் செய்து கொண்டதன் மூலம், இலங்கையில் தனது ஒரு இலட்சம் படையினரை இந்தியா நிறுத்தியது. புலிகளைக் கையாளுகின்ற முழுப்பொறுப்பையும் தானே எடுத்துக் கொண்டது. அவர்கள் அமைதி முயற்சிக்கு இணங்க மறுத்தபோது, போரை நடத்தி அழிக்கவும் நடவடிக்கை எடுத்தது.
இப்போது அதே போன்றதொரு சூழல் தான் ஏற்பட்டிருக்கிறது.
21/4 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இலங்கையில் இதற்கு முன் நேர்ந்திராத பதற்றமும் பீதியும் தொற்றிக் கொண்டது. மிகப்பெரிய தற்கொலைப் படையணியைக் கொண்டிருந்த புலிகள் கூட, ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியதில்லை.
ஒரே நாளில் எட்டு வெவ்வேறு இடங்களில் ஒன்பது தற்கொலைக் குண்டுதாரிகள் வெடித்துச்சிதறி ஏற்படுத்திய நாசம் மிகமோசமானது ,. கோரமானது.
அதையடுத்து ஏற்பட்ட பதற்றமான சூழலில் தான், பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு பாதுகாப்பு உதவிகளை வழங்க முன்வந்தன. அவ்வாறு உதவ முன்வந்துள்ள நாடுகளில் சீனா முக்கியமானது.
இலங்கையில் சீனாவுக்கென்று தனியான நலன்கள் உள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என்பன அதன் முக்கியமான கேந்திர நிலைகளாக இருக்கின்றன.
குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தான் முதலில் உதவ முன்வந்தன. அப்போது, சீனா பதுங்கிக் கொண்டது.
இலங்கையில் அமெரிக்க, பிரித்தானிய புலனாய்வாளர்கள் குவியத் தொடங்கிய பின்னரே, சீனா விழித்துக் கொண்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்தித்தார் சீனத் தூதுவர் செங் ஷியுவான். அமெரிக்க, இந்திய, பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினரின் பிரசன்னங்களால் சீனாவின் திட்டங்கள் நலன்களுக்கு ஆபத்து இருப்பதாக, ஜனாதிபதியிடம் அவர் கவலையை வெளியிட்டார்.
அதற்கு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த சீனத் தூதுவர் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எழுதியிருந்த கடிதம்.
ஆசிய நாகரீகங்களின் கலந்துரையாடல் என்ற மாநாடு, பீஜிங்கில் மே15 ஆம் திகதி ஆரம்பமாவதாக இருந்தது. ஏனைய உலகத் தலைவர்களைப் போலவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பெப்ரவரி மாதம் வழங்கப்பட்ட இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்த ஜனாதிபதி, அதற்கான திகதியை உறுதிப்படுத்தியிருக்கவில்லை.
இந்த நிலையில் தான், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கொடுத்தனுப்பிய கடிதத்தில் அவசியம் அந்த மாநாட்டுக்கு வருமாறு கேட்டிருந்தார்.
அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கடந்த 14ஆம் திகதி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்தித்தார். 2600 மில்லியன் ரூபா உதவியை வழங்குவதாகவும் அறிவித்தார் அவர்.
பொலிஸாரின் தேவைக்காக, 50 வாகனங்களை சீனாவிடம் கேட்கச் சென்ற ஜனாதிபதி, 100 வாகனங்களைக் கேட்டார். அதற்கும் உடன்பட்டார் சீன ஜனாதிபதி.
அந்தச் சந்திப்பின் பின்னர், ஒரு பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதும், புலனாய்வு தகவல்களை சீனாவும் இலங்கையும் பரிமாறிக் கொள்வதும், அந்த உடன்பாட்டின் முக்கியமான அம்சம்.
அத்துடன், இலங்கையில், இணைய வழியிலான தகவல் பரிமாற்றங்களை தடுப்பதற்கான உதவிகளையும் சீனா வழங்கவுள்ளது. இதற்கென நவீன கருவிகள் மற்றும் நிபுணர்களையும் அனுப்பி வைக்கவுள்ளது சீனா.
சீன புலனாய்வாளர்களே இங்கு வரவுள்ளனர் என்றும், அவர்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்கவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
குறிப்பாக கொழும்பு நகர், துறைமுக நகர், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நவீன கண்காணிப்பு வலயத்தை உருவாக்குவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது,. அதற்கு இலங்கை அரசாங்கமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
2600 மில்லியன் ரூபா உதவி, தொழில்நுட்ப உதவி, நெருங்கிய இராணுவ ஒத்துழைப்பு, கண்காணிப்பு வசதி, 100 ஜீப் வண்டிகள் போன்ற சலுகைகளை வைத்துக் கொண்டு, இலங்கையில் காலடி வைப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது சீனா.
ஆனால், சீன புலனாய்வாளர்கள் நிலைகொள்ளவிருப்பது பற்றிய தகவல்களை மறுத்திருக்கின்ற சீன தூதரக பேச்சாளர் இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாடு இரகசியமான ஒன்று அல்ல எனவும், பாதுகாப்புக் கருவிகள் விநியோகம் மற்றும் இராணுவத்தினருக்கான பயிற்சிகள் போன்ற அடிப்படை காரணிகளை மாத்திரமே அது உள்ளடக்கியிருப்பதாகவும், கூறியிருக்கிறார்.
எவ்வாறாயினும், இலங்கையில் அமெரிக்க, இந்திய தலையீடுகள் குறித்து பொருமிக் கொண்டிருந்த சீனாவுக்கு 1987இல் நெல்லியடியில் கப்டன் மில்லர் வெடிக்க வைத்த குண்டு லொறி இந்தியாவுக்கு எப்படி ஒரு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தியதோ அதேபோன்ற சூழலை 21/4 குண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
சீனா அதனைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கையில் தனது புலனாய்வாளர்களை நிறுத்த முற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி, சீனா தனது திட்டங்களைப் பாதுகாப்பதற்கு சொந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவும் விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,
இது கிட்டத்தட்ட, ஏடன் வளைகுடாவில் பயணிக்கும் சீன கப்பல்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள சீன கடற்படைக் கப்பல்களின் வசதிக்காக என்று கூறிக்கொண்டு, டிஜிபோட்டியில் தனது கடற்படைத் தளத்தை அமைத்துக் கொண்டதற்கு ஈடானது.
இலங்கையில் சீனா தனது திட்டங்களின் பாதுகாப்புக்கென்று தனது ஆளணியை நிறுத்த முயன்றால் அது நிச்சயமாக 1987இல் இந்தியப் படைகளின் இலங்கை வருகையுடன் ஒப்பீடு செய்யக் கூடியதொரு விடயமாகத் தான் இருக்கும்.